பானையை உடைத்து சொல்கிறேன்.. பா.ஜ.,வுக்கு சம்பந்தம் இல்லை: தமிழிசை
"அரசியல் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதற்கும் பா.ஜ.,வுக்கு எந்த சம்பந்தமும் இல்லை" என, தென்சென்னை பா.ஜ., வேட்பாளர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் வி.சி., போட்டியிடுகிறது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட பானை சின்னத்தைக் கேட்டு தேர்தல் கமிஷனில் வி.சி., விண்ணப்பித்தது. தேர்தல் கமிஷனோ, 'ஒரு சதவீத ஓட்டுகளைப் பெற்ற கட்சிக்கு கேட்கும் சின்னத்தை ஒதுக்க வாய்ப்பில்லை' என தெரிவித்தது.
இதையடுத்து, டெல்லி ஐகோர்ட்டில் வி.சி., முறையிட்டது. இம்மனுவின் மீது முடிவெடுக்க தேர்தல் கமிஷனுக்கு கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், 'வி.சி.,கவுக்கு பானை சின்னத்தை ஒதுக்க வாய்ப்பில்லை' என தேர்தல் கமிஷன் மறுத்துவிட்டது.
அதேபோல், ம.தி.மு.க.,வுக்கும் பம்பரம் சின்னம் கிடைக்கவில்லை. நாம் தமிழர் கட்சியும், கரும்பு விவசாயி சின்னம் கேட்டு சட்டப் போராட்டம் நடத்தியும் அந்த சின்னம் கிடைக்கவில்லை.
ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் த.மா.கா.,வுக்கு சைக்கிள் சின்னமும் பா.ம.க.,வுக்கு மாம்பழம் சின்னத்தையும் தேர்தல் கமிஷன் கொடுத்துள்ளது. இது இண்டியா கூட்டணிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இது குறித்து தென்சென்னையில் பிரசாரம் மேற்கொண்ட பா.ஜ., வேட்பாளர் தமிழிசை கூறியதாவது:
சின்னம் ஒதுக்குவதில் பாஜ.,வுக்கு எந்த சம்பந்தம் இல்லை. அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படவில்லை. ஒரு தொகுதியில் போட்டியிட்டால் சின்னம் கிடையாது என உச்ச நீதிமன்றமே கூறிவிட்டது.
எதிர்க்கட்சியில் நின்று கொண்டு ஒரு தொகுதியில் போட்டியிட்டால் சின்னம் கிடையாது என பானையை உடைத்து உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. அவர்கள் இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக இருந்தாலும், விகிதாச்சாரம் உள்பட சில வழிமுறைகள் உள்ளன. அப்படி இருந்தால், நீதிமன்றம் ஏன் மறுப்பு தெரிவிக்கிறது?
எதை எடுத்தாலும் பாஜ.,வை குறை சொல்வது ஒரு வழக்கமாகிவிட்டது. பானையை உடைத்து சொல்கிறேன். சின்னத்துக்கும் பா.ஜ.,வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
தேர்தல் பத்திரங்களைப் பொறுத்தவரையில் பா.ஜ., மட்டும் வாங்கவில்லை. அனைத்துக் கட்சிகளும் நன்கொடையை வாங்கியுள்ளன. அரசியல் கட்சிகள் கணக்கில் வராமல் எவ்வளவோ தொகைகளை பெற்றுள்ளன.
இதுகுறித்து விவரங்களைக் கேட்டால் எந்த தகவலும் கிடைக்காது. ஆனால், தேர்தல் பத்திரங்களில் யார் கொடுத்தார்கள்... யார் வாங்கினார்கள் என்ற அனைத்து விவரங்களும் உள்ளன.
இவ்வாறு தமிழிசை கூறினார்.
வாசகர் கருத்து