சின்னத்தை முடக்கியது, திட்டமிட்ட செயல் : சீமான் கொதிப்பு
கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை இன்று (மார்ச் 4) நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தார்.
சந்திப்புக்குப் பின் சீமான் கூறியதாவது:
கர்நாடகாவை சேர்ந்த ஒரு கட்சி, கடந்த இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு 71 ஓட்டுகளைப் பெற்றுள்ளது. அதே கட்சி, கர்நாடகாவில் எரிவாயு உருளை சின்னத்தையும் ஆந்திராவில் எரிவாயு அடுப்பு சின்னத்தையும் பெற்றிருக்கிறது. கரும்பு விவசாயி சின்னத்தை தாங்கள் கேட்கவில்லை என அக்கட்சியின் தலைவரும் கூறியிருக்கிறார். தேர்தல் ஆணையமே கொடுத்ததாக கூறுகிறார்.
அவர்களுக்கு தமிழகம், புதுச்சேரி உள்பட 11 மாநிலங்களுக்கும் சேர்த்து கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியுள்ளனர். தமிழகத்தில் உள்ளாட்சி, சட்டசபை, லோக்சபா என அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு 7 சதவீத ஓட்டுகளை பெற்றிருக்கிறோம். அப்படிப் பார்த்தால், தி.மு.க., அ.தி.மு.க.,வுக்கு பிறகு நாம் தமிழர் கட்சி தான். அதை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நிர்ணயித்திருந்த காலஅளவுக்குள் விண்ணப்பித்தோம். மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கிய பிறகு தான், கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு சென்ற விஷயமே தெரியவந்தது.
ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி தான் கர்நாடகாவை சேர்ந்த அந்தக் கட்சி மனு கொடுத்திருக்கிறது. கடந்த தேர்தலில் தேர்தல் தேதி அறிவித்த பிறகு எங்களுக்கு சின்னத்தை ஒதுக்கினர். இந்தமுறை தேர்தல் தேதியே அறிவிக்கவில்லை. அதற்குள் சின்னத்தை ஒதுக்கிவிட்டனர். இது திட்டமிட்ட செயல்.
இவ்வாறு சீமான் பேசினார்.
வாசகர் கருத்து