ஓசூரை புறக்கணிக்கும் தலைவர்கள் கட்சி நிர்வாகிகள் அதிருப்தி
அதிக வாக்காளர்களை கொண்ட ஓசூர் தொகுதிக்கு முன்னணி அரசியல் கட்சி தலைவர்கள் யாரும் பிரசாரத்திற்கு வராமல் புறக்கணித்துஉள்ளது, கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தொழிற்சாலைகள் அதிகம் கொண்ட ஓசூர் சட்டசபை தொகுதி தான், மாவட்டத்திலேயே அதிகபட்சமாக, 3.51 லட்சம் வாக்காளர்களை கொண்ட பெரிய தொகுதி. இத்தொகுதியில் வசிக்கும் பெருவாரியான மக்கள், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். அதனால், ஓசூர் தொகுதி மக்களின் மனநிலையை அறிந்து கொள்வது சிரமம்.
முக்கிய கட்சிகளான காங்., மற்றும் அ.தி.மு.க., கட்சிகள், ஓசூரை சேர்ந்தவர்களுக்கு, கிருஷ்ணகிரி தொகுதியில் சீட் வழங்கியுள்ளன. ஆனால், அக்கட்சி களின் முக்கிய தலைவர்கள் ஓசூருக்கு பிரசாரத்திற்கு வரவில்லை. அவர்கள் மட்டுமின்றி, நாம் தமிழர், பா.ம.க., தலைவர்களும் வரவில்லை.
கடந்த, மார்ச் 29ல், முதல்வர் ஸ்டாலின், தர்மபுரி மாவட்டத்திலேயே கிருஷ்ணகிரி காங்., வேட்பாளரை அறிமுகப்படுத்தி பிரசாரம் செய்து விட்டு சென்றார்.
அவரது மகனும், அமைச்சருமான உதயநிதி, நேற்றிரவு கிருஷ்ணகிரியில் நடந்த பிரசாரத்தில் பங்கேற்றார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி, மத்துார், பர்கூர் பகுதியில் பிரசாரம் செய்தார். அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., கடந்த, 2ல், கிருஷ்ணகிரியில் மட்டும் பிரசாரம் செய்தார். பா.ம.க., தலைவர் அன்புமணி கடந்த 4ல், கிருஷ்ணகிரியில் மட்டும் பிரசாரம் செய்தார்.
காங்., கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, தளி தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இப்படி முன்னணி அரசியல் கட்சி தலைவர்கள், அதிக வாக்காளர்களை கொண்ட ஓசூர் தொகுதிக்கு வராமல் புறக்கணித்துள்ளது, கட்சி தொண்டர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல், வேப்பனஹள்ளி தொகுதியிலும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து