நாட்டை சூழ்ந்துள்ள 2 ஆபத்துகள்: பட்டியலிட்ட ப.சிதம்பரம்

"கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் கார்ப்ரேட்டுகள் வாங்கிய 11 லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்துள்ளனர். அப்படியிருக்கும் போது மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்ய முடியாதா?" என, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் கூறியதாவது:
காங்கிரசின் தேர்தல் அறிக்கையை தயாரிக்க நான்கு மாதங்கள் எடுத்துக் கொண்டோம். ஆனால், 14 நாள்களில் பா.ஜ., தனது தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது. இதற்கான குழுவையே மார்ச் 30ல் தான் நியமித்தனர். அதற்குள் 15 லட்சம் பரிந்துரைகளை அக்குழு பரிசீலித்ததாக கூறுகிறார்கள். இதற்காக அவர்களுக்கு கின்னஸ் சாதனை தான் தர வேண்டும்.
அவர்களின் தேர்தல் அறிக்கையில் புதிதாக சொல்வதற்கு எதுவும் இல்லை. தற்போது செயல்பாட்டில் உள்ள திட்டங்களையே புதிதாக கூறியுள்ளனர். குறிப்பாக, இந்தியாவில் 5 கோடி மக்கள் ஏழ்மையில் இருப்பதாக நிதி ஆயோக் கூறும் நிலையில், 80 கோடி மக்களுக்கு இலவச ரேசனை பா.ஜ அறிவித்தது ஏன்?
அடுத்து, அனைத்து ஊர்களுக்கும் குழாய் வாயிலாக எரிவாயு கொண்டு செல்வதாக கூறுகின்றனர். பல ஊர்களுக்கு இன்னும் தண்ணீரே சென்று சேரவில்லை. எரிவாயு சிலிண்டர் விலை அதிகமாக இருப்பதால் மக்கள் வாங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
அதேபோல், கல்விக்கடனை தள்ளுபடி செய்ய பா.ஜ., மறுக்கிறது. தற்போது நிலுவையில் 11,122 கோடி ரூபாய் கல்விக்கடன் உள்ளது. அதில், 4,100 கோடி ரூபாய் வராக்கடனாக இருக்கிறது. கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் கார்ப்பரேட்டுகள் வாங்கிய 11 லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்துள்ளனர். அப்படியிருக்கும் போது மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்ய முடியாதா?
தேர்தல் அறிக்கையில் 4 கோடி வீடுகளைக் கட்டிக் கொடுத்துவிட்டதாக பொய்க்கணக்கு காட்டியுள்ளனர். இவர்களின் கணக்குப் படி ஒவ்வொரு மாவட்டத்திலும் 52000 வீடுகளைக் கட்டி இருக்க வேண்டும். சிவகங்கையில் கட்டப்பட்ட 52,000 வீடுகளை பா.ஜ., அரசால் காட்ட முடியுமா?
மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை பா.ஜ., நிறைவேற்றி இருந்தாலும் இன்னும் அமலுக்கு வரவில்லை. பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை பா.ஜ., வேண்டும் என்றே கிடப்பில் போட்டு வைத்துள்ளது.
அதேபோல், வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையைக் கொடுப்பது என்பது ஏற்கெனவே உள்ள ஒன்று தான். பழைய பல்லவிகளைப் பாடுவது எப்படி புதிய சிந்தனை ஆகும்?
நாட்டை தற்போது 2 ஆபத்துகள் சூழ்ந்துள்ளன. இந்திய ஜனநாயகத்துக்கும் சகிப்புத்தன்மைக்கும் எதிராக இந்த ஆபத்துகள் உருவாகியுள்ளன. முதலாவது, ஒரு நாடு ஒரு தேர்தல். இரண்டாவது, பொதுசிவில் சட்டம். இது மக்களைப் பிளவுபடுத்திவிடும். இதன் மூலம் ஒரு கட்சி தான் நிலைத்து நிற்கும். இதர கட்சிகளை அழித்துவிடுவார்கள்.
இந்த 2 திட்டங்களையும் செயல்படுத்துவோம் என பா.ஜ., தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. இதனை உணர்ந்து மக்கள் எச்சரிக்கையாக வாக்களிக்க வேண்டும். இந்த திட்டங்கள் இந்தியாவை சர்வாதிகார பாதைக்கு அழைத்துச் செல்லும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாசகர் கருத்து