'மைக்' சின்னத்திலும் கோல்மால்: கமிஷனில் நாம் தமிழர் கட்சி புகார்
'ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், எங்களுக்கு ஒதுக்கப்பட்ட 'மைக்' சின்னத்திற்கு பதிலாக, வேறு 'மைக்' சின்னம் பொருத்தப்படுகிறது. அதை தடுத்து எங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தை பொருத்த வேண்டும்' என, நாம் தமிழர் கட்சி சார்பில், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியிடம், மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளிலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள், 'மைக்' சின்னத்தில் போட்டியிடுகின்றனர். ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளர் பெயர், சின்னம் அச்சிடப்பட்ட, ஓட்டுச்சீட்டு பொருத்தும் பணி, நேற்று துவங்கியது. இதில் நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னத்திற்கு பதிலாக, வேறு 'மைக்' சின்னத்தை அச்சிட்டு பொருத்தி உள்ளனர். இதற்கு நாம் தமிழர் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அக்கட்சி வழக்கறிஞர் அணி மாநில செயலர் சங்கர், நேற்று தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை சந்தித்து, புகார் மனு அளித்தார்.
பின், அவர் கூறியதாவது:
தேர்தல் கமிஷன் எங்கள் கட்சிக்கு ஒதுக்கிய 'மைக்' சின்னத்துக்கு பதிலாக, வேறு ஒரு 'மைக்' சின்னம் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்படுகிறது. அதை தடுத்து நிறுத்தி, தேர்தல் கமிஷன் எங்களுக்கு ஒதுக்கிய, 'மைக்' சின்னத்தை பொருத்த வேண்டும்.
எங்கள் ஓட்டு வங்கியில் பாதிப்பு ஏற்படுத்த, பா.ஜ., இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. ராஜஸ்தானை சேர்ந்த தனியார் நிறுவனம், தேர்தல் கமிஷனுக்கு இலவசமாக சின்னங்கள் புத்தகத்தை அச்சடித்து கொடுக்கிறது.
ஹிமாச்சல் பிரதேசத்தில், 2021ம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட, அந்த புத்தகத்தை பார்த்து, அதிலிருந்த 'மைக்' சின்னத்தை, நாம் தமிழர் கட்சிக்கு பொருத்தி உள்ளனர். தேர்தல் கமிஷன் ஒதுக்கிய, 'மைக்' சின்னத்தில் 'ஆன், ஆப்' பொத்தான் இருக்காது. இப்போது ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்படும், 'மைக்' சின்னத்தில், 'ஆன், ஆப்' பொத்தான் உள்ளது.
இது நாம் தமிழர் கட்சி ஓட்டு வங்கியை பாதிக்கும். எனவே, உடனடியாக எங்களுக்கு ஒதுக்கப்பட்ட, 'மைக்' சின்னத்தை, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பொருத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து