பொள்ளாச்சி தொகுதிக்கு நாளை ஓட்டு எண்ணிக்கை
பொள்ளாச்சி;பொள்ளாச்சி தொகுதியில் மொத்தம், 84 மேஜைகள் அமைக்கப்பட்டு நாளை ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, உடுமலை, மடத்துக்குளம், தொண்டாமுத்துார் உள்ளிட்ட, ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இத்தொகுதிக்கான தேர்தல் கடந்த மாதம், 19ம் தேதி நிறைவடைந்த நிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பாக ஓட்டு எண்ணும் மையமான பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, கேமராக்கள் முறையாக இயங்குகிறதா என ஆய்வு செய்தனர். இந்நிலையில், நாளை (4ம் தேதி) ஓட்டு எண்ணும் பணிகள் நடக்கின்றன.
பதிவான ஓட்டுகள்
பொள்ளாச்சி தொகுதியில் மொத்தம் உள்ள, 15,97,467 வாக்காளர்களில், 11,24,743 பேர் ஓட்டு அளித்தனர். மொத்தம், 70.41 ஓட்டுகள் பதிவாகின. இந்த ஓட்டுகள் நாளை எண்ணப்படுகின்றன.
வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:
பொள்ளாச்சி தொகுதியில், ஆறு சட்டசபை தொகுதிக்கும் தலா, 14 மேஜைகள் என்ற அடிப்படையில் மொத்தம், 84 மேஜைகளும்; தபால் ஓட்டுகளுக்கு ஆறு பிளஸ்1 என மேஜைகள் அமைககப்பட்டுள்ளன.
ஆறு சட்டசபை தொகுதியில், 1,715 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. தொண்டாமுத்துார், 23, கிணத்துக்கடவு, 23, பொள்ளாச்சி, 20, வால்பாறை (தனி), 17, உடுமலை, 22, மடத்துக்குளம், 21 என மொத்தம், 126 சுற்றுகளாக ஓட்டுக்கள் எண்ணப்பட உள்ளன.
இதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து