இது தான் தி.மு.க.,வின் சமூக நீதி: ஸ்டாலினை சாடிய அண்ணாமலை
"வேங்கைவயல் சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் கடந்தும், அங்கு நேரில் சென்று பொதுமக்களுக்கு ஆறுதல் சொல்வதற்குக் கூட முதல்வர் ஸ்டாலின் மனமில்லாமல் இருக்கிறார்" என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் நடந்து 16 மாதங்கள் கடந்து விட்டன. ஆனால், இதுவரை குற்றவாளிகளைக் கைது செய்யாமல் கண்துடைப்பு விசாரணை நடத்தி அந்த சம்பவத்தைப் பொதுமக்கள் பார்வையில் இருந்து மறைக்க தி.மு.க., முயற்சிக்கிறது.
இதனைக் கண்டித்து தேர்தலைப் புறக்கணிப்பதாக அம்மக்கள் அறிவித்துள்ளனர். வெறும் வாய் வார்த்தைகளில் மட்டும் சமூகநீதி பேசி, இத்தனை ஆண்டுகளாகப் பட்டியல் சமூக மக்களை ஏமாற்றி வரும் தி.மு.க.,வின் சந்தர்ப்பவாத அரசியல் தான் இதற்கு ஒரே காரணம்.
வேங்கைவயல் சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் கடந்தும், அங்கு நேரில் சென்று பொதுமக்களுக்கு ஆறுதல் சொல்வதற்குக் கூட முதல்வர் ஸ்டாலின் மனமில்லாமல் இருக்கிறார்.
பட்டியல் சமூக மக்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பார்க்கும் தி.மு.க., வுக்கு, சமூகநீதி என்ற வார்த்தையை உச்சரிக்க தகுதி உள்ளதா. வாக்களிப்பது குடிமக்களின் ஜனநாயக உரிமை. தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து தேர்தலைப் புறக்கணிக்க உள்ளதாக வேங்கைவயல் மக்கள் அறிவித்திருப்பது வருத்தத்திற்குரியது.
வேங்கைவயல் மக்கள், மாற்றத்துக்காக வாக்களிக்க முன்வர வேண்டும். தங்கள் வாக்குகளின் வலிமையை தி.மு.க., அரசுக்கு உணர்த்துவதுதான் உண்மையான பதிலடியாக இருக்கும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து