ஐ.டி., அதிகாரிகள் சோதனை: அரசியல் கட்சியினர் 'திக்... திக்'
கடந்த, இரு நாட்களுக்கு முன், திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சமீபத்தில் அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,வுக்கு தாவிய சீனிவாசனுக்கு சொந்தமான இடத்தில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் பதுக்கப்பட்டு வருவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.
ஆனால், பறக்கும் படையினர் செல்லவில்லை. இதையறிந்து கோவையில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், குழுவாக சென்று, மூன்று மணி நேரத்துக்கு மேலாக அவரது வீட்டில் சோதனை செய்தனர். 11 லட்சம் ரூபாய், ஏழு ஆவணங்களை கைப்பற்றி சென்றனர். தேர்தல் நேரத்தில், வருமான வரித்துறை அதிகாரிகளின் திடீர் ஆய்வு மூலம், பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது அவர்கள் கூறியதாவது:
சம்பந்தப்பட்ட நபரிடம் அதிகளவில் பணப்புழக்கம் இருந்தது. அவர் வாயிலாக, ஆளுங்கட்சி வி.ஐ.பி.,களுக்கு மாதந்தோறும் மதுக்கடை வசூல் கொடுக்கப்படுகிறது.
இந்த சோதனையில், போலீசாரின் உதவியைக் கூட, அதிகாரிகள் மறுத்து விட்டனர். தேர்தல் பறக்கும் படையினர் தம் கடமையை செய்யாததால், வருமான வரித்துறை அதிகாரிகள் களம் இறங்க வேண்டியதாயிற்று.
இதனால், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் பீதியில் உள்ளனர். பணப்பட்டுவாடாவுக்கு, கட்சியில் பொறுப்புகளில் இருப்போரைக் காட்டிலும், கட்சியில் இல்லாமல், மேல்மட்டம் வரை தொடர்பில் உள்ளோரே நம்பிக்கைக்கு உரியவர்கள். அதனால், கட்சியினருடன் நெருக்கமாக உள்ள பணப்புள்ளிகள் குறித்து கண்காணிப்பு தீவிரமாகியுள்ளது.
சமீபத்தில் நீலகிரியில் எம்.பி., ராஜாவின் காரை முறையாக சோதனையிடாத பறக்கும் படை அதிகாரி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இதனால், புகார் வந்தும் முறையாக சோதனையிடாத தங்கள் மீதும் நடவடிக்கை பாய்ந்துவிடுமோ என்று பறக்கும் படை அதிகாரிகளிடமும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து