தி.மு.க.,வினர் கடும் எதிர்ப்பால் ஓட்டம் பிடித்த அமைச்சர்
திசையன்விளையில் நடந்த தி.மு.க., ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல், குழப்பம் ஏற்பட்டதால் கூட்டம் 10 நிமிடங்களில் முடிந்தது.
திருநெல்வேலி தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகிறார். அவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால், காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
எனவே திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் பணிகளை கவனிக்கும் பொறுப்பாளராக அமைச்சர் தங்கம் தென்னரசுடன் இணைந்துதுாத்துக்குடி மாவட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செயல்படுகிறார். அவருக்கும் எதிர்ப்பு உள்ளது.
ஏற்கனவே கூடங்குளம் பகுதிக்கு சென்றபோது மீனவர்களும், ஆலங்குளம் தொகுதி முக்கூடல் பகுதியிலும் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிர்ப்புதெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று அனிதா ராதாகிருஷ்ணன் திசையன்விளை பேரூராட்சி பகுதியில் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க சென்றார்.
திருநெல்வேலி தி.மு.க., வில் மாவட்ட செயலர்ஆவுடையப்பன் தலைமையில் ஒரு அணியாகவும், சபாநாயகர் அப்பாவு தலைமையில் ஒரு அணியாகவும் செயல்படுகின்றனர்.
திசையன்விளை கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிப்பதில், கட்சியினரிடையே கோஷ்டி பூசல் ஏற்பட்டது. அதனால், ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தால் காலை 10:50 மணிக்கு துவங்கிய கூட்டம் சிறிது நேரத்திலேயே முடிக்கப்பட்டது.
அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக சிலர் அவதுாறாக பேசியதால், ஆத்திரத்துடன் அவர் கிளம்பிச் சென்றார்.
வாசகர் கருத்து