ஸ்டாலின் மீதே விதிமீறல் புகார்: சாஹுவிடம் அ.தி.முக., மனு
"தி.மு.க., அரசு எந்த சட்டத்துக்கும் கட்டுப்படாமல் தனது கைப்பாவையாக அரசு அலுவலர்களை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறது" என, தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க., புகார் அளித்துள்ளது.
அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரான பாபு முருகவேல், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: லோக்சபா தேர்தல் நடத்தை விதிமீறல்களில் தி.மு.க., அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் உள்ள ஒலி-ஒளி காட்சி அரங்கத்தை மூட வேண்டும் என புகார் கொடுத்தோம். எங்கள் புகாரின் அடிப்படையில் தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்ததால் நேற்று அது மூடப்பட்டது.
ஆனால் எந்த சட்டத்துக்கும் கட்டுப்படாத தி.மு.க., அரசு, தனது கைப்பாவையாக அரசு அலுவலர்களை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
சமீபகாலமாக தி.மு.க., அரசின் அமைச்சர்களின் வாகனங்களையும் தி.மு.க., எம்.பி., எம்.எல்.ஏ.,க்களின் வாகனங்களையும் முறையாக சோதனை செய்யாமல் பெயரளவில் சட்டத்தை பாதுகாப்பதாக நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த 2 நாள்களுக்கு முன், தி.மு.க., தலைமை அலுவலகத்தில் உள்ள லோக்சபா தேர்தல் பணி அலுவலகத்தை ஸ்டாலின் பார்வையிடுவதாக செய்தி வெளியானது. அந்தப் படத்தில் சென்னை உயர் நீதிமன்ற அரசு கூடுதல் வழக்கறிஞர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளதை போன்று வெளியாகியுள்ளது. இது அப்பட்டமான தேர்தல் விதிமீறல் ஆகும்.
அரசு வழக்கறிஞர்கள் அரசுக்காகத் தானே தவிர, ஆளும் அரசின் கட்சிக்கானவர்கள் அல்ல. எனவே, அந்த புகைப்படத்தில் உள்ள அரசு வழக்கறிஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு வழக்கறிஞரை தன்னுடைய கட்சியின் சுயலாபத்துக்காக பயன்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மீதும் உரிய நடவடிக்கையை தேர்தல் கமிஷன் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்தப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ---
வாசகர் கருத்து