'டாஸ்மாக்' கடைகள் மூடல் எதிரொலி: தொண்டர்களுக்கு பேட்டா இரு மடங்கு உயர்வு

வேட்பாளர்கள் தங்களது தொண்டர்களின் தாக சாந்திக்காக, 3 நாட்களுக்கு மட்டும், 21 கோடி ரூபாய் செலவிடும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் லோக்சபா தேர்தல், 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.

முதல்கட்ட ஓட்டுப்பதிவுக்கான அனல் பறக்கும் பிரசாரம், நேற்று மாலை 6:00 மணியுடன் ஓய்வடைந்தது. சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல், தொண்டர்களுடன் இணைந்து தலைவர்கள் வீதியில் இறங்கி ஓட்டு சேகரித்தனர்.

அதிர்ச்சியான தொண்டர்கள்



தமிழகத்தின் 39 லோக்சபா தொகுதிகளில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தி.மு.க., தலைமையிலான இண்டியா கூட்டணி, அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுக்கு இடையே நான்குமுனை போட்டி நிலவுகிறது. மேலும், நம்பிக்கையை மட்டுமே மூலதனமாக கொண்டு சுயேச்சை வேட்பாளர்களும் களமிறங்கி உள்ளனர்.

குறிப்பாக, பிரதான கூட்டணிகளின் வேட்பாளர்கள் தங்களது கட்சியினரை மட்டுமல்லாமல், கூட்டணி கட்சி தொண்டர்களையும் பிரசாரத்துக்கு அழைத்து சென்றனர். தினசரி 200 முதல், 300 பேருடன் இருசக்கர வாகனங்களில் வலம் வந்து பிரசாரத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு பெட்ரோல், பிரியாணி, குவார்ட்டர் கொடுத்துஅசராமல் ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர்.

இதற்காக, குவார்ட்டருக்கு 150 ரூபாய், பெட்ரோலுக்கு 150 ரூபாய் என 300 ரூபாயும், மதியம் சிக்கன் பிரியாணி பொட்டலமும் வழங்கினர். இந்நிலையில், 17, 18 ஆகிய தேதிகள், ஓட்டுப்பதிவு நாளான 19ம் தேதி ஆகிய 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குவார்ட்டர், பிரியாணி என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் தொண்டர்கள், டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டதால், அதிர்ச்சி அடைந்துள்ளனர். டாஸ்மாக் கடையில் கிடைத்த 150 ரூபாய் குவார்ட்டர், கள்ளச்சந்தையில் 300 ரூபாய்க்கு தாராளமாக விற்பனையாகிறது.

இதன் காரணமாக, வழக்கமாக குவார்ட்டருக்கு கொடுத்த 150 ரூபாய்க்கு பதிலாக, 300 ரூபாய் என இருமடங்காக பேட்டாவை உயர்த்தி தர வேண்டிய கட்டாயத்திற்கு வேட்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தொண்டர்களின் தாக சாந்திக்காக, வேட்பாளர்களுக்கு இரட்டிப்பு செலவு ஏற்பட்டுள்ளது.

இதன்படி, மூன்று பிரதான கூட்டணியிலும் உள்ள வேட்பாளர்கள் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தோராயமாக 300 பேர் வீதம், 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய லோக்சபா தொகுதிக்கு 1,800 முதல் 2,000 தொண்டர்களுக்கு 150 ரூபாய்க்கு பதிலாக 300 ரூபாய் செலவிட வேண்டியது உள்ளது.

மூன்று கூட்டணியிலும் சேர்த்து 6,000 தொண்டர்களுக்கு சரக்கிற்கான பேட்டாவை உயர்த்தி, தலா 300 ரூபாயை நேற்று வழங்கினர்.

மதுவுக்கு ரூ.21 கோடி



அதாவது, ஒரு லோக்சபா தொகுதிக்கு நாளொன்றுக்கு 150 ரூபாய் வீதம் 6,000 பேருக்கு, 9 லட்சம் ரூபாய் வரை டாஸ்மாக் மதுவுக்கு செலவிடப்பட்டது. தற்போது, ஒரு லோக்சபா தொகுதிக்கு 18 லட்சம் ரூபாய் வரை நாளொன்றுக்கு செலவிடப்படுகிறது.

அதன்படி, மூன்று நாட்களுக்கு ஒவ்வொரு லோக்சபா தொகுதிக்கும் 54 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யப்படுகிறது. இதன் மூலம், தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கு, மூன்று நாட்களுக்கு தலா 54 லட்சம் என கணக்கிடும்போது, தோராயமாக 21 கோடியே 6 லட்சம் ரூபாய் வரை மதுவுக்காக செலவிடப்படும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்