ராகுல் வருகையால் மோடியின் மொத்த பிரசாரமும் குளோஸ்: ஸ்டாலின் பெருமிதம்
"பழனிசாமிக்கும் தமிழக பா.ஜ.,வுக்கும் தான் பிரச்னை. அவருக்கும் மோடி, அமித்ஷாவுக்கும் இடையில் எந்தப் பிரச்னையும் இல்லை. 'யார் விசுவாசமான அடிமை?' என்பதில் தான் பிரச்னை" என, தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
திருப்பூரில் நீலகிரி தி.மு.க., வேட்பாளர் ஆ.ராசா, திருப்பூர் இ.கம்யூ., வேட்பாளர் சுப்பராயன் ஆகியோரை ஆதரித்து ஸ்டாலின் பேசியதாவது:
இது மிக முக்கியமான தேர்தல். ஜனநாயகத்தைக் காத்து சர்வாதிகாரத்தை வீழ்த்தும் தேர்தல் இது. நேற்று நடந்த ராகுலின் ஒரே கூட்டத்தில் மொத்த பா.ஜ.,வும் குளோஸ். பிரதமர் மோடியின் மொத்த பிரசாரப் பயணத்தையும் ராகுலின் வருகை காலி செய்துவிட்டது.
'இரு தத்துவங்களுக்கு இடையே ஆன போர்' என ராகுல் கூறினார். நான் தொடர்ச்சியாக பேசி வருவதே ராகுலின் பேச்சிலும் எதிரொலித்தது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு முன்னேறிக் கொண்டிருக்கிறோம். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முதலில் இடஒதுக்கீட்டை ரத்து செய்வார்.
சமூகநீதி என்றாலே பா..ஜ.,க்கு அலர்ஜி. நாடு விடுதலையடைந்தபோது, 'பெற்ற சுதந்திரத்தை ஒழுங்காக காப்பாற்ற மாட்டார்கள்' என்று சொன்னார்கள். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இந்தியா இன்று இருக்க காரணம், அரசியல் அமைப்புச் சட்டம் தான்.
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக அம்பேத்கரின் அரசியல் சட்டத்தை மாற்றிவிடுவார். மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது என்பது அரசியல் சட்டத்துக்கும் ஜனநாயகத்துக்கும் ஒட்டுமொத்த நாட்டுக்கும் பேராபத்து.
10 ஆண்டுகாலமாக பா.ஜ., ஆட்சியை பார்த்துவிட்டோம். பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை எல்லாம் எவ்வளவோ உயர்ந்துவிட்டது. தொழில் வளர்ச்சி வீழ்ந்துவிட்டது. வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. மோடி மீண்டும் வந்தால் இந்தியா சர்வாதிகார நாடாக மாறிவிடும். நாட்டில் வறுமை அதிகரித்துவிடும்.
நேற்று ஒரு செய்தி வெளிவந்தது. திருப்பூரை சேர்ந்த சகோதரி ஒருவர், ஓட்டு கேட்டு வந்த பா.ஜ.,வினரிடம் ஜி.எஸ்.டி தொடர்பாக ஒரு கேள்வியை கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.,வினர் அந்த சகோதரியை தாக்கியுள்ளனர். இது தான் பா.ஜ., பெண்களுக்கு கொடுக்கும் மதிப்பு.
மக்களை மதிக்காமல் அராஜகமும் கலவரமும் செய்யும் பா.ஜ., திருப்பூரை மணிப்பூராக மாற்றிவிடும். அவர்களை உள்ளே அனுமதித்தால் தொழில் வளர்ச்சி போய்விடும். தொழில் நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியாது.
இந்தியாவின் பன்முகத்தன்மையை காப்பாற்றி வந்துள்ளோம். வேற்றுமை கொண்ட நாட்டில் ஒற்றுமையை உருவாக்கி காப்பாற்றி வந்துள்ளோம். 'இந்திய நாடு நமக்கானது' என எல்லோருக்கும் பொதுவான ஆட்சி முறையைக் காப்பாற்றி வந்துள்ளோம். இப்படிப்பட்ட இந்தியாவை மோடி சிதைக்கப் பார்க்கிறார்.
அதனால் தான் இந்தியா முழுமைக்கும் உள்ள ஜனநாயக சக்திகள் நாட்டைக் காக்க ஒன்று சேர்ந்துள்ளோம். இண்டியா கூட்டணி அரசு மத்தியில் அமைந்ததும் நாங்கள் செய்ய உள்ள திட்டங்களை தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறோம். அது காங்கிரசின் தேர்தல் அறிக்கையிலும் எதிரொலித்தது.
மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, 'புதிய இந்தியாவை உருவாக்குவோம்' என்றார். உலகளாவிய பட்டினி குறியீட்டில் 125 நாடுகளில் இந்தியா 111வது இடத்தில் உள்ளது. அடுத்து, மோடி ஆட்சிக்கு வந்தபோது இந்தியாவின் கடன் 58 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது 155 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது தான் பா.ஜ.,வின் நிதி மேலாண்மை.
மோடி வருவதற்கு முன்பு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59 ரூபாயாக இருந்தது. இன்று 84 ரூபாயாக சரிந்துள்ளது. இந்த வீழ்ச்சி தான் மோடியின் சாதனை. ஊடக நிறுவனங்களால் மோடி ஆட்சியில் நிம்மதியாக செயல்பட முடிகிறதா.
நாட்டில் 32 சதவீத மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனர். 42 சதவீத மக்கள் சமையல் எரிவாயுவை பயன்படுத்தவில்லை. 30 சதவீத மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதி இல்லை. 41 சதவீத மக்களுக்கு வீடு இல்லை. மோடியின் புதிய இந்தியா இப்படித் தான் உள்ளது.
மோடி ஆட்சியில் தானியங்களின் விலை 54 சதவீதம் அதிகரித்துவிட்டது. பால் பொருள்கள் 53 சதவீதமும் எண்ணெய் விலை 48 சதவீதமும் காய்கறி விலை 48 சதவீதமும் மருத்துவ செலவுகள் 71 சதவீதமும் கல்வி செலவுகள் 61 சதவீதமும் அதிகரித்துவிட்டன. இது தான் மோடி சொன்ன வளர்ச்சியா?
10 ஆண்டுகளில் மோடி சொன்ன வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் பா.ஜ., அரசின் நிதி நெருக்கடிகளை மீறி ஏராளமான சாதனைகளை செய்துள்ளோம். தி.மு.க.,வின் திட்டங்களால் ஒரு குடும்பத்துக்கு மாதம் ஐந்தாயிரம் போய் சேருகிறது.
மேற்கு மண்டலத்தின் மீது மோடி நடத்திய இரட்டை தாக்குதல் தான். பணமதிப்பிழப்பும் ஜி.எஸ்.டி.,யும். நேற்று ஒருவர் வீடியோவில் பேசியதைக் கேட்டேன். அவர், 'மேற்கு மண்டலத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு குறு நிறுவனங்கள் வளர்வதற்கு மன்மோகன் சிங் ஆட்சி தான் காரணம்' என மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.
பஞ்சு, நூல் உற்பத்தி விலையைக் குறைக்க எவ்வளவோ போராட்டங்களை தொழில் நிறுவனங்கள் நடத்தின. தவணை தவறிய வட்டியை செலுத்த 6 மாதமாக இருந்த அவகாசத்தை மூன்று மாதமாக குறைத்து அவர்களின் சொத்துகளை ஏலம் விட வைத்தது தான் மோடியின் சாதனை.
இங்கு தொழில் துவங்க முன்வந்த நிறுவனத்தை மிரட்டி குஜராத்துக்கு கொண்டு சென்றனர். பி.எல்.ஐ., திட்டம் எனக் கூறி பல்லாயிரம் கோடி ரூபாய்களை வசூலித்து குஜராத்தில் தொழில் துவங்க சலுகை தருகின்றனர். சிறு குறு நிறுவனங்கள் வளர்ந்தால் தான் தமிழகம் வளரும்.
பழனிசாமிக்கும் தமிழக பா.ஜ.,வுக்கும் தான் பிரச்னை. அவருக்கும் மோடி, அமித்ஷாவுக்கும் இடையில் எந்தப் பிரச்னையும் இல்லை. 'யார் விசுவாசமான அடிமை?' என்பதில் தான் பிரச்னை. பா.ஜ.,வை எதிர்த்து பழனிசாமியால் கட்சியை நடத்த முடியாது.
சசிகலாவிடம் இருந்து பன்னீர்செல்வத்தை பிரித்து தர்மயுத்தம் நடத்த வைத்ததே பா.ஜ., தான். இரு துருவங்களாக இருந்த பன்னீரையும் பழனிசாமியையும் சேர்த்து வைத்தது பா.ஜ. இப்போது தினகரன், பன்னீரை மிரட்டி கூட்டணியில் சேர்த்ததும் பா.ஜ.,தான்.
சசிகலாவை, 'அரசியல் பக்கம் வரக் கூடாது' என பா.ஜ., மிரட்டியது. டி.வி. சீரியலில் அடிக்கடி திடீர் காட்சிகள் நடப்பது போல பா.ஜ., செயல்படுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.,வும் அவர்களின் தொங்கு சதைகளும் படுதோல்வி அடைவார்கள்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
வாசகர் கருத்து