தமிழகத்தில் பிறக்காத மறத்தமிழர் மோடி: அண்ணாமலை பேச்சு
"தி.மு.க.,வை பொறுத்தவரை முதல் 10 நாள்கள் கூட்டணியை வைத்து நாடகம் போடுவார்கள். கடைசி பத்து நாள்கள் சம்பாதித்த பாவப் பணத்தை மக்களிடம் தருவார்கள்" என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:
பிரதமர் மோடி தமிழகம் வந்தால் சிலருக்கு பிடிப்பதில்லை. குறிப்பாக தி.மு.க., தலைவர் ஸ்டானுக்கு பிடிப்பதில்லை. வேடந்தாங்கல் பறவையைப் போல தமிழகத்திற்கு மோடி வருவதாக ஸ்டாலின் சொல்கிறார்.
பறவையைப் போல பாசமாக மக்களைப் பார்க்க வருகிறார். அவர் கோபாலபுரத்தில் ஒளிந்திருக்கவில்லை. மோடியை வேடந்தாங்கல் பறவை என்று சொன்னால் நாங்கள் பெருமையாக எடுத்துக் கொள்கிறோம்.
உங்களைப் போல ஒரு குடும்பத்திற்காக பிரதமர் வேலை செய்யாமல் இந்தியாவுக்காக வேலை செய்கிறார். அதனால் அடிக்கடி தமிழகம் வருகிறார். தமிழகத்தில் முதல்வர் செயல்பாடு என்பதே இல்லை. தென் தமிழகத்தில் வெள்ளம் வந்தால் டில்லியில் மீட்டிங் போடுகிறார்.
சென்னையில் வெள்ளம் வந்தால் 4 நாட்கள் கழித்து கையில் கிளவுஸ் மாட்டிக்கொண்டு வெளியில் வருகிறார். தமிழக அரசியல் வரலாற்றில் செயல்படாத அரசுக்கு முதல் பரிசை தருவது என்றால் அதை தி.மு.க.,வுக்கு தான் தர வேண்டும்.
70 ஆண்டுகால ஆட்சியில் இதுபோன்ற மோசமான ஆட்சியை யாரும் பார்த்தது கிடையாது. தி.மு.க.,வை பொறுத்தவரை முதல் 10 நாள்கள் கூட்டணியை வைத்து நாடகம் போடுவார்கள். கடைசி பத்து நாள்கள் சம்பாதித்த பாவப் பணத்தை மக்களிடம் தருவார்கள்.
இனி, தி.மு.க., ஓட்டுக்கு பணம் தந்தால் அது கஞ்சா மூலம் வந்த பணம் என்பதை நீங்கள் மறந்துவிடாதீர்கள். மோடி அன்பை மட்டுமே கொண்டு வந்திருக்கிறார். தமிழகத்தில் பிறக்காத மறத்தமிழன் என்றால் அது மோடி மட்டுமே.
அவர் எங்கு சென்றாலும் தமிழை மட்டுமே பேசி கொண்டிருக்கிறார். நீலகிரி லோக்சபா தேர்தலில் ஆ.ராசா டெபாசிட் கூட வாங்கக் கூடாது. 2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டு ஊழலுக்காக சிறை சென்றவர்கள் தான் ராசாவும், கனிமொழியும். இவர்களை சிறைக்குத் தள்ளியது அவர்களின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தான்.
நாட்டில் உள்ள லோக்சபா தொகுதிகளிலேயே உள்ள மோசமான எம்.பி., ஆ.ராசா மட்டுமே. அடுத்த 7 நாள்கள் நாம் கடினமாக உழைத்து மோடியை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து