கோவைக்கான 6,500 கோடி முதலீட்டை தடுத்த பா.ஜ., : ஸ்டாலின் குற்றச்சாட்டு
"தேர்தல் பத்திரம் என்ற நடைமுறையை சட்டபூர்வமாக்கி ஊழல் செய்தார்கள். பிற கட்சிகள் நிதி வாங்கினார்கள் என்றால் அந்த நடைமுறையை நீங்கள் கொண்டு வந்தது தான் காரணம்" என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
கோவையில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:
நாடு சந்திக்க உள்ள இரண்டாம் விடுதலைப் போரில் காங்கிரசின் கைகளை வலுப்படுத்த தி.மு.க., துணை நிற்கிறது. சோதனைக் காலத்தில் காங்கிரசுடன் இருக்கக் கூடிய கூட்டணிக் கட்சியாக தி.மு.க., இருக்கிறது. இந்த தேர்தலின் கதாநாயகன் காங்கிரசின் தேர்தல் அறிக்கை தான்.
தி.மு.க., வலியுறுத்தும் சமூகநீதிக் கொள்கைகள் காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் பிரதிபலிக்கிறது. கூட்டங்களில் பேசும் மோடி, கடந்த 10 ஆண்டுகால சாதனைகளைப் பேசுகிறாரா.. இண்டியா கூட்டணிக் கட்சிகளை விமர்சித்துப் பல்லவி பாடுகிறார். தொடர்ந்து, குடும்ப கட்சி என்கிறார், ஊழல் கட்சி என்கிறார்.
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். யாரும் நேரடியாக பதவிக்கு வருவதில்லை. மக்கள் எடை போட்டு வாக்களித்தால் தான் அவர்கள் பதவிக்கு வர முடியும். மோடி எங்களை மட்டும் அவமதிக்கவில்லை. எங்களைத் தேர்வு செய்த கோடிக்கணக்கான மக்களை அவமதிக்கிறார்.
ஊழலுக்கு ஒரு யுனிவர்சிட்டியை கட்டினால் அதற்கு வேந்தராக இருக்கும் தகுதி அவருக்குத் தான் உள்ளது. தேர்தல் பத்திரம் என்ற நடைமுறையை சட்டபூர்வமாக்கி ஊழல் செய்தார்கள். பிற கட்சிகள் நிதி வாங்கினார்கள் என்றால் அந்த நடைமுறையை நீங்கள் கொண்டு வந்தது தான் காரணம்.
ஈ.டி, ஐ.டி, சி.பி.ஐ., என பா.ஜ.,வின் கூட்டணி அமைப்புகளின் மூலம் மிரட்டி பணம் பறித்தனர். பா.ஜ.,வுக்கு பணம் கொடுத்த கம்பெனிகள் மீது எப்போது ரெய்டு நடந்தது, எப்போது பணம் கொடுத்தார்கள் என்ற தகவல்கள் வெளிவருகின்றன. அப்படியிருக்கும் போது ஊழலைப் பற்றி பிரதமர் பேசலாமா?
பி.எம்.கேர்ஸ் நிதி பற்றிக் கேட்டால் அது தனி அறக்கட்டளை என்கிறார்கள். அதற்காக வசூலான ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களுக்கு இதுவரை பதில் இல்லை. பா.ஜ., ஆட்சியில் நடந்த தவறுகளை அறிக்கையாக சி.ஏ.ஜி., வெளியிட்டது. இதை வெளியிட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்தது ஏன்?
காங்கிரஸ் ஆட்சியில் 526 கோடி ரூபாய்க்கு ரபேல் ஒப்பந்தம் போடப்பட்டது. அதை 1670 கோடிக்கு வாங்கினார்கள். இதனால் பயன் அடைந்தவர்கள் யார் என காங்கிரஸ் கேட்கிறது. இதற்கு மோடி இதுவரையில் பதில் சொல்லவில்லை. கார்ப்பரேட் கம்பெனிகளின் கடன் தள்ளுபடி குறித்து ராகுல் கேட்டபோது அவரை விமர்சித்தார்கள்.
தமிழகத்துக்கு 10 ஆண்டுகளில் கொண்டு வந்த சிறப்புத் திட்டங்களைப் பற்றி மோடியால் சொல்ல முடியவில்லை. இன்னொரு புறம் தமிழகத்தை சீரழித்த பழனிசாமி. யார் எதிர் அணி என்று கூட தெரியாமல் ரகசிய கூட்டணிக்கு ஆதாயம் தேடுவதற்காக வந்திருக்கிறார்.
'பா.ஜ., உடன் கூட்டணி முறிந்துவிட்டது. ஆனால், பா.ஜ.,வை எதிர்த்துப் பேச முடியாது. அது கூட்டணி தர்மம்' என்கிறார். கடந்த 3 ஆண்டுகளில் தமிழக அரசு எத்தனையோ சாதனைகளை செய்துள்ளது. அதை அடையாளம் காட்டி ஓட்டு கேட்கிறோம்.
தொழில்வளம் மிகுந்த கோவையை பா.ஜ., நாசம் செய்துவிட்டது. கருப்பு பணத்தை பறிக்கிறோம் என்ற பெயரில் ஏழைகளின் சுருக்குப் பையை பறித்தார்கள். அடுத்து, ஜி.எஸ்.டியை கொண்டு வந்து முதலாளிகளாக இருந்தவர்களை கடனாளிகளாக மாற்றினார்கள்.
'கொங்கு எனக்கு நெருக்கமான பகுதி' என மோடி பேசினார். தமிழகத்துக்கான வளர்ச்சிப் பணிகளை தடுப்பதாக மோடி சொன்னது எவ்வளவு பெரிய பொய். இந்த மேடையில் பகிரங்கமாக ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறேன். தமிழகத்தைச் சேர்ந்த மிகப் பெரிய தொழில் நிறுவனம் ஒன்று 6500 கோடி ரூபாயை முதலீட்டை கோவையில் மேற்கொள்வது என முடிவானது.
நாங்களும் அவர்களிடம் பேசி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தோம். ஆனால், அவர்களை மிரட்டி அந்த தொழிலை குஜராத்துக்கு கொண்டு சென்றுவிட்டனர். கோவைக்கு வரவேண்டிய செமிகண்டக்டர் திட்டத்தை மிரட்டி மடைமாற்றியது பா.ஜ.,
கோவையில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா. அமைதியான இடத்தில் இருந்து தான் தொழில் வளரும். பா.ஜ., போன்ற கலவரக் கட்சிகளை விட்டால் தொழில் வளர்ச்சி போய்விடும்.
'தமிழகத்தின் வளர்ச்சியை தடுப்பது யார்?' என்று மக்களுக்குத் தெரியும். 'இட்லி பிடிக்கும், தமிழ் பிடிக்கும்' என பேசும் மோடியின் முகமூடி கிழிந்துவிட்டது. தமிழகத்தின் வளர்ச்சியை தடுத்தாலோ தமிழ் பண்பாட்டின் மீது தாக்குதல் நடத்தினாலோ பதில் என்னவாக இருக்கும் என்பதை தேர்தல் நாளில் காட்ட வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
வாசகர் கருத்து