அரசியலில் இருந்தே விலகத் தயார்: தி.மு.க.,வுக்கு அண்ணாமலை சவால்
"கோவை தொகுதியில் ஓட்டுக்குப் பணம் கொடுத்ததை நிரூபித்தால் அரசியலில் இருந்தே விலகிவிடுகிறேன்" என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை லோக்சபா தேர்தலில் தி.மு.க., சார்பில் கணபதி ராஜ்குமாரும் அ.தி.மு.க., வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரனும் பா.ஜ., வேட்பாளராக அண்ணாமலையும் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில், பா.ஜ., சார்பில் வாக்காளர்களுக்கு ஜிபே வாயிலாக பணம் கொடுக்கப்படுவதாக தி.மு.க. குற்றம் சுமத்தியது.
இது குறித்து தி.மு.க., சார்பில் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்ட புகார் மனுவில், "கோவை அவிநாசி சாலையில் உள்ள ஓர் அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்கியுள்ளனர். பா.ஜ.,வை சேர்ந்த இவர்கள் வாக்காளர்களுக்குப் போன் செய்து ஜிபே மூலம் பணம் விநியோகம் செய்து வருகின்றனர்.
சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார் மற்றும் கரூரை சேர்ந்த சிவக்குமார் ஆகியோர் பணப்பட்டுவாடா பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது தேர்தல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தி.மு.க.,வின் குற்றச்சாட்டுக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். கரூரில் உள்ள ஊத்துப்பட்டி வாக்குச்சாவடியில் ஓட்டு போட்ட பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
என்னுடைய ஒரே வேண்டுகோள். எங்கு இருந்தாலும் இன்று மாலைக்குள் மக்கள் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். நாட்டில் நல்ல ஆட்சி மலர வாக்கு செலுத்த வேண்டும். மிக நேர்மையாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.
கோவையில் பா.ஜ., சார்பில் ஓட்டுக்குப் பணம் கொடுக்கப்பட்டதாக நிரூபித்தால் அரசியலில் இருந்தே விலகி விடுகிறேன். பணத்தை வைத்து இந்த தேர்தலில் வென்றுவிடலாம் என தி.மு.க., நினைக்கிறது. இந்த தேர்தல் பண அரசியலுக்கு முடிவு கட்டுவதாக இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாசகர் கருத்து