கையைத் துாக்க சொன்ன அமைச்சர்: வெளியேறிய பெண்கள் கூட்டம்
அரூரில், தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க., செயலர் பழனியப்பன் தலைமையில் நேற்று முன்தினம் தர்மபுரி லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் மணி அறிமுக கூட்டம் நடந்தது. அதில் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது:
டிக்கெட் இல்லாமல் பஸ்சில் இலவசமா போறவங்க வெட்கப்படாமல் கையை துாக்குங்கள். மாதம், 1,000 ரூபாய் பெறும் தாய்மார்கள் வெட்கப்படாமல் கையை துாக்குங்கள்... வெட்கப்படாமல் கையை துாக்குங்கள்.
இத்தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,விற்கு நீங்கள் சொல்ல வேண்டும். இதுதான், தி.மு.க., சாதனை. தர்மபுரி மாவட்டத்தில், 1989ல் கருணாநிதி மகளிர் சுய உதவி குழுவை உருவாக்கினார். நானே, இந்த மண்டபத்தில் மகளிர் சுய உதவி குழுவிற்கு பல கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளேன். ஆண்களை நம்பி கடன் கொடுப்பதில்லை. உங்களை நம்பித்தான் கடன் கொடுக்கின்றனர். பெண்கள் ஆதரவு, ஸ்டாலினுக்கு தான் உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், 2.75 லட்சம் மகளிருக்கு, மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டுள்ளது. கடந்த, 10 ஆண்டு கால, அ.தி.மு.க., ஆட்சியில் என்ன செய்தனர். முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில், வீடு தேடி பணம் வருகிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.
அமைச்சர் பன்னீர்செல்வம், 'பெண்கள் வெட்கப்படாமல் கையைத் துாக்குங்கள்' என திரும்ப, திரும்ப பேசியதால், கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள் அதிருப்தியாகி வீட்டிற்கு புறப்பட தயாராகினர். அவர்களை, தி.மு.க., நிர்வாகிகள் அமர சொன்ன போதிலும், அதை கண்டு கொள்ளாமல் மண்டபத்தில் இருந்து கூட்டம், கூட்டமாக வெளியேறினர்.
தொடர்ந்து, வி.சி., கட்சியின் தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலர் சாக்கன் சர்மா பேசுகையில், ''தயவு செய்து ஊடகங்களில் தவறான செய்தி வெளிடுவதை மாற்றிக் கொள்ள வேண்டும். பொறுப்பு அமைச்சர் பன்னீர்செல்வம், எங்களை கொச்சைப்படுத்தியோ, உதாசீனப்படுத்தியோ பேசவில்லை.
''காலைக்கதிர் நாளிதழில் மார்ச், 24ல் வெளியான செய்தி மாறானது. இக்கூட்டணி வெற்றி பெற அவர், ஒரு சில கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை கூறுகிறாரே ஒழிய, அவர் எங்களை காழ்ப்புணர்ச்சியாகவோ அல்லது பயமுறுத்தும் வகையிலோ பேசவில்லை என்பதை, புரிந்து கொள்ள வேண்டும்,'' என்றார்.
வாசகர் கருத்து