பணம் பட்டுவாடாவிலும் பாரபட்சம்: பா.ஜ., கூட்டணி வேட்பாளர் மீது அதிருப்தி
பெரம்பலுார் லோக்சபா தொகுதியில், பா.ஜ., கூட்டணி சார்பில் ஐ.ஜே.கே., நிறுவனர் பாரிவேந்தர், வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் இரண்டு லட்சத்து 48,000 பேர் உடையார் சமுதாய வாக்காளர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவரது சமுதாய ஓட்டுகள் கிடைத்தால் மட்டும் வெற்றி பெற்று விடலாம் என்றும், அவர்களை மட்டும் 'கரெக்ட்' செய்யும்படியும் தன் கட்சியினருக்கு பாரிவேந்தர் உத்தரவிட்டார்.
இதனால், தொகுதி முழுக்க உடையார் சமுதாய மக்கள் வாழும் ஊர்களான பாலையூர், தொண்டபாடி, பேரளி, வேப்பந்தட்டை, கை.களத்துார், மேட்டுப்பாளையம், சாத்தனவாடி, நெய்க்குப்பை, செஞ்சேரி, அரணாரை, ஆலம்பாடி, சொக்கநாதபுரம், கீழப்புலியூர், துறையூர், லால்குடி, சிறுகளப்பூர், மால்வாய், கண்ணனுார், அலுந்தலைப்பூர், செம்பரை, புள்ளம்பாடி, நத்தம், பெரகம்பி, அலகங்கநல்லுார், சித்திரப்படி, மதுராபுரி உள்ளிட்ட ஊர்களில் உள்ள, உடையார் சமுதாய வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு, 500 ரூபாய் வீதம் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மற்ற சமுதாய வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு ஐ.ஜே.கே., சார்பில் பணம் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இவ்வாறு பாரபட்சம் காட்டாமல் தி.மு.க., அனைத்து சமுதாயத்தை சேர்ந்தோருக்கும், அனைத்து கட்சிகளை சேர்ந்த, 75 சதவீத வாக்காளர்களுக்கும் ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுத்துள்ளது.
அதனால், ஓட்டுக்கு பணம் கொடுப்பதிலும், மற்ற சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்களிடம் பாரிவேந்தர் பாரபட்சம் காட்டியதால், அவருக்கு எதிராக ஓட்டளிக்க முத்தரையர், ரெட்டியார், பட்டியல் சமுதாயத்தினர் உள்ளிட்ட மற்ற சமுதாயத்தினர் முடிவு செய்துள்ளனர்.
வாசகர் கருத்து