தே.ஜ., கூட்டணி ஆட்சி சந்திரபாபு, நிதீஷ்-ஐ நம்பி இருக்கிறதா?
புதுடில்லி: பீஹார் முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் ஆந்திர முதல்வராக உள்ள சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு ‛ இண்டியா' கூட்டணி அழைப்பு விடுத்து இருந்தாலும், அவர்கள் தே.ஜ., கூட்டணியை விட்டு வெளியேறுவது சந்தேகமே என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
லோக்சபா தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. பா.ஜ., மட்டும் தனித்து 240 இடங்கள் கிடைத்து உள்ளது. சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 16 தொகுதிகளும், நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 12 இடங்களும் கிடைத்தன. மொத்தத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 292 இடங்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் பா.ஜ., கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
அதேநேரத்தில் ‛ இண்டியா ' கூட்டணிக்கு 232 தொகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளது. இக்கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசி முடிவு செய்யப்படும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியிருந்தார். இதற்கு முன்பு, நிதீஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவுடன் ‛ இண்டியா ' கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் முயற்சி செய்ததாக தகவல் வெளியானது. இதனை சரத்பவார் மறுத்துள்ளார். அதேநேரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் நீடிக்கிறேன் என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
ஒரு வேளை சந்திரபாபுவும், நிதீஷ்குமாரும் ‛ இண்டியா' கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தால் நிலை என்ன ஆகும். தற்போது இவ்விரு கட்சிகளுக்கும் மொத்தம் 28 எம்.பி.,க்கள் உள்ளனர். தேஜ கூட்டணிக்கு 292 உள்ளனர். இரு கட்சிகளும் கூட்டணியில் இருந்து விலகினால், தேஜ கூட்டணியின் பலம் 264 ஆக குறையும். ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை. இதனால் மற்றவர்களின் ஆதரவை நாட வேண்டிய சூழ்நிலை பா.ஜ.,வுக்கு உருவாகும்.இந்த தேர்தலில் சுயேச்சைகள் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
அவர்களில் 5 பேரின் ஆதரவை பா.ஜ.,வுக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சந்திரபாபு விலகும் பட்சத்தில் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் தேஜ கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வாய்ப்பு உள்ளது. அவரது கட்சிக்கு 4 எம்.பி.,க்கள் உள்ளனர். இதன் மூலம் சுயேச்சைகள் மற்றும் ஜெகன் மோகன் கட்சி எம்.பி.,க்களை சேர்த்து 9 பேர் பா.ஜ.,வுக்கு ஆதரவு தருவதன் மூலம் கூட்டணி பலம், 273 ஆக அதிகரிக்கும்.
இதன் மூலம் தேஜ கூட்டணி எளிதாக ஆட்சி அமைக்கும் சூழல் உள்ளது. இதனை தவிர்த்து தலா ஓரு எம்.பி., வைத்துள்ள அகாலி தளம் மற்றும் காஷ்மீரில் உள்ள ஒரு மாநில கட்சி பா.ஜ.,வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்து உள்ளன.
இது தொடர்பாக அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது: இந்த நிலவரம் அனைத்தும் சந்திரபாபு நாயுடுவுக்கும், நிதீஷ் குமாருக்கும் நன்கு தெரியும். இதனால், தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகுவது என்ற மிகவும் தவறான முடிவை அவர்கள் எடுக்க மாட்டார்கள். மாறாக கூட்டணியில் நீடிக்க பா.ஜ.,வுடன் பேரம் பேசவே செய்வார்கள்.
இதனுடன், லோக்ஜனசக்தி, ஜனசேனா கட்சியை கூட்டணிக்கு அழைத்து வந்து தே.ஜ. கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் பா.ஜ., ஈடுபடும். 1984 க்கு பிறகு, தொடர்ந்து இரண்டு முறை (2014 மற்றும் 2019)பெரும்பான்மை பெற்ற ஒரே கட்சி பா.ஜ., மட்டுமே. அடுத்து வரும் 5 ஆண்டுகளையும் பா.ஜ.,வே ஆட்சி செய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து