ஓட்டுக்காக பொய் வேஷம் போடும் ராஜா:! பா.ஜ., வேட்பாளர் முருகன் குற்றச்சாட்டு
''ஓட்டுக்காக, ஹிந்து கடவுள்களை கும்பிடுவது போன்று நீலகிரி தொகுதி தி.மு.க., வேட்பாளர் ராஜா பொய் வேஷம் போடுகிறார்,'' என, பா.ஜ., வேட்பாளர் முருகன் பேசினார்.
நீலகிரி மாவட்டம், குன்னுார் அருகே, அதிகரட்டி கரியபெட்டன் அய்யன் கோவிலில், பா.ஜ., வேட்பாளர் முருகன் சுவாமி கும்பிட்டு தேர்தல் பிரசாரத்தை துவக்கினார்.
அதில் அவர் பேசியதாவது:
நீலகிரி பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பசுந்தேயிலைக்கு நியாயமான விலை என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. மாநில அரசும், இங்குள்ள எம்.பி., ராஜாவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேயிலை பிரச்னைக்கு நிரந்தர தீர்வுக்கு மத்திய அமைச்சர் பியுஷ் கோயலிடம் வலியுறுத்தப்பட்டது.
இதன் மூலம் அமுல் கூட்டுறவு நிறுவனத்துடன் ஆய்வு செய்து, நீலகிரி தேயிலை வர்த்தகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொலைநோக்கு பார்வை இல்லாத நிலையில் நீலகிரி சுற்றுலா உள்ளது.
மத்திய அரசு, வீடு கட்டும் திட்டம், விவசாயிகள் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தி, வளர்ச்சியடைந்த தேசமாக நாட்டை மாற்றி வருகிறது.
ஏழை எளிய மக்களுக்கு, 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு ரேஷன் மூலம், 3 ஆண்டுகளாக வழங்கப்படுகிறது. இதை மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு பிரதமர் நீட்டித்து கொடுத்துள்ளார்.
ஆனால். இந்த அரிசியை மக்களுக்கு வழங்குவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அனைவருக்கும் உணவு திட்டத்தின் கீழ் எந்தெந்த அதிகாரிகள் தவறு செய்கின்றனரோ, அவர்கள் ஜூன் மாதத்திற்கு பிறகு ஜெயிலுக்கு செல்வர்.
இவ்வாறு முருகன் பேசினார்.
அருவங்காடு அருகே, காரக்கொரை இளித்தொரை கிராமங்களுக்கு வருகை தந்த முருகனுக்கு பரிவட்டம் சார்த்தி, படுக இன பாரம்பரிய வெள்ளை உடை அணிவித்து மலர் துாவி வரவேற்றனர். பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்ட பிறகு, படுக இன மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து படுகரின பாரம்பரிய நடனமாடி, 'ஜன எல்லார்கு நமஸ்காரா 'என, படுக மொழியில் பேசி ஓட்டு கேட்டார். அனைவரும் இந்த தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிப்பதாகதெரிவித்தனர்.
வாசகர் கருத்து