நான் இருக்கிறேன்; யாரும் ஒன்றும் செய்ய முடியாது: பா.ஜ.,வினருக்கு மோடி கொடுத்த நம்பிக்கை

"காமராஜரை பின்பற்றி பா.ஜ., இன்று நேர்மையான அரசியலை முன்னெடுத்து செல்கிறது. காங்கிரசும் தி.மு.க.,வும் காமராஜரை தொடர்ந்து அவமதித்து வந்திருக்கின்றன. எங்கள் லட்சியம் தூய்மையான அரசியல்" என, பிரதமர் மோடி தெரிவித்தார்.

நெல்லையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் ஆதரித்து மோடி பேசியதாவது:

வரலாற்று பெருமை மிக்க நெல்லையில் இந்த பிரசாரக் கூட்டத்தைப் பார்த்ததும் தி.மு.க.,வுக்கும் காங்கிரஸ் இண்டி கூட்டணிக்கும் தூக்கம் தொலைந்து போயிருக்கும். தமிழ்ப் புத்தாண்டில்தான் தனது தேர்தல் அறிக்கையை பா.ஜ., வெளியிட்டுள்ளது.

அதில், தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக பல நல்ல திட்டங்களைத் தெரிவித்துள்ளோம். ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் 3 கோடி வீடுகள், முத்ரா கடன் திட்டம் என மோடியின் கியாரண்டியை மக்கள் பாராட்டுகிறார்கள்.

மீன் உற்பத்திக்கு கிளஸ்டர் மையங்களை உருவாக்குவதல், மீனவர்களின் முத்து வளர்ப்புக்கு உதவி என பல்வேறு தரப்பினரை ஆலோசித்து அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

நெல்லைக்கு புல்லட் ரயில்'வளர்ந்த தமிழகம் தான் வளர்ந்த பாரதத்தை உருவாக்கும்' என்று தேர்தல் அறிக்கையை சமர்ப்பித்துள்ளோம். கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ., அரசு கடுமையாக உழைத்துள்ளது.

நெல்லை-சென்னைக்கு இடையில் வந்தே பாரத் ஓடிக் கொண்ருக்கிறது. இதனால் இந்தப் பகுதி மக்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். வெகு விரைவில் தெற்கிலும் புல்லட் ரயிலை துவங்க திட்டமிட்டுள்ளோம்.

புதிய அரசு வந்த உடன் அதற்கான பணிகள் துவங்கும். தமிழகத்தில் உள்ள தாய்மார்களும் சகோதரிகளும் மோடியை ஆதரிப்பது குறித்து அனைவரும் ஆச்சர்யப்படுகின்றனர்.

பெருகும் மகளிர் ஆதரவுஅரசியல் நிபுணர்களுக்கு இதற்கான காரணம் புரியவில்லை. மோடிக்கு எப்படி ஆதரவு பெருகுகிறது என சர்வேயை படித்துக் குழம்பிப் போயுள்ளனர்.

இதற்கு காரணம், நான் அவர்களின் சிரமத்தையும் துன்பத்தையும் உணர்ந்து வைத்திருப்பதால் தான். அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். அதனால் தான் 1.10 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் வசதியும் 12 லட்சம் வீடுகளையும் கட்டிக் கொடுத்துள்ளோம். இவையெல்லாம் பெண்களின் பெயர்களின் தான்.

40 லட்சம் குடும்பங்களுக்கு காஸ் இணைப்பு, 57 லட்சம் கழிப்பறைகளைக் கட்டிக் கொடுத்துள்ளோம். கர்ப்பிணி பெண்களுக்கு 800 கோடி ரூபாய்க்கு நிதி உதவி வழங்கியுள்ளோம். இதுவரையில் 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முத்ரா கடன் உதவியை வழங்கியுள்ளோம். இப்படியெல்லாம் சேவை செய்தால் பெண்களின் ஆதரவு ஏன் கிடைக்காது?

தமிழ் கலாசாரத்தை அழிக்க முயற்சிதமிழ் மொழியையும் தமிழ்க் கலாசாரத்தையும் நேசிக்கும் தமிழக மக்கள், பா.ஜ.,வையும் நேசிக்க துவங்கிவிட்டனர். தமிழ் மொழிக்கு உலகின் அங்கீகாரத்தைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளோம். திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என்ற பெயரில் கலாசார மையம் ஏற்படுத்தப்படும்.

தி.மு.க.,வும் காங்கிரசும் எப்படி நடந்து கொள்கின்றன எனப் பாருங்கள். அவர்களின் சிந்தாந்தமே வெறுப்பினாலும் எதிர்ப்பினாலும் உருவாக்கப்பட்டது. அவர்கள் தமிழின் அடையாளத்தையும் பண்பாட்டையும் திராவிடத்தின் பெயரால் அழிக்க நினைக்கிறார்கள்.

செங்கோலாக இருந்தாலும் ஜல்லிக்கட்டாக இருந்தாலும் அதை எப்படி எதிர்த்தார்கள் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும். தென் தமிழகத்தில் உள்ள இந்தப் பகுதியில் வீரமும் தேசப்பற்றும் பொங்குகிறது.

மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார் உள்ளிட்டோர் எவ்வளவு துணிச்சல் மிக்கவர்களாக இருந்தனர். முத்து ராமலிங்க தேவரின் தாக்கத்தால் இந்தப் பகுதியில் இருந்து நேதாஜியின் படைக்கு வீரர்கள் சென்றார்கள்.

காமராஜர் வழியில் பா.ஜ.,இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு அவர்களின் பாஷையில் நாம் பதிலடி கொடுத்து வருகிறோம். நாட்டை நேசிக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் பா.ஜ., தான் பிடித்தமான கட்சியாக இருக்கும். பா.ஜ., எப்போதும் தமிழ் மொழியையும் தமிழ் மக்களையும் நேசிக்கும் கட்சியாக இருக்கிறது.

இம்மக்கள் மீது மாறாத அன்பை பா.ஜ., கொண்டிருக்கிறது. அதனால் தான் தமிழகத்துக்கு வரும் போதெல்லாம் எனக்கு உத்வேகம் கிடைக்கிறது. வ.உ.சி.,யை நினைத்துப் பார்க்கிறேன். அவர் எங்களுக்கு உத்வேகம் கொடுக்கிறார். அதனால் தான் பாதுகாப்புத் துறையில் இந்தியா உத்வேகம் பெற்றுள்ளது.

தேச பக்தியும் நேர்மையும் கொண்ட காமராஜரை பின்பற்றி பா.ஜ இன்று நேர்மையான அரசியலை முன்னெடுத்து செல்கிறது. காங்கிரசும் தி.மு.க.,வும் காமராஜரை தொடர்ந்து அவமதித்து வந்திருக்கிறது. எங்கள் லட்சியம் தூய்மையான அரசியல்.

எம்.ஜி.ஆரின் கனவுகளை தமிழகத்தில் பா.ஜ., முன்னெடுத்துச் செல்கிறது. அவரின் பாரம்பரியத்தை தி.மு.க., தொடர்ந்து அவமதிக்கிறது. ஜெயலலிதாவை தி.மு.க., நடத்திய விதம், சட்டசபையில் அவர் அவமதிக்கப்பட்ட விதத்தை மறக்க முடியாது.

வரலாற்றுப் பிழைதி.மு.க.,-காங்கிரஸ் கூட்டணி எவ்வளவு தேசவிரோத செயல்களை செய்துள்ளன என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். கச்சத்தீவை நம்மிடம் இருந்து துண்டித்து வேறு நாட்டுக்குக் கொடுத்தார்கள்.

திரைமறைவில் ரகசியமாக செய்த இந்த வரலாற்றுப் பிழையை மன்னிக்க முடியாத பாவமாக பார்க்கிறேன். அவர்களின் பாவத்துக்காக நமது மீனவர்கள் தண்டிக்கப்படுகின்றனர். இதை சமீபத்தில் பா.ஜ., தான் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது.

தமிழகம் போதையை நோக்கிப் போய்க் கொண்டிருகிறது. குடும்ப அரசியலில் உள்ளவர்கள் போதை மருந்துகளை ஊக்குவிக்கிறார்கள். தங்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி பெற்றோர் கவலைப்படுகின்றனர். அவர்களின் குழந்தைகள் போதை என்ற நகரத்துக்குள் தள்ளப்படுகின்றனர்.

போதை மாபியாஅதிகாரத்தில் உள்ளவர்களின் அனுமதியோடு போதை வர்த்தகம் நடக்கிறது. இந்த போதை மாபியா எல்லாம் யார் பாதுகாப்பில் உள்ளனர் என மக்களுக்குத் தெரியும். அவர்களால் தங்களின் குழந்தைகளைக் காப்பாற்ற முடியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்த மோடி பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க மாட்டார்.

போதை இல்லாத உலகத்துக்கு பா.ஜ., அழைத்துச் செல்லும். உங்கள் குழந்தைகளை எல்லாம் காப்பாற்ற வேண்டும் என்றால் பா.ஜ.,வை ஆதரிக்க வேண்டும். இன்று உங்கள் முன் நான் நிற்கும் பிரசார கூட்டம் தான், தமிழக மக்களை சந்திக்கும் கடைசி கூட்டமாக இருக்கும்.

தேர்தல் நெருங்குவதால் இன்னொரு முறை சந்திக்க முடியும் என நினைக்க முடியவில்லை. தமிழக மக்களுக்கு ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறேன். பல ஊர்களில் உங்களைச் சந்தித்து வருவதால் எனக்கு மன உறுதி வந்துள்ளது.

நீங்கள் அத்தனை பேரும் முழு மனதுடன் பா.ஜ.,வுக்கும் என்.டி.ஏ.,வுக்கும் மிகப் பெரிய ஆதரவை தந்து கொண்டிருக்கிறீர்கள். இந்த தேர்தலில் புதிய வரலாற்றைப் படைக்கப் போகிறீர்கள்.

ஒன்றும் செய்ய முடியாதுதமிழகத்தில் பா.ஜ., எங்கே உள்ளது என இண்டி கூட்டணியினர் கேட்டார்கள் அல்லவா. அவர்கள் அதிர்ச்சியடையும் வகையில் மிகப் பெரிய ஆதரவை வழங்கப் போகிறீர்கள். அவர்களிடம் ஒரு டேப் ரிகார்டர் உள்ளது. அதில், 'பா.ஜ., வந்துவிடும் இந்தி வந்துவிடும்' என பழைய பாட்டையே போடுகிறார்கள்.

அவர்கள் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அவர்களால் எப்படி ஆட்சியை நடத்த முடியும். முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். ஒரே ஒரு முறை பா.ஜ.,வுக்கு வாக்களியுங்கள். உங்கள் கனவுகள் தான் என் லட்சியம். ஒவ்வொரு நொடியும் உங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கப் போகிறேன். உங்கள் வாழ்க்கை தான் என்னுடைய லட்சியம்.

ஏப்ரல் 19ம் தேதியன்று தேர்தல் நடக்கப்போகிறது. இதில் பா.ஜ., மிகப் பெரிய வெற்றியை பெறப் போகிறது. அந்த நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது. ஆட்சியில் உள்ள தி.மு.க., அரசுக்கு பயமும் பதற்றமும் வந்துவிட்டது. பா.ஜ.,வுக்கான உங்கள் ஆதரவைக் கண்டு பயப்படுகிறார்கள்.

அதனால் பிரசாரத்தை தடுக்க துவங்கிவிட்டனர். பா.ஜ., தொண்டர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். மொத்த தமிழகமும் நானும் உங்களுடன் இருக்கிறேன். உங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. உங்கள் பிரசாரத்தை துணிச்சலுடன் முன்னெடுக்கலாம்.

இவ்வாறு மோடி பேசினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்