மோடியிடம் இருப்பது இரண்டே யோசனைகள் தான்: ராகுல் விமர்சனம்
"நாட்டில் உள்ள பெரும் பணக்காரர்களின் கருவியாக மோடி இருக்கிறார். அவர்களின் நலன்களைக் காத்து அவர்களின் கடன்களையும் தள்ளுபடி செய்கிறார்" என, காங்கிரஸ் முன்னணி தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி பேசினார்.
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரசின் ராகுல்காந்தி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இண்டியா கூட்டணியில் உள்ள இ.கம்யூ., சார்பில் ஆனி ராஜாவும் பா.ஜ., கேரள மாநிலத் தலைவர் சுரேந்திரனும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், வயநாட்டில் 2வது நாளாக ராகுல் காந்தி ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியாவை மாற்றி அமைக்கக் கூடிய ஆவணமாக காங்கிரசின் தேர்தல் அறிக்கை உள்ளது. இந்தியாவின் அரசியல் அமைப்பை அழிப்பதற்கு பா.ஜ.,வும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் முயற்சி செய்கின்றன.
இந்த நாட்டின் அரசியல் அமைப்பைக் காப்பதற்கு காங்கிரஸ் போராடிக் கொண்டிருக்கிறது. வேலைவாய்ப்பின்மை நிலவுவது குறித்தோ விலைவாசி உயர்வு குறித்தோ மோடி ஒருநாளும் பேசுவது இல்லை.
நாட்டில் உள்ள பெரும் பணக்காரர்களின் கருவியாக மோடி இருக்கிறார். அவர்களின் நலன்களைக் காத்து அவர்களின் கடன்களையும் தள்ளுபடி செய்கிறார்.
இந்திய மக்களை உண்மையான பிரச்னைகளில் இருந்து திசை திருப்புவதையே நோக்கமாக வைத்திருக்கிறார். இதன் காரணமாக, சில நேரங்களில் அவர் கடலுக்கு அடியில் பூஜை செய்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
அவரிடம் இருப்பது 2 விஷயங்கள் தான். ஒன்று, இந்தியாவில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவோம். அடுத்து, நிலவுக்கு மனிதனை அனுப்புவோம் என்கிறார். ஆனால், வேலையில்லா திண்டாட்டம் இருப்பதைப் பற்றியெல்லாம் அவர் பேச மாட்டார்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக நேற்று நடந்த ரோடு ஷோவில் ராகுல் காந்தி பேசுகையில், "இந்தியா சுதந்திரத்தைப் பெற்றது ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளிடம் ஒப்படைப்பதற்காக அல்ல. இந்தியாவை இந்தியர்கள் அனைவரும் ஆள்வதையே விரும்புகிறோம்.
'ஒரே நாடு ஒரே மக்கள் ஒரே மொழி, ஒரே தலைவர்' என மோடி பேசுகிறார். அவர் அரசியல் அமைப்பை தவறாக புரிந்து வைத்திருக்கிறார். மீண்டும் பிரதமர் மோடி நீருக்குள் சென்றாலும் 'ஒலிம்பிக்கை நடத்துவோம், நிலவுக்கு மனிதனை அனுப்புவோம்' என்பார். ஒருகட்டத்தில் அவரே ராக்கெட்டில் ஏறி நிலாவுக்கு போய்விட்டு சாதித்துவிட்டதாக கூறுவார்" என்றார்.
வாசகர் கருத்து