எந்த வண்டியில் ஏறப்போகுது பா.ம.க.,? அப்பா - மகன் மோதலால் குழப்பம்

லோக்சபா தேர்தலில் வலுவான கூட்டணி அமைப்பதில் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., கட்சிகள் தீவிரமாக உள்ளன. தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில நாட்களே இருக்க, கூட்டணியை இறுதி செய்வதில் முனைப்பு காட்டுகின்றன.

தி.மு.க., கூட்டணியில், கடந்த தேர்தலில் இருந்த கட்சிகளே இப்போதும் தொடர்கின்றன. இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர், தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகி, பா.ஜ., கூட்டணியில் இணைந்துள்ளார். அவருக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியை, கூட்டணியில் புதிதாக இணையும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்க தி.மு.க., தலைமை முடிவெடுத்துள்ளது.

தி.மு.க., கூட்டணியில், ஒரு சில தொகுதிகளுக்காக காங்கிரசும், வி.சி.,யும் முரண்டு பிடித்தாலும், கொள்கை ரீதியில் தி.மு.க., கூட்டணியை விட்டு வேறுபக்கம் போக முடியாது. எனவே, கடைசி நேரத்தில் பெரிய சிக்கல் எதுவும் இல்லாமல் கூட்டணியை இறுதி செய்துவிடலாம் என தி.மு.க., தலைமை 'கூலாக' உள்ளது.

அதே நேரம், கூட்டணியில் வலுவான கட்சிகள் இல்லாததால் அ.தி.மு.க.,வும் பா.ஜ.,வும் சிறு கட்சிகளை துரத்திச் செல்கின்றன. அந்த வகையில், பெரிய ஓட்டு வங்கி இல்லாத தே.மு.தி.க.,வைத் தேடிச் சென்ற அ.தி.மு.க., இரண்டாம் கட்ட தலைவர்கள், நான்கு தொகுதிகள், ஒரு ராஜ்யசபா தொகுதி தருவதாக பேசியுள்ளனர்.

பா.ஜ., கூட்டணியில், நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகளை விட்டுக் கொடுக்க முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., கட்சிகள் பக்கம் பா.ம.க., அதிக அளவில் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.க., பக்கம் தான் செல்ல வேண்டும் என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் விரும்பினாலும், அதற்கு கட்சி தலைவர் அன்புமணி சம்மதம் தெரிவிக்காததால், கூட்டணியை இறுதி செய்வதில் இழுபறி இருக்கிறது என அக்கட்சியினரே கூறுகின்றனர்.

இதுகுறித்து, அக்கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

பா.ஜ., தான் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வரும் சூழல் உள்ளது. அதனால், அக்கூட்டணியில் இடம்பெற்று எத்தனை தொகுதிகளை வென்றாலும், எதிர்காலம் சிறப்பாக இருக்கும். ஒருவேளை, தோல்வி அடைந்தாலும், ராஜ்யசபா எம்.பி., பதவியை வைத்து, மத்திய அமைச்சராகி விடலாம் என கணக்கு போடும் அன்புமணி, அதை நோக்கி பார்வையை திருப்பி உள்ளார்.

அதேநேரம், அ.தி.மு.க.,வோடு இருந்தால், 'சீட்'களோடு, வேறு சில சலுகைகளும் தாராளமாக கிடைக்கும். சட்டசபை தேர்தலின் போதும் உதவலாம் என்பது ராமதாசின் கணக்காக உள்ளது. இந்த விஷயத்தில் ராமதாஸின் வலுவான வாதத்துக்கு முன், அன்புமணியின் வாதம் பெரிய அளவில் எடுபடவில்லை.

இருவரும் தங்கள் கருத்தில் உறுதியாக இருப்பதால், பா.ம.க., எந்த கூட்டணியில் இடம்பெறப் போகிறது என்ற குழப்பம் கட்சி தொண்டர்களிடம் நிலவுகிறது.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, உத்தேச வேட்பாளர் பட்டியலுடன் டில்லி சென்றுள்ளார். வரும் 8ம் தேதி சென்னை வருகிறார். அதன்பின், அவரோடு பா.ம.க., தரப்பில் பேச உள்ளனர்.

அதில் சுமுகமான முடிவு எட்டப்பட்டால், பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., இணைவது உறுதியாகும். இல்லையேல், ராமதாசின் எண்ணப்படி, இம்முறை அ.தி.மு.க.,வோடு தான் பா.ம.க., கூட்டணி.

இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்