என்னிடமே பொய் சொன்னவர் தான் மோடி: ஸ்டாலின்
"தமிழகத்துக்கான திட்டங்களை நிறைவேற்ற நான் தடையாக இருப்பதாக மோடி சொல்கிறார். நானும் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். என்ன திட்டம் என இதுவரை மோடி சொல்லவில்லை" என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் ராமநாதபுரம், தூத்துக்குடி தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
தூத்துக்குடி மழை வெள்ளத்தின்போது மக்களோடு மக்களாக நின்று கனிமொழி உதவினார். இதை குடும்ப அரசியல் என பழைய பல்லவியை மோடி பாடுவார்.
எங்கள் மீது எந்தக் குற்றச்சாட்டும் வைக்க முடியாதவர்கள் செய்யும் அவதூறு இது. நாங்கள் உழைப்பதற்காக அரசியலுக்கு வந்துள்ளோம். ஊர் சுற்றுவதற்காக அல்ல. மக்கள் பணியை எப்படிச் செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்தவர் கருணாநிதி. ஒவ்வொரு தொண்டனுக்கும் அவர் கற்றுக் கொடுத்தார். அதனால் தான் சொல்கிறோம், நாங்கள் குடும்ப கட்சி தான் என்று.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் நன்மை செய்கிற கட்சியாக தி.மு.க., இருக்கிறது. . காலை முதல் மாலை வரை மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவதற்கு எங்களை ஒப்படைத்திருக்கிறோம். மொழி, இனம், பண்பாட்டு ரீதியில் ஒடுக்கப்பட்டதை எதிர்த்து தான் தி.மு.க., உருவானது. உங்களுக்கு இது கசக்கத் தான் செய்யும்.
துப்பாக்கி சூடு சம்பவம்
தூத்துக்குடி என்றாலே கடந்த ஆட்சியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தான் நினைவுக்கு வரும். அங்கு 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை மறக்க முடியாது. அதை நடத்தியவர், பழனிசாமி. தமிழக வரலாற்றில் அ.தி.மு.க., ஆட்சியால் வைக்கப்பட்ட பெரிய கரும்புள்ளி அது.
அப்படியொரு சம்பவத்தை டி.வி.,யில் பார்த்து தெரிந்து கொண்டேன் என நெஞ்சில் ஈரம் இல்லாமல் பழனிசாமி பேட்டி கொடுத்தார். 'உள்துறையை கையில் வைத்திருந்த முதல்வரின் பேச்சா இது?' என நாடே கொந்தளித்தது. கடப்பாரையை விழுங்கிவிட்டு கசாயத்தை குடித்தது போல அவர் பொய் சொன்னார்.
அவர்கள் ஆட்சியில் அமைக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில், 'பழனிசாமி சொன்னது பொய்' என தெரியவந்தது. கமிஷன் விசாரணையில் சாட்சியாக அன்றைய தலைமைச் செயலாளர், டி.ஜி.பி, உளவுத்துறை ஐ.ஜி என அனைவரும் விசாரிக்கப்பட்டனர்.
அவர்கள் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில், 'பழனிசாமிக்கு தெரிந்து தான் நடந்தது' என்பது உறுதியானது. தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்றதும் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின்படி நடவடிக்கை எடுத்தோம். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு சட்டரீதியாக போராடி வெற்றி கண்டோம்.
பழனிசாமி கொடுத்த 2 மகிழ்ச்சி
தனது ஆட்சியின் அவலங்களை மக்கள் மறந்திருப்பார்கள் என பழனிசாமி நினைக்கிறார். மீண்டும் பிரசாரம் செய்யத் துவங்கிவிவட்டார். திருச்சியில் 2 நாள்களுக்கு முன்னால் பேசிய பழனிசாமி, எனக்கு இரண்டு மகிழ்ச்சிகளை கொடுத்திருக்கிறார்.
ஒன்று, தி.மு.க.,வுக்கும் அ.தி.மு.க.,வுக்கும்தான் போட்டி என்றார். அந்தளவுக்கு அவருக்குப் புரிதல் இருப்பதில் மகிழ்ச்சி. எங்கள் சாதனைகளையும் உங்கள் துரோகங்களையும் எடை போட்டு மக்கள் தீர்ப்பு வழங்கட்டும். நேற்று அவர் யாருடன் இருந்தார், இன்று யாருடன் இருக்கிறார், நாளை யாருடன் இருப்பார் என்பதை என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்து, என்னைத் தொடர்ந்து உதயநிதியை விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார். இது இரண்டாவது மகிழ்ச்சி. விமர்சனங்கள் ஆக்கப்பூர்வமாக இருந்தால் யார் சொல்கிறார்கள் எனப் பார்க்க மாட்டோம். மக்கள் பயன் அடைகிறார்களா என்பது தான் முக்கியம்.
பா.ஜ., கொடுத்த ஸ்கிரிப்ட்
கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை படுகுழியில் தள்ளியது பா.ஜ., அரசு. 'மோடி தான் எங்கள் டாடி' என தூக்கிச் சுமந்தவர்களுக்கு பா.ஜ., ஒரு ஸ்கிரிப்ட் கொடுத்துள்ளது. பா.ஜ.,வுக்கு எதிரான வாக்குகள் பிரியும் என்பது தான் அந்த ஸ்கிரிப்ட்.
பா.ஜ.,வை விமர்சித்து இதுவரை ஒரு வார்த்தை கூட பழனிசாமியிடம் இருந்து வரவில்லையே. எஜமான விசுவாசம் தடுக்கிறதா. எந்நாளும் உங்களுக்கு பா.ஜ.,தான் எஜமானர்களா. அவர்களின் பாதம் தாங்கிகளா நீங்கள். தமிழக மக்களுக்கு துரோகம் செய்யும் கொள்கையற்ற கூட்டணி இது.
இன்னொரு பக்கம் அவரது எஜமானர் மோடி வந்திருக்கிறார். தமிழக மீனவர்களுக்கு எதிரான சம்பவங்கள் அதிகமானது பா.ஜ., ஆட்சியில் தான். விஷ்வ குரு என சொல்லும் மோடி, மீனவர்களின் நலனுக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. தமிழக மீனவர்களைக் காப்பாற்றாத மோடி, எங்கள் மீது குறைகளை சொல்கிறார்.
மோடி மாடலா?
அவரது பிரசாரத்தில் எதிர்க்கட்சிகளுக்கே அதிக நேரத்தை செலவு செய்கிறார். பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்டு ஆளுக்கு 15 லட்சம் தருவேன் என்றார். 15 ஆயிரம் தந்தாரா... அல்லது 15 ரூபாயாவது தந்தாரா. சுருக்குப் பையில் உள்ள பணத்தைக் கூட உருவ பார்க்கிறார்.
'ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பேன்' என்றார். அதை செய்தாரா. விவசாயிகளின் வருமானம் 2 மடங்கு உயர்ந்துவிட்டதா.. மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு விவசாயிகள் வெயில், மழையில் கஷ்டப்படுவதைப் பார்த்து சந்தோஷப்பட்டார். விவசாயிகளை எதிரிகளைப் போல நடத்தியது தான் மோடி மாடலா.
'வீடு இல்லாதவர்களுக்கெல்லாம் வீடு தருகிறேன்' என்றார். பேர் மட்டும் பிரதமர் வீடு கட்டும் திட்டம். அதில், 60 சதவீத பணம் மாநில அரசு தான் தர வேண்டும். ஆனால், தங்கள் திட்டம் என ஸ்டிக்கர் ஒட்டிவிட்டு பிரசாரம் செய்கிறார். அதனால் தான் வாயால் வடை சுடுவார் மோடி என்கிறோம்.
2014ல் வாக்கு கேட்டு வரும்போது, 'ராமேஸ்வரத்தை உலகப் புகழ்பெற்ற சுற்றுலாதளமாக மாற்றுவேன்' என்றார். சொன்னபடியே மாற்றிவிட்டாரா. 'ராமேஸ்வரம் - தனுஷ்கோடிக்கு இடையில் ரயில் பாதை அமைக்கப்படும்' என்றார். அதையும் செய்யவில்லை.
உங்கள் மனதுக்கும் தமிழகத்துக்கும் ரொம்ப தூரம். தமிழகத்துக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் நான் தடையாக இருப்பதாக சொல்கிறார். நானும் நாள்தோறும் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். அப்படி என்ன திட்டத்தைத் தடுத்தோம் என மோடியால் சொல்ல முடியவில்லை.
காலை உணவுத் திட்டம், பெண் பிள்ளைகளுக்கு மாதம் ஆயிரம், நான் முதல்வன் திட்டம் என பள்ளி முதல் கல்லூரி மாணவர்கள் வரையில் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம். மகளிர் உரிமைத் திட்டம் மூலம் 1 கோடியே 15 லட்சம் சகோதரிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திய துணிச்சலோடு வாக்கு கேட்க வந்திருக்கிறேன். யாரைப் பற்றியும் கவலைப்படாமல் நிற்கிறேன். இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் என்ன செய்யப் போகிறோம் என தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளேன்.
மோடி தந்த பரிசு
இந்த வாக்குறுதிகள் நிறைவேற நீங்கள் இண்டியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும். அப்போது தான் பாஜ., என்ற பேரிடரில் இருந்து நாட்டைக் காப்பாற்ற முடியும். தூத்துக்குடி வெள்ளத்தின் போது மக்களை பார்க்க மோடி வந்தாரா. அணைக்கட்டுகள், குளங்களில் ஏற்பட்ட உடைப்புகளை சரிசெய்ய 250 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கியிருக்கிறேன். இதையெல்லாம் மாநில நிதியில் இருந்து கொடுத்துள்ளோம்.
இரண்டு மாபெரும் இயற்கை பேரிடர்களை சந்தித்தோம். இதற்காக 37 ஆயிரம் கோடி நிதி கேட்டோம். மத்திய அரசு தரவில்லை. அதை ஒரு காரணமாக நான் சொல்லவில்லை. வெள்ளம் பாதித்தபோது, பிரதமரிடம் இருந்து போன் வந்தது. 'வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட நிர்மலா சீதாராமனை அனுப்பி வைப்பேன்' என்றார். அவர் வந்துவிட்டு சென்ற பிறகு நிதி தராமல், அதை பிச்சை என கொச்சைப்படுத்தினார்.
மக்களுக்கு சொல்லும் பொய்யை மோடி எனக்கும் பரிசாக தந்தார். என்னிடமே பொய் சொன்னவர் தான் மோடி. தமிழகத்தின் வழியில் ஒட்டுமொத்த நாடும் தயாராகிவிட்டது. உங்கள் ஓட்டு தமிழகத்தையும் இந்தியாவையும் காக்கட்டும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
வாசகர் கருத்து