கிடப்பில் 50 ஆண்டு கோரிக்கை : ஆளுங்கட்சிக்கு எதிராகும் விவசாயிகள்

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே முகவனுார் பொன்னனியாறு மற்றும் கண்ணுாத்து அணைக்கட்டுகள் உள்ளன. இப்பகுதி கிராமங்களில் கிணற்றுப் பாசனம் மற்றும் ஆழ்குழாய் பாசனம் மூலம் விவசாயம் நடக்கிறது. இவ்விரு அணைக்கட்டுகளிலும் நேரடியாக பாசனம் பெறும் விவசாய நிலங்கள் குறைவு. ஆனால் இந்த அணைகளில் நீர் தேக்கினால், நிலத்தடி நீர்மட்டம் மேம்படும். அதனால், கிணறு மற்றும் ஆழ்குழாய் மூலம் நடக்கும் விவசாயம் தங்குதடையின்றி நடக்கும்.

இந்த அணைக்கட்டுகளில் ஆண்டு முழுவதும் நீர் தேக்கி வைக்கும் அளவுக்கு, கரூர் மாவட்டம், மாயனுார் கதவணையில் இருந்து, பொன்னனியாறு மற்றும் கண்ணுாத்து அணைகளுக்கு குழாய் மூலம் நீர் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த, 50 ஆண்டுகளுக்கு மேலாக, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளவில்லை.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 40 லட்சம் ரூபாய் இத்திட்ட ஆய்வுக்காக ஒதுக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் நிதி ஒதுக்கப்படவில்லை. கடந்த சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று இப்போதைய பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் உறுதி அளித்தார். அதன்பின் அவரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் உள்ள விவசாயிகள் மற்றும் அப்பகுதி கிராம மக்கள், தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிராக ஓட்டுப்போட முடிவெடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொன்னனியாறு அணைப்பகுதி மூத்த விவசாயி அற்புதசாமி கூறியதாவது:

இத்திட்டம் நிறைவேறினால், 500க்கும் மேற்பட்ட கிராமங்களில், 5,000 ஏக்கருக்கு மேல் விவசாயம் செழிக்கும். மேற்கண்ட கிராமங்களில் குடிநீர் பிரச்னை இருக்காது. மணப்பாறை நகரில் குடிநீர் பிரச்னை வராது. திருச்சி - பிராட்டியூர் வரை பாசனம் பெருகும். வெள்ள காலங்களில் தண்ணீர் தேங்காமல் வடிந்து விடும்.

காவிரி - குண்டாறு - வைகை திட்டத்திலேயே இதையும் சேர்த்து இருக்கலாம். காவிரி கரையோரத்திலேயே அத்திட்டத்தை கொண்டு சென்று விட்டனர். இத்திட்டம் சாத்தியமில்லை என்று நீர்வளத்துறை அதிகாரிகள் கூறிய நிலையில், அதே மாயனுாரில் இருந்து, குழாய் மூலம் ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு, எங்கள் ஊர் வழியாக தண்ணீர் கொண்டு செல்ல பணி நடக்கிறது.

அரசியல்வாதிகள், அதிகாரிகள் தொடர்ந்து ஏமாற்றுவதால், இப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் வரும் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிராகத்தான் ஓட்டு போட முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினர்.

நிறைவேற்றணுமா?

கடந்த சில மாதங்களுக்கு முன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷிடம், விவசாயி ஒருவர், 'பொன்னனியாறு திட்டம் நிறைவேற்ற மனு கொடுத்து, தேர்தலில் ஓட்டு கேட்க வந்தபோது, வாக்குறுதி கொடுத்தீர்கள்' என்று ஞாபகப்படுத்தினார். அதைக்கேட்ட அமைச்சர் மகேஷ் கோபத்துடன், 'நான் அதை மட்டுமா வாக்குறுதி கொடுத்தேன்' என்று கடிந்து கொண்டு, வேண்டா வெறுப்பாக மனுவை வாங்கிச் சென்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்