Advertisement

எதிர்க்கட்சிகளை முடக்கும் தேர்தல் கமிஷன்: வி.சி., குற்றச்சாட்டு

"பா.ஜ., அணியில் உள்ளவர்களுக்கு தேர்தல் கமிஷன் இறங்கிப் போவதும் எதிர் நிலையில் உள்ளவர்களை முடக்குவதையும் மிகப் பெரிய சதித்திட்டமாக பார்க்கிறோம்" என, வி.சி., எம்.எல்.ஏ., ஆளூர் ஷாநவாஸ் கூறினார்.

லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் வி.சி.., போட்டியிடுகிறது. கடந்த தேர்தலில் ஒதுக்கியதைப் போல பானை சின்னத்தைக் கேட்டு தேர்தல் கமிஷனில் வி.சி., விண்ணப்பித்தது. ஆனால், இதுவரையில் சின்னம் ஒதுக்கப்படவில்லை.

சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் கமிஷன் உறுதியாக தெரிவித்துவிட்ட போதிலும், பானை சின்னத்தை வைத்தே திருமாவளவன் வாக்கு சேகரித்து வருகிறார்.

இதுகுறித்து, வி.சி.., எம்.எல்.ஏ., ஆளுர் ஷாநவாஸ் கூறியதாவது:

வி.சி.க.,வுக்கு பானை சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் கமிஷன் கூறியிருக்கிறது. ம.தி.மு.க.,வுக்கு பம்பரம் சின்னம் கேட்டபோது, 'ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் தர முடியாது' என்றார்கள். ஆனால், வி.சி., தமிழகத்தில் இரண்டு தொகுதிகளிலும் தெலங்கானா, மகாராஷ்ட்ரா என 22 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

பானை சின்னம் கேட்டபோது, 'கடந்த தேர்தலில் ஒரு சதவீதத்துக்குள் வாங்கியதால் முடியாது' என்றார். 'அது தவறு.. 1 சதவீதத்துக்கும் மேல் வாங்கியிருக்கிறோம்' என ஆதாரத்தைக் கொடுத்தால், 'கையெழுத்து சரியில்லை... விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்யவில்லை' என வேறு வேறு காரணங்களைத் தேர்தல் கமிஷன் தேடுகிறது,

ஆனால், ஜி.கே.வாசன் காலையில் விண்ணப்பம் செய்தால் மாலையே சின்னம் கிடைக்கிறது. தினகரனுக்கும் குக்கர் சின்னம் கிடைக்கிறது. எந்த தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெறாதவர் தான் ஜி.கே.வாசன். இவ்விரு கட்சிகளுக்கும் எம்.பி.,க்களும் எம்.எல்.ஏ.,க்களும் இல்லை.

கடந்த லோக்சபா தேர்தலில் பானை சின்னத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றார். சட்டசபை தேர்தலில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வி.சி., சார்பில் நான்கு எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெற்றனர். அந்த அடிப்படையில் சின்னத்தைக் கேட்கிறோம்.

சின்னத்தை ஒதுக்காமல் இருப்பது மிகப் பெரிய அநீதி. பா.ஜ., அணியில் உள்ளவர்களுக்கு தேர்தல் கமிஷன் இறங்கிப் போவதும் எதிர் நிலையில் உள்ளவர்களை முடக்குவதையும் மிகப் பெரிய சதித்திட்டமாக பார்க்கிறோம்.

சண்டிகர் மேயர் தேர்தலில் உச்ச நீதிமன்றமே தலையிட்டு நீதியை நிலைநாட்டியதைப் போல, இந்த விவகாரத்திலும் தலையிட்டு தேர்தலை நியாயமாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்