Advertisement

சைலன்ட் ஆன 'மாஜி'க்கள், மா.செ.,க்கள்: தனி ஆளாக போராடும் பழனிசாமி

தமிழக தேர்தல் களம் மிகவும் விறுவிறுப்படைந்திருப்பது போல வெளிப்பூச்சுக்கு தெரிந்தாலும், மூன்று முக்கியத் தலைவர்களின் பிரசாரத்தை மையமாக வைத்தே தேர்தல் களம் சுழன்று கொண்டிருக்கிறது. என்னதான் பா.ஜ.,வுக்காக வட நாட்டு தலைவர்கள் பலரும் தமிழகத்தில் முகாமிட்டு பிரசாரம் செய்தாலும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்கும் பிரசாரம் மட்டுமே பரபரப்பாக பேசப்படுகிறது.

அதில் ஸ்டாலினுக்கும், அண்ணாமலைக்கும் கட்சியினர் ஓரளவுக்கு ஈடுகொடுத்து தேர்தல் பணியாற்றுகின்றனர். ஆனால் பழனிசாமிக்கு கட்சியின் முக்கிய பிரமுகர்களே ஒத்துழைப்பு வழங்காமல், தேர்தல் பணியில் இருந்து ஒதுங்கி உள்ளனர். குறிப்பாக, முன்னாள் அமைச்சர்கள், மா.செ.,க்கள் என பலரும் தேர்தல் பணிக்கு தலைகாட்டாமல் இருப்பது, அக்கட்சியினரை சோர்வடைய செய்திருக்கிறது.

ஆனாலும், யாரையும் நம்பாமல் தன்னந்தனியாக தேர்தல் களத்தை எதிர்கொண்டு வருகிறார் பழனிசாமி.

ஜெயலலிதா இருந்த வரை, ஒவ்வொரு தேர்தலிலும், அ.தி.மு.க.,வின் வேட்பாளர் தேர்வே வித்தியாசமாக இருக்கும். முக்கிய நிர்வாகிகள், புதுமுகங்கள், பெண்கள் என கலவையாக, வேட்பாளர் பட்டியல் அமையும். எதிர்பார்ப்பவர்கள் ஏமாற்றமடைவதும், எதிர்பார்ப்பு இல்லாதவருக்கு வாய்ப்பு கிடைப்பதும் சர்வ சாதாரணமாக ஒவ்வொரு தேர்தலின் போதும் நடக்கும்.

பண வசதி இல்லாதோரையும், கட்சிக்கு விசுவாசமாக இருந்தால், வாய்ப்பு கொடுத்து வெற்றி பெற வைப்பதை வாடிக்கையாக்கி இருந்தார். அவர் யாரை நிறுத்தினாலும், கட்சியினர் வெற்றிக்கு கடுமையாக உழைத்தனர். வேட்பாளருக்கு எதிராக யார் செயல்பட்டாலும், கட்சி பதவியிலிருந்து துாக்கி எறிந்து விடுவார்.

அவர் மறைவுக்கு பின், கட்சியின் பொதுச்செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டாலும், அவர் விருப்பப்படி கட்சியை நடத்த முடியவில்லை. மா.செ.,க்களை மாற்ற திட்டமிட்டார். முடியாததால் திட்டத்தை கைவிட்டுவிட்டார்.

லோக்சபா தேர்தல் நெருங்கியதும், கடந்த சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த, முன்னாள் அமைச்சர்கள் பலரை, தேர்தலில் நிற்கும்படி பழனிசாமி கூறினார். பலமான கூட்டணி அமையும் என, எதிர்பார்த்து ஆரம்பத்தில் சம்மதித்தவர்கள், கூட்டணிக்கு யாரும் வரவில்லை என்றதும், போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கிக் கொண்டனர்.

பொதுச்செயலர் நேரடியாக அழைத்து நிற்கும்படி கூறியும் மறுத்துவிட்டனர். சரி நல்ல வேட்பாளரை கூறுங்கள் என்றபோதும், தகுதியான நபர்களை அடையாளம் காட்டவில்லை. வேறு வழியின்றி பழனிசாமி, தேர்தலில் பெரும் தொகை செலவிட முன் வந்தவர்களை, வேட்பாளர்களாக களம் இறக்கினார்.

ஒன்றிரண்டு பேர் தவிர, அனைவரும் புதுமுகங்கள். ஒரே ஒரு பெண் மட்டும் வாய்ப்பு பெற்றார். ஒவ்வொரு தொகுதிக்கும், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.,க்கள் மற்றும் மாவட்ட செயலர்கள் என, மூன்று பேர் முதல் எட்டு பேரை பொறுப்பாளர்களாக நியமித்தார்.

ஆனால், அவர் எதிர்பார்த்தபடி, தேர்தல் பணிகள் நடக்கவில்லை. முன்னாள் அமைச்சர்கள், மா.செ.,க்களில், பெரும்பாலானோர் வேட்பாளரிடம் இருந்து, பணத்தை கறப்பதிலேயே குறியாக உள்ளனர்; தேர்தல் வேலையில் ஆர்வம் காட்டவில்லை.

சில வேட்பாளர்கள், மா.செ.,க்கள் கேட்ட பணத்தை கொடுத்துவிட்டு, அவர்கள் மற்றவர்களுக்கு பணம் கொடுக்காமல் இருப்பதைக் கண்டு, சொல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

வடசென்னை லோக்சபா தொகுதியில், பகுதி செயலருக்கு 50,000; வட்டச் செயலர்களுக்கு 25,000; பாகப்பொறுப்பாளர்களுக்கு 5,000 ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட மா.செ.,க்கள் தங்களிடம் வேட்பாளர் வழங்கிய பணத்தை, முறையாக நிர்வாகிகளுக்கு வழங்கவில்லை. இதனால், அங்கு பணி செய்ய கட்சியினர் ஆர்வம் காட்டவில்லை.

மத்திய சென்னையில், கூட்டணி கட்சியான தே.மு.தி.க., வேட்பாளர், அ.தி.மு.க., - மா.செ.,க்கள் கேட்ட பணத்தை கொடுத்துள்ளார். அவர்களில் ஒருவர் பணத்தை வாங்கிக் கொண்டு, எந்த செலவும் செய்யவில்லை. மேலும், தான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் எனக் கூற, வேட்பாளர் செய்வதறியாமல் தவித்து வருகிறார்.

இதுபோன்ற நிலை மாநிலம் முழுதும் உள்ளது. திருவள்ளூர் உட்பட சில மாவட்டங்களில், கோஷ்டி பிரச்னையால், யார் கூறுவதை கேட்பது என தெரியாமல், வேட்பாளர்கள் தவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் தொகுதியில், வேட்பாளர் பணத்தை வாரி இறைத்தபோதும், அவர் உள்ளூர்க்காரர் இல்லை என, கட்சியினர் தேர்தல் பணியில் சுணக்கமாக உள்ளனர். பொறுப்பாளர்களை சரிகட்ட வேட்பாளர் பணத்தை கொட்டிக் கொடுத்த போதும், பொறுப்பாளர்கள் பொறுப்பாக தேர்தல் வேலை பார்க்கவில்லை.

பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மா.செ.,க்கள், இவர்களை ஏன் நாம் கஷ்டப்பட்டு வெற்றி பெற வைக்க வேண்டும் என, பெயரளவுக்கு பிரசாரம் செய்கின்றனர். சில மாவட்டங்களில், சில நிர்வாகிகள் எதிர்க்கட்சியினருடன் கை கோர்த்துள்ளனர்.

சொந்த கட்சி வேட்பாளர்களுக்கே இதுதான் நிலை என்றால், கூட்டணி கட்சியான தே.மு.தி.க., வேட்பாளர்கள் நிலை இன்னும் மோசம். இதுகுறித்து, பழனிசாமியிடம் முறையிட்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து, யாரையும் நம்பாமல், தனியே தேர்தல் பணியாற்றி வருகிறார் பழனிசாமி. தினமும் இரு மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார். கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஒத்துழைப்பு இருந்தால், கணிசமான தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெறும் என்பது, கட்சியினர் கருத்தாக உள்ளது.

இதுகுறித்து, கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

கட்சி தலைமை, வசதி படைத்தவர்களையே வேட்பாளர்கள் ஆக்கி உள்ளது. அவர்கள் வென்றால், அவர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் கிடைத்துவிடுமோ என்ற அச்சம் பலருக்கு உள்ளது. இதனாலேயே தேர்தல் வேலையில், பலரும் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.

பெயரளவுக்கு பிரசாரம் நடக்கிறது. பல இடங்களில் அந்த பணிகளையும் பழனிசாமியே ஆள் வைத்து, பணம் கொடுத்து செய்யும் நிலை உள்ளது.

வேட்பாளர்கள் கொடுத்த பணத்தையே முறையாக செலவழிக்காத நிர்வாகிகள், ஓட்டுக்காக மக்களை எப்படி கவருவர் என்ற சந்தேகம், கட்சியினருக்கு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்