Advertisement

அத்தனை குளறுபடிகளுக்கும் காரணம் மோடி: ஸ்டாலின் ஆவேசம்

"மோடி ஆட்சி மீண்டும் அமைந்தால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது. நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்காது. மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இருக்காது" என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தேனி தொகுதி தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் திண்டுக்கல் மா.கம்யூ., வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து ஸ்டாலின் பேசியதாவது:

இண்டியா கூட்டணி நம்பகமான கூட்டணி. நாளை சாதனைகளாக மாறப் போகும் திட்டங்களை தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறோம். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதை மனதில் வைத்து ஓட்டு போடுங்கள். அமைதியான இந்தியாவை அமளியான இந்தியாவாக மாற்றிவிடுவார்கள்.

இன்னொரு முறை மோடி ஆட்சி அமைந்தால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது. நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்காது. மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இருக்காது. சட்டமன்றம் இருக்குமா என்பதே சந்தேகம் தான். ஒரே உடை, ஒரே மொழி, ஒரே உணவு என ஒற்றை சர்வாதிகார நாடாக மாற்றிவிடுவார்கள்.

சமூகநீதியை குழி தோண்டிப் புதைத்துவிடுவார்கள். இதுவரையில் வெளிநாட்டுப் பயணம் போன மோடி, இப்போது உள்நாட்டுக்கு வருகிறார். அவர் ஷோ காட்ட வருவதாக நான் சொல்லவில்லை. திராவிடர்களின் கோட்டமாக இருக்கும் இடத்தில் ஷோ காட்டினால் எடுபடுமா?

சமூக வலைதளத்தில் மோடி எழுதும்போது, சென்னை மெட்ரோ திட்டத்தை விரிவாக்கம் செய்யப் போவதாக கூறுகிறார். அந்த திட்டத்துக்கு தடையாக இருப்பதே அவர் தான்.

இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கு அனுமதியளிக்காத காரணத்தால் திட்டப்பணிகள் தாமதம் ஆகிறது. இந்த திட்டத்துக்காக உள்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார். ஆனால் நிதி ஒதுக்கவில்லை. பிரதமரை நேரில் சந்தித்தும் பலன் இல்லை.

மதுரை எய்ம்ஸ் போல அடிக்கல்லோடு நிற்கக் கூடாது என்பதால் மாநில அரசின் நிதியில் இருந்து பணிகள் நடக்கின்றன. இந்தப் பணிக்காக ஆண்டுக்கு 12,000 கோடி ரூபாய் செலவாகிறது. இத்தனை குளறுபடிகளுக்கும் காரணம் மோடி. காலையில் வேலூர் போனார். அங்கு அவர் இந்தியில் பேசினால் கூட்டம் கை தட்டுகிறது.

வெளிமாநிலத்தில் இருந்து ஆட்களை அழைத்து வந்துவிட்டார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. தமிழகத்தை வளைக்கப் போவதாக இந்தியில் சபதம் எடுக்கிறார். தி.மு.க., அரசில் தமிழகம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இதை எந்த மோடி மஸ்தான் வித்தையாலும் தடுக்க முடியாது.

நாட்டில் பிரிவினைவாத அரசியலை செய்வது யார். சாதியாலும் மதத்தாலும் பிளவுபடுத்தும் நீங்கள் தி.மு.க.,வை குறை சொல்லலாமா. காங்கிரசின் தேர்தல் அறிக்கையை முஸ்லிம் லீக்குடன் ஒப்பிட்டு மோடி பேசியிருக்கிறார். மக்களைப் பிளவுபடுத்திப் பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும்.

பா.ஜ.,வின் 10 ஆண்டுகால ஆட்சியின் வேதனையை பல மணிநேரங்கள் பேச முடியும். தமிழகத்தைப் புறக்கணித்த மோடிக்கு நாங்கள் சொல்வது ஒன்று தான். 'வேண்டாம் மோடி'.

தெற்கில் இருந்து வரக் கூடிய இந்தக் குரல் இந்தியா முழுக்க கேட்கட்டும். தமிழ் வளர்ச்சியை தடுத்து தமிழ் மொழியை புறக்கணித்தால் என்ன நடக்கும் என்பதை இந்த தேர்தலில் காட்ட வேண்டும்.

இந்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் நாம் வெல்லப் போகிறோம் என்பதை தெரிந்து கொண்ட பழனிசாமி, மத்திய அரசில் 14 ஆண்டுகள் இருந்தபோது தி.மு.க., என்ன செய்தது எனக் கேட்கிறார்.

அவரிடம் நான் பணிவோடு கேட்டுக் கொள்வது, காலையில் எழுந்ததும் தயவு செய்து செய்தித்தாள்களைப் படியுங்கள். தினமும் காலண்டரில் அமாவாசையை பார்க்கும் அரசியல் அமாவாசையான பழனிசாமி, 'ஸ்டாலின் பிரதமர் கனவில் இருக்கிறார்' எனப் பேசுகிறார்.

தி.மு..க., பிரதமர்களையும் குடியரசுத் தலைவர்களையும் உருவாக்கும் இயக்கம். ஒரே நாடு ஒரே தேர்தல் என பா.ஜ., கூறியபோது, தேர்தல் வரும் என இலவுகாத்த கிளியாக காத்திருந்தார். அதனால் வாய்க்கு வந்ததை பேசி வருகிறார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அனைத்து தேர்தலிலும் அவர் தோற்று வருகிறார். அடுத்த முறை உங்களிடம் இருக்கும் தொகுதிகளையும் சேர்த்தே பறிக்கப் போகிறோம். 'அ.தி.மு.க.,வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள்' என சவடால் விடுகிறார். அதை அழிக்க பழனிசாமியும் பன்னீர்செல்வமும் தினகரனும் போட்டி போடுகிறார்கள்.

விவசாயிகளின் கஷ்டங்களை ஸ்டாலின் பேசவில்லை என நீலிக்கண்ணீர் வடிக்கிறார். விவசாயிகள் கஷ்டத்தில் இருந்தால் தானே பேசுவார்கள். உண்மையிலேயே விவசாயிகள் மேல் அக்கறை இருந்தால் மத்திய அரசுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்காக ஏன் பழனிசாமி பேசவில்லை. அதற்கு காரணமான மோடியை ஏன் கண்டிக்கவில்லை?

3 வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒன்றரை ஆண்டுகள் டில்லியில் தங்கி விவசாயிகள் போராடினார்கள். அவர்களின் எதிர்ப்பால் பா.ஜ., பின்வாங்கியது. அப்போது கொடுத்த வாக்குறுதிகளையும் பா.ஜ., நிறைவேற்றவில்லை. மீண்டும் டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடக்கிறது.

அவர்கள் மீது இரக்கமற்ற முறையில் தாக்குதல் நடந்தது. அப்போது பழனிசாமி எங்கே போனார். 'வேளாண் சட்டங்களால் பாதிப்பு இல்லை. உ.பி சென்று வியாபாரம் செய்யலாம்' எனப் பேசியவர் பழனிசாமி. விவசாயிகளை புரோக்கர் என்று சொன்ன அரசியல் புரோக்கர் தான் பழனிசாமி.

தேனி தொகுதியில் பா.ஜ., ஆதரவு பெற்ற தினகரன் நிற்கிறார். இதே பா.ஜ.,வை பற்றி அவர் பேசியது இது தான். 'பா.ஜ., கூட்டணியில் சேருவது என்பது தற்கொலைக்கு சமம். யாராவது தெரிந்தே கிணற்றில் விழுவார்களா?' என்றார். இப்போது தெரிந்தே கிணற்றில் விழுவதற்கு வந்திருக்கிறாரா?

அவர் நோட்டாவுடன் போட்டி போட வந்திருக்கிறாரா.. அல்லது தன் மீதான வழக்குகளுக்காக வந்திருக்கிறாரா. 'மேட் இன் பிஜேபி' என்ற வாஷிங்மெஷினுக்குள் போனால் ஊழல் கறைகள் வெளுத்துவிடும்.

இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களுக்கு பணப் பரிமாற்றம் செய்து அந்நிய செலாவணி வழக்கில் சிக்கியவர். பெரா சட்டங்களை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர் அவர் தான்.

ஜெயலலிதா இருந்தவரையில் கார்டனுக்குள் நுழைவதற்கான தடை பட்டியலில் தினகரன் இருந்தார். அவரின் மறைவுக்குப் பிறகு சசிகலாவால் கட்சிக்குள் சேர்க்கப்பட்டு இப்போது பா.ஜ.,வுக்குள் நுழைந்திருக்கிறார்.

பன்னீர்செல்வம் 2 முறை முதல்வராக இருந்தவர். அவரை ராமநாதபுரத்தில் போட்டியிட வைத்துள்ளனர். தேர்தலில் பா.ஜ.,வுக்கு கொடுக்கும் அதே தண்டனையை இவர்களுக்கு கொடுக்க வேண்டும். கீ கொடுத்த பொம்மையாக அ.தி.மு.க.,வை பா.ஜ., ஆட்டுவிக்கிறது.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்