மக்களிடம் சொல்ல மோடியிடம் எதுவும் இல்லை: கார்கே
லோக்சபா தேர்தலுக்கான பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். "நாட்டு மக்களுக்கு சொல்வதற்கு மோடியிடம் எதுவும் இல்லை என்பதை தேர்தல் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது" என, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. சங்கல்ப் பத்திரம் என்ற தலைப்பில் 14 முக்கிய வாக்குறுதிகள் இதில் இடம் பெற்றுள்ளன.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியதாவது:
வேளாண் பெருமக்களின் வருமானத்தை இரட்டிப்பாக்கப் போவதாகவும் விவசாய பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்கப் போவதாகவும் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
ஆனால், தனது பதவிக்காலத்தில் அவர் எதுவும் செய்யவில்லை. இது குறித்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர்.
இளைஞர்கள் வேலையில்லாமல் தவிக்கின்றனர். நாட்டில் விலைவாசி அதிகரித்துள்ளது. பணவீக்கம் உயர்ந்துள்ளது. ஆனால், விலைவாசி உயர்வைப் பற்றியும் வேலையில்லா திண்டாட்டம் குறித்தும் மோடிக்கு கவலையில்லை. நாட்டு மக்களிடம் சொல்வதற்கு அவரிடம் எதுவும் இல்லை.
கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளுக்கு எதுவுமே பா.ஜ., அரசு செய்யவில்லை. பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை நம்பக் கூடாது. மக்களுக்கான நல்ல திட்டங்கள் என்று எதுவும் இல்லை என்பது அவர்களின் தேர்தல் அறிக்கை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாசகர் கருத்து