மின்தடை ஏற்படுத்தி பணப்பட்டுவாடா: தேர்தல் கமிஷனில் பா.ஜ., புகார்
ஒரு மாதமாக நடந்த பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்த நிலையில், இன்று எந்த நேரத்திலும் வாக்காளர்களுக்கு பட்டுவாடா நடக்கலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, பட்டுவாடா நடந்தால், பொதுமக்கள் புகார் அளிக்க முன்வர வேண்டும் என, தேர்தல் கமிஷன் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது:
லோக்சபா தேர்தலுக்கு, ஓட்டுச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஓட்டுச்சாவடிக்கு, இன்று எடுத்துச் செல்லப்படும். பாதுகாப்பு பணியில், போலீசார், துணை ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இரவு நேரத்தில்
ஓட்டுச்சாவடியில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் போன்றோருக்கு உதவ, தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சக்கர நாற்காலி, சாய்தளம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஓட்டளிக்க முன்னுரிமை அளிக்கப்படும்.
பணப் பட்டுவாடாவை தடுக்க, மாநில தேர்தல் செலவினப் பார்வையாளர், ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் செலவினப் பார்வையாளர் உள்ளனர். பணம் தொடர்பாக புகார் வந்ததும், நடவடிக்கை எடுக்கப்படும். 'சிவிஜில்' மொபைல் போன் செயலி வழியாக, பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.
இந்நிலையில், 'வடசென்னை தொகுதியில், இரவு மின்தடை ஏற்படுத்தி, திராவிட கட்சிகள் பணம் கொடுக்கின்றன. அதை தடுக்க வேண்டும்' என, அத்தொகுதி பா.ஜ., வேட்பாளர் பால்கனகராஜ், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்தார்.
அதன்பின், அவர் அளித்த பேட்டி:
திராவிட கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க ஆரம்பித்து விட்டன. இரவு மின்சாரத்தை துண்டித்து, பணம் கொடுக்கின்றனர். நேற்று முன்தினம் கொளத்துார் பகுதியில் பிரசாரம் செய்தபோது, இரவு 8:00 மணிக்கு மின்சாரத்தை துண்டித்தனர். இருளில்தான் பிரசாரம் செய்தேன்.
ஓட்டுப்பதிவு அன்று அப்பாவி வாக்காளர்களை தடுத்து, கள்ள ஓட்டு போடப் போவதாக தகவல் வந்துள்ளது. எனவே, துணை ராணுவத்தை பணியில் அமர்த்தக் கோரிஉள்ளோம்.
குறிப்பாக முதல்வரின் கொளத்துார் தொகுதியில் நியமிக்க வேண்டும். வாக்காளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளோம்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, மின் வாரியத்துக்கு, உரிய உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்தார்.
மிரட்டல்
பா.ஜ., பணம் கொடுத்து ஓட்டு வாங்கி, மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதுவரை மக்கள் மாற்று இல்லாமல் இருந்தனர். தற்போது மாற்றாக பா.ஜ., உள்ளது.
மக்களை நம்பி களத்தில் நிற்கிறோம். காசு கொடுத்து எம்.பி.,யாகி எதுவும் செய்ய முடியாது. மக்கள் காசு வாங்காமல் ஓட்டு போடும்போது, களத்தில் வேகமாக பணியாற்ற முடியும். கூட்டணி கட்சி பொறுப்பாளர்களை தி.மு.க., மிரட்டுகிறது. அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் ஜெயிக்கலாம் என நினைக்கும் அரசியல்வாதிகள், முதலில் திருந்த வேண்டும்.
காசு கொடுத்து ஓட்டு வாங்கினால், அந்த பணத்தை எடுக்க வேண்டும் என நினைப்பர். இது ஊழலுக்கு வழிவகுக்கும். மக்கள் ஓட்டை விற்க வேண்டாம். மக்களுக்கு நல்லது செய்தால், ஓட்டு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து