பா.ஜ.,வில் இணைந்த கேரள முன்னாள் முதல்வர் மகள்: பின்னணி என்ன?

கேரள மாநில முன்னாள் முதல்வர் கருணாகரனின் மகளும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான பத்மஜா, பா.ஜ.,வில் இணைந்துள்ளார்.
கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வராக இருந்தவர், கருணாகரன். இவரது மகள் பத்மஜா, நேற்று டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில் கேரள மாநில பொறுப்பாளர் பிரகாஷ் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார்.
பின், நிருபர்களிடம் பத்மஜா கருணாகரன் கூறியதாவது:
பா.ஜ.,வில் நான் இணைய வேண்டிய சூழலுக்கு தள்ளியது, காங்கிரஸ் தான். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திருச்சூரில் போட்டியிட்ட போது காங்கிரஸ் என்னை தோற்கடித்தது. எனக்கு எதிராக நிறைய பேர் வேலை செய்துள்ளனர்.
இது தொடர்பாக கட்சி தலைமையிடம் பலமுறை புகார் அளித்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எந்தவித நிபந்தனையும் இல்லாமல் நான் பா.ஜ., வில் இணைந்துள்ளேன். அவர்கள், என்னை லோக்சபா தேரதலில் போட்டியிட சொல்லி வற்புறுத்தவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்
கேரள முதல்வராக இருந்த ஏ.கே.ஆன்டனியின் மகன் அனில் ஆன்டனி பா.ஜ.,வில் இணைந்து, லோக்சபா தேர்தலில் பத்தனம்திட்டா தொகுதியில் போட்டியிட இருக்கிறார். தற்போது பத்மஜாவும் பா.ஜ.,வில் இணைந்துள்ளது, கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்து