காங்., தேர்தல் அறிக்கை ஹீரோவா? அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு உ.பி.,க்கள் ஆதரவு
தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் எப்போதும் இல்லாத அளவிற்கு பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அதே நேரம் 'இந்த தேர்தலில் இந்தியாவின் கதாநாயகனாக இருப்பது காங்., தேர்தல் அறிக்கை' என பெருமையோடு குறிப்பிட்டு, அக்கட்சி தலைவர்களை விட, தேர்தல் அறிக்கையை ஒருபடி 'துாக்கிப் பிடிப்பது' உ.பி.,க்களை எரிச்சலடைய வைத்துள்ளது.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் 'தமிழகத்திற்கு நீட் தேர்வுக்கு விலக்கு, கவர்னர் பதவி தேவையில்லை. அவருக்கு அதிகாரம் வழங்கும் பிரிவு 361 நீக்கப்படும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்...' என பெரும்பாலும் தேசிய கட்சிகள் செயல்படுத்தும் விஷயங்களை, 64 பக்க அறிக்கையாக வெளியிட்டது.
இதுகுறித்து தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் தி.மு.க.,அமைச்சர்கள், மா.செ.,க்கள் தான் தங்கள் பணத்தை செலவிடுகின்றனர்.
ஆனால் ஒவ்வொரு பொதுக் கூட்டத்திலும் தி.மு.க., தேர்தல் அறிக்கையை பெரிதாக குறிப்பிடாமல் காங்., தேர்தல் அறிக்கையை 'கதாநாயகன்' என குறிப்பிட்டு அக்கட்சியையே துாக்கி பிடிக்கிறார் முதல்வர்.
தமிழக மீனவர்களின் முக்கிய பிரச்னையான 'கச்சத்தீவு உரிமையை மீட்க வேண்டும்' என்பது காங்., தேர்தல் அறிக்கையில் இடம் பெறவில்லை. இதனால் அக்கட்சி மீது அதிருப்தி நிலவும் நேரத்தில், முதல்வர் ஏன் இப்படி பேசுகிறார் என, புரியவில்லை.
பா.ஜ., அண்ணாமலை சமீபத்தில் 'யாரோ எழுதிக் கொடுப்பதை தான் முதல்வர் பேசுகிறார்' என குறிப்பிட்டு உள்ளார். அவர் சரியாக தான் சொல்லியிருக்கிறார் என நாங்கள் நினைக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து