பாலியல் தொழிலாளர்கள் எத்தனை பேர்?: கணக்கெடுப்பு பணியில் தேர்தல் கமிஷன்
சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில், பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு, ஓட்டளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து, தேர்தல் அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
சென்னை மாவட்டத்தில், 16 சட்டசபை தொகுதிகளில் 39 லட்சத்து, 1,167 வாக்காளர்கள் உள்ளனர். மாநில அளவில் ஓட்டு சதவீதம் சென்னையில் குறைவாக உள்ளது. வரும் லோக்சபா தேர்தலில் ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
ஆண், பெண் வாக்காளர்களுடன், மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் குறித்த பட்டியல் எடுத்து, அவர்களுக்கும் ஓட்டு போடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
விழிப்புணர்வு பணி
இதில், 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு, தபால் ஓட்டு போடுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாலியல் தொழிலாளர்களுக்கு தபால் ஓட்டு இல்லையென்றாலும், அவர்கள் தயக்கமின்றி ஓட்டளிக்க வர வேண்டும் என, மாநகராட்சி அதிகாரிகள், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதேபோல் மாநிலம் முழுதும் விழிப்புணர்வு பணிகள் நடந்து வருகிறது.
சில மாவட்டங்களில், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியோடு, பாலியல் தொழிலாளர்களிடம், தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாவட்டத்தில், 85 வயதுக்கும் மேற்பட்ட முதியோர் 63,751 பேர் உள்ளனர். அதேபோல், மாற்றுத்திறனாளிகள் 10,370 பேர் உள்ளனர். வரும் தேர்தலில், 100 சதவீதம் பேரும் ஓட்டு அளிக்கும் வகையில், அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். சமூகத்தால் தயங்கி நிற்கும் பாலியல் தொழிலாளர்களையும், தேர்தலில் ஓட்டுபோட வைக்கும் வகையில் தான், இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது, 10,548 பாலியல் தொழிலாளர்கள் இருக்கும் நிலையில், அவர்களுக்கு ஓட்டுபோடுவதன் அவசியம், கடமை உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஓட்டுபோடுவதில் அவர்களின் முக்கியத்துவம் குறித்தும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புது முயற்சியாக
எப்போதும் இல்லாத வகையில், பாலியல் தொழிலாளர்கள் மீது திடீர் கரிசனம் காட்டுவது ஏன் என்ற கேள்விக்கு, 'ஓட்டுப்பதிவை அதிகரிக்க, எந்த வகையில் எல்லாம் முயற்சிக்க முடியுமோ, அதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி, தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். புது முயற்சியாக, பாலியல் தொழிலாளர்களையும் தேடி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
'ஏற்கனவே, ஹெச்.ஐ.வி., தடுப்பு திட்டத்தின் கீழ், பாலியல் தொழிலாளர்கள் தொடர்பான விபரங்கள் அரசிடம் உள்ளன. அதை வைத்து, பல்வேறு மாவட்டங்களிலும், அவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
ஆனால், அவர்கள் பற்றிய எந்த விபரமும் பகிரங்கப்படுத்தப்படாது. இது, ஓட்டுப்பதிவை அதிகரிக்க வைக்கும் முயற்சிதான். இந்த முயற்சிக்கு பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் ஒத்துழைக்க வேண்டும்' என்றனர்.
இதற்கிடையில், பாலியல் தொழிலுக்கு இதுவரை சட்ட அங்கீகாரம் இல்லாத நிலையில், அவர்களை தனியாக கணக்கெடுத்து, அவர்களையும் ஓட்டுப்போட வைக்கிறோம் என்ற தேர்தல் ஆணையத்தின் முயற்சி சரியானதுதானா என்ற கேள்வியையும் சிலர் எழுப்புகின்றனர்.
வாசகர் கருத்து