ஸ்டாலின் பேசுவது அரசியல் அநியாயம்: அண்ணாமலை விமர்சனம்
"ஆட்சிக்கு வந்த 33 மாதங்களில் என்ன செய்தோம் என முதல்வர் ஸ்டாலின் பேசுவதில்லை. அதைச் சொல்லாமலேயே வாக்கு சேகரித்து வருகிறார். இதுபோன்ற அநியாயத்தை அரசியல் வரலாற்றில் பார்த்ததில்லை" என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் பா.ஜ., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
பிரதமர் மோடியின் சிந்தனையை செயல்படுத்தக் கூடிய ஒரு எம்.பி,. வரவேண்டும். வளர்ச்சி என்று மோடி கூறினால், இங்கு இந்த வளர்ச்சி வரவேண்டும். புதிதாக தொழிற்சாலைகள் வரவேண்டும் என்றால், இங்கு தொழிற்சாலைகள் வரவேண்டும்.
லோக்சபா தேர்தலில் 39 இடங்களில் தி.மு.க., கூட்டணி போட்டியிடுகிறது. ஆட்சிக்கு வந்த 33 மாதங்களில் என்ன செய்தோம் என முதல்வர் ஸ்டாலின் பேசுவதில்லை. அதைச் சொல்லாமலேயே வாக்கு சேகரித்து வருகிறார். இதுபோன்ற அநியாயத்தை அரசியல் வரலாற்றில் பார்த்ததில்லை.
தி.மு.க., தனது ஆட்சியில் சரிபாதியை கழித்திருக்கிறது. தேர்தல் பிரசாரத்தில் பேசும் தி.மு.க., அமைச்சர்கள், 'பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு கொடுக்கும் ஆயிரம் ரூபாயை நிறுத்திவிடுவார்கள்" என பொய் பேசுகின்றனர். அந்த உரிமைத்தொகை கூட 100 பேரில் 30 பெண்களுக்குத் தான் கிடைக்கிறது.
நாங்களும், மகளிர் உரிமைத்தொகையை 1,500 ரூபாயாக உயர்த்திக் கொடுப்போம் என சொல்வோம். வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது என பொய்ப் பிரசாரம் செய்கின்றனர்.
இன்னொரு கட்சி, 'மகளிர் உரிமைத் தொகையை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்திக் கொடுக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்' என்கிறது. பிறகு, நாங்கள் எதற்கு இருக்கிறோம். மக்களை முட்டாள்களாக நினைத்து எவ்வளவு நாள்கள் பேசுவார்கள் எனத் தெரியவில்லை.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
வாசகர் கருத்து