நன்மதிப்பை இழந்துவிட்டார் மோடி: கார்கே குற்றச்சாட்டு
"ராமர் கோயிலுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிப்பதாக மோடி கூறுகிறார். இந்த கடவுளைத் தான் கும்பிட வேண்டும் என யாரும் யாரையும் வற்புறுத்த முடியாது. இதை அரசியலாக பார்க்கிறார் மோடி" என, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:
நாட்டின் வளர்ச்சிக்காக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். புதுச்சேரியின் கலாசாரம்,பழக்கவழக்கங்கள் உள்ளிட்டவை அனைவராலும் போற்றப்படுகிறது. புதுச்சேரி சுதந்திரம் அடைவதற்கு காங்கிரஸ் தலைவர்கள் பெரிதும் பணியாற்றினர்.
புதுச்சேரி மாநில அந்தஸ்து பெறும் மாநிலமாக மாற வேண்டும். அதற்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும். காங்கிரஸ் சொல்வதை செய்யும். ஆனால், மோடி சொல்வதை செய்யமாட்டார். ராகுலும் சோனியாவும் புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவோம் எனத் தெரிவித்துள்ளனர்.
பா.ஜ., தேர்தல் அறிக்கையில், 'புதுவைக்கு மாநில அந்தஸ்து தருவோம்' எனக் கூறவில்லை. வரும் லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும். ஜனநாயகத்தின் மீது நன்மை கொண்ட கட்சி, காங்கிரஸ்.
அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டத்தை உள்ளடக்கியது தான் காங்கிரஸ். எந்த சட்டத்தையும் பின்பற்றாமல் அமைச்சர் பொன்முடிக்கு நோட்டீஸ் வழங்காமல் அமலாக்கத்துறை கைது செய்தது. மோடி அரசு முறையாக தேர்தல் வாயிலாக ஆட்சிக்கு வராமல் குறுக்கு வழியில் பல மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்த்துள்ளனர்.
பல்வேறு மாநிலங்களில் 444 எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கியுள்ளனர். மக்கள் பா.ஜ.,வின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அதிகார துஷ்பிரயோகம் செய்கின்றனர். கவர்னரை வைத்தும் தொல்லை தருகின்றனர். தமிழகத்தில் கவர்னர் ரவியை வைத்து நிர்வாகத்தை நடத்த முடியாமல் இடையூறு செய்கின்றனர்.
தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்காக கோப்புகளை அனுப்பினாலும் தாமதப்படுத்தி திருப்பி அனுப்புகிறார். 'ராமர் கோயில் நிகழ்வுக்கு சோனியாவுக்கும் கார்கேவுக்கும் அழைப்பு விடுத்தும் அவர்கள் வரவில்லை. அவர்கள் ராமருக்கு எதிரானவர்கள்' என, மோடி பொய்க் குற்றச்சாட்டை சுமத்துகிறார்.
ராமர் கோயிலுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிப்பதாக மோடி கூறுகிறார். இந்த கடவுளைத் தான் கும்பிட வேண்டும் என யாரும் யாரையும் வற்புறுத்த முடியாது. இதை அரசியலாக பார்க்கிறார் மோடி.
மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் வெளிநாடுகளில் இருந்து 155 லட்சம் கோடி ரூபாயை கடனாக வாங்கியுள்ளனர். காங்கிரஸ் வாங்கியது 50 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே. இது தான் வளர்ச்சிப் பாதையா?
விவசாயிகளின் விளைபொருளுக்கு இரட்டிப்பு மடங்கு தருவோம் என்றார், மோடி. ஆனால், அதை நிறைவேற்றவில்லை. இது தான் மோடியின் உத்தரவாதமா. மக்கள் மத்தியில் மோடி நன்மதிப்பை இழந்துவிட்டார்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து