ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்னை ஒரு லட்சம் ஓட்டுகள் யாருக்கு?
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மற்றும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலைச் சுற்றியும், இரு கோவில்களுக்கு அருகிலும் 25,000த்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்த குடியிருப்புகள் அனைத்தும், 300 ஆண்டுகளுக்கு முன் கோவில் நிலங்களாக இருந்தவற்றில் அமைந்துள்ளன. அதன்பின் காலப்போக்கில், அந்த இடங்கள் தனியார் வசமாயின. இப்படியாக, ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் கோவில்களின், 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் தற்போது தனியாரிடம் உள்ளன.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீரங்கம் கோவிலைச் சுற்றியுள்ள ஏழு பிரகாரப் பகுதிகளிலும், அருகிலும், கோவில் நிலத்தில் குடியிருப்போரை, வாடகைதாரராகவோ, குத்தகைதாரராகவோ மாறிக்கொள்ள, கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியது. மேலும், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் 350 ஏக்கர் நிலத்தில், எவ்வித பத்திரப் பதிவும் செய்யக்கூடாது என்று, ஸ்ரீரங்கம் பத்திரவுப்பதிவு அலுவலகத்துக்கு கோவில் நிர்வாகம் கடிதமும் கொடுத்தது.
இதனால், அப்பகுதியில் புதிய பத்திரப்பதிவுகள், இடம், வீடு விற்பனை ஆகியவை எதுவும் நடக்கவில்லை. இந்த அடிமனைப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., என்று இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் கோரிக்கை விடுத்து களைத்து போய் விட்டனர்.
தற்போது, திருவானைக்காவல் கோவில் நிர்வாகமும், கோவில் நிலங்களுக்கு பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று கடிதம் அனுப்பி உள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள 8,000த்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சிக்கலில் உள்ளனர். ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவலில் அடிமனைப் பிரச்னையால், 30,000த்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்விரு பகுதிகளில் மட்டும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் உள்ளன.
தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகள் இப்பிரச்னையை தீர்க்காததால், அப்பகுதி மக்கள் தற்போது பா.ஜ.,வை நாடியுள்ளனர். தேர்தல் முடிந்த பின், பிரச்னையைத் தீர்க்க அரசு மூலமாகவோ, நீதிமன்றம் மூலமாகவே முயற்சிப்போம் என்று, பா.ஜ., தரப்பில் அதன் நிர்வாகிகளும் உறுதி அளித்துள்ளனர்.
இதையடுத்து, இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வரும் தேர்தலில், பா.ஜ., கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர். இது, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சி நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
வாசகர் கருத்து