தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் வெளியேற கெடு: சாஹு

"தமிழகத்தில் ஏப்., 17ம் தேதி மாலை 6 மணிக்கு தேர்தல் பிரசாரம் நிறைவடைய வேண்டும்" என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்.,19ம் தேதி ஓட்டுப் பதிவு நடக்க உள்ளது. தேர்தல் தேதி நெருங்குவதால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சத்யபிரதா சாஹு கூறியதாவது:
ஏப்ரல் 17ம் தேதி மாலை 6 மணிக்கு பிரசாரம் நிறைவடைய வேண்டும். அத்துடன் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும். 92 சதவீத வாக்காளர்களுக்கு பூத் சிலிப் கொடுக்கும் பணிகள் முடிந்துவிட்டன.
நாளை மாலைக்குள் பூத் சிலிப் வழங்கும் பணிகள் நிறைவடையும். இதில் விடுபட்டவர்களுக்கு பூத் சிலிப் வழங்குவதை தேர்தல் அதிகாரி முடிவெடுப்பார். பூத் சிலிப் இல்லாவிட்டாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் ஓட்டு போடலாம்.
தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்கள், தபால் ஓட்டுகளைப் போடுவதற்கு நாளை கடைசி நாள். தேர்தல் கமிஷனின் விதிகளின்படி தபால் வாக்குகளை தபால் வாயிலாக அனுப்ப முடியாது.
ஓட்டுப் பதிவு நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாசகர் கருத்து