பவுடர் அடிச்சி பளபளன்னு இருக்கீங்களே...1000 ரூபா வந்துச்சா: கதிர் ஆனந்த் நக்கல்
குடியாத்தத்தில், வேலுார் லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் கதிர் ஆனந்த், ஓட்டு கேட்டு சென்ற போது, பெண்களை பார்த்து, 'பவுடர் அடித்து பளபளவென இருக்கிறீர்களே... 1,000 ரூபாய் பேசுதா...' என, நக்கலாக பேசியது தொடர்பான வீடியோ பரவி வருகிறது.
வேலுார் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, வேலுார் மாவட்டம், குடியாத்தம் காந்தி நகர் மற்றும் கே.வி.குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் திறந்த வேனில் பொதுமக்களிடம் கதிர் ஆனந்த் ஓட்டு கேட்டார்.
அப்போது கூட்டத்தில் நின்றிருந்த பெண்களை பார்த்து, 'எல்லாம் பேர் அண்டு லவ்லி, பாண்ட்ஸ் பவுடரு, சிங்கார் குங்குமம்... பளபளன்னு இருக்கீங்க.. என்னானு தெரியல... இன்னா காரணம்... ஆயிரம் ரூவா வந்துச்சா... அதான்' என்றார்.இந்த வீடியோ பரவி, பெண்களிடம் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், வேட்பாளர் கதிர் ஆனந்த், தன் 'இன்ஸ்டா'வில் விளக்கம் அளித்துள்ளார்
.அதில், எடிட் செய்த வீடியோவும், எடிட் செய்யப்படாத வீடியோவும் இடம் பெற்றுள்ளது. அதோடு, 'தோல்வி பயத்தில் வீடியோவை தவறாக சித்தரித்து பரப்பும், மோடி மீடியா' என்று பதிவிட்டுள்ளார்.மேலும், அப்பகுதியில் கதிர் ஆனந்த் ஓட்டு கேட்டு பேசும்போது, ''குடியாத்தம் பகுதியில், ரிங்ரோடு அமைக்க, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கேட்டேன்.
அதற்கு அவர் மறுத்தார். நான் அப்போது, லோக்சபாவிலேயே தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டி இங்கு, 211 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரிங்ரோடு கொண்டு வந்தேன்,'' என்றார்.
இது பற்றி தி.மு.க.,வினர் கூறியதாவது:
ஏற்கனவே கதிர் ஆனந்தின் செயல்பாடுகளால் தொகுதியில் அவருக்கு நல்ல பெயர் இல்லை. அவரை ஜெயிக்க வைக்க, அவரது தந்தை துரைமுருகன் கண்ணீர் விட்டு கதறி வருகிறார். இந்நிலையில், பிரசாரத்தில் பேசிய கதிர் ஆனந்த் நாகரிகமில்லாமல், பெண்களை கிண்டல் செய்துள்ளதை, தி.மு.க.,வினரே ரசிக்கவில்லை.இனியும் கதிர் ஆனந்த், தன் போக்கையும், பேச்சையும் மாற்றிக் கொள்ளாவிட்டால், தி.மு.க.,வினரே அவருக்கு ஓட்டு போட மாட்டார்கள்.
இவ்வாறு கூறினர்.
வாசகர் கருத்து