அதிருப்தி அ.தி.மு.க.,வினரை வளைக்க வைத்திலிங்கம் யுக்தி
தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில், பா.ஜ.,சார்பில், முருகானந்தம் போட்டியிடுகிறார். இவருக்கு பக்கபலமாக பன்னீர்செல்வம் அணியை சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் இருந்து வருகிறார்.
மறைந்த முதல்வர் ஜெ., காலத்தில், நால்வர் அணியில் இருந்தவர் வைத்திலிங்கம். அ.தி.மு.க., பிரிவுக்கு பழனிசாமி தான் காரணம் என்ற அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க.,வினரை தன்பக்கம் இழுக்க முயன்று வருகிறார். அதற்கு தஞ்சையில் தனக்கு மற்றும் தன் ஜாதிக்குள்ள செல்வாக்கையும் நம்புகிறார். விளைவாக, பிரசாரத்தின்போது அ.தி.மு.க.,வினர் சிலர் அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் கட்சி துவங்கிய காலத்தில், வைத்திலிங்கம் மீது அதிருப்தியில் இருந்த பலரும் அ.தி.மு.க.,வில் இருந்து தினகரன் பக்கம் சென்றனர். ஆனால் இப்போது தினகரனும் வைத்திலிங்கமும் ஒரே கூட்டணியில் இருப்பதால் நெருக்கம் காட்டி வருகின்றனர். அதனால் அ.ம.மு.க.,வினரும் அதிருப்தி அ.தி.மு.க.,வினரை வளைக்க வைத்திலிங்கத்துடன் உறுதுணையாக நிற்கின்றனர்.
பா.ஜ.,வினரோ, தங்கள் பிரசாரங்களில் பிரதமர் மோடியை முன்நிறுத்துவதை காட்டிலும், வைத்திலிங்கம், தினகரன் இருவரையும் தான் முன்நிறுத்தி ஓட்டு கேட்டு வருகின்றனர். சுவர் விளம்பரங்களிலும் இதை செய்து வருகின்றனர். அத்துடன் வைத்திலிங்கம், பா.ஜ., வேட்பாளர் முருகானந்தத்திடம் 'உங்கள் வெற்றி என்பதை தாண்டி, என் அவமானத்திற்கான மருந்து' எனவும் கூறி வருவதால், வைத்திலிங்கம் சொல்லுவதை முருகானந்தம் முழுமையாக கேட்டு வருகிறார். ஒவ்வொரு கிராமத்திலும் அதிருப்தி அ.தி.மு.க.,வினரை வளைக்க வேண்டும் என பன்னீர்செல்வம், தினகரன் அணியை சேர்ந்தோர் களமிறங்கி பணியாற்றி வருகின்றனர். அத்துடன் இரட்டை இலை சின்னம் இல்லை, தாமரை தான் நம் சின்னம் என வலியுறுத்தி, பிரசாரம் செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து