யாரந்த அய்யா ஓ.பி.எஸ்.,? குழப்பம் ஏற்படுத்தும் போஸ்டர்
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், பா.ஜ., கூட்டணி சார்பில் ராமநாதபுரம் தொகுதியில், சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவரை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக, எதிர் தரப்பினர் அவரது பெயரில் ஐந்து வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளனர்.
பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் பெயரில் உள்ள மற்ற வேட்பாளர்களுக்கு, திராட்சை பழம், வாளி, கரும்பு விவசாயி, பட்டாணி, கண்ணாடி டம்ளர் போன்ற சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், பலாப்பழம் சின்னத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்துள்ளனர். இதில் குழப்பம் ஏற்படுத்த, அவர் பெயரிலான மற்ற வேட்பாளர்கள், 'அய்யா ஓ.பி.எஸ்.,சுக்கு வாக்களியுங்கள்' எனக் கூறி தங்கள் சின்னம் அச்சிடப்பட்ட சுவரொட்டிகளை, தொகுதியில் ஒட்டியுள்ளனர்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை, அவரது ஆதரவாளர்கள் ஓ.பி.எஸ்., என அழைப்பதால், தங்கள் சுவரொட்டியில், அய்யா ஓ.பி.எஸ்.,சுக்கு வாக்களியுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், 'ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், பலாப்பழம் சின்னத்தில் வாக்களிக்க, 22வது பொத்தானை அழுத்துங்கள்' என, பிரசாரம் செய்ய துவங்கி உள்ளனர்.
குழப்பத்தை ஏற்படுத்தும் மற்ற பன்னீர்செல்வம் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
வாசகர் கருத்து