நிறைவேறாத கோரிக்கை குறையாத கொதிநிலை !
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, தி.மு.க., தன் 'போராளி' அமைப்புகள் வாயிலாக ஏகப்பட்ட போராட்டங்களை தூண்டிவிட்டது. அவர்களில், டாஸ்மாக் போராட்ட பிரபல கோவன் போன்றோர் தி.மு.க., ஆட்சி அமைந்த பின் காணாமல் போயினர். ஆனால் டாஸ்மாக் காணாமல் போகவில்லை.
அதே போல், அரசு ஊழியர்களை துாண்டிவிட்டும் போராட்டங்களை கிளறியது தி.மு.க., அதில், சில போராட்டங்களில், அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலினே பங்கேற்று, தி.மு.க., ஆட்சி அமைந்ததும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உத்தரவாதம் கொடுத்தார்.
தன், 2021 தேர்தல் பிரசாரத்திலும் அதையே சொன்னார். தி.மு.க., ஆட்சி அமைந்து மூன்றாண்டுகள் ஆகப்போகின்றன. டாஸ்மாக் போல அரசு ஊழியர்களின் பிரச்னைகளும் காணாமல் போகவில்லை. ஆனால், கோவன் காணாமல் போனது போல அரசு ஊழியர்கள் காணாமல் போகவில்லை.
இதுவரை எந்த அரசும் கண்டிராத எண்ணிக்கையில், அரசு மற்றும் பொது துறை ஊழியர்களின் போராட்டங்களை, கடந்த 2023ல் தி.மு.க., அரசு கண்டது.
கோரிக்கைகள் என்ன?
அரசு, பொது துறை மற்றும் கூட்டுறவு ஊழியர்களுக்கென பல்வேறு சங்கங்கள் உள்ளன. ஒவ்வொரு சங்கமும் வெவ்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடுகின்றன. ஆனால், அனைத்து சங்கங்களும் பொதுவாக கேட்கும் விஷயங்கள் இவை:
1. சரண் விடுப்பு ஒப்படைப்பை மீண்டும் அமல்படுத்த வேண்டும்
2. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
3. சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வேண்டும்
4. பணி நிரந்தரம் வேண்டும்
5. காலி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.
இவற்றில், பழைய ஓய்வூதிய கோரிக்கையை தான் அரசு ஊழியர்கள் மிகவும் முக்கியமானதாக கருதுகின்றனர். 'தமிழகத்தின் நிதி நிலையை கருதினால், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடியாது' என்று பழனிசாமி முதல்வராக இருக்கும்போது தெளிவாக விளக்கிவிட்டார். இருப்பினும், தி.மு.க., அரசு ஊழியர்களின் ஆசையை அந்த நேரத்தில் துாண்டிவிட்டது.
நீட் தேர்வு ஒழிப்புக்கு தங்களிடம் ரகசியம் இருப்பதால் தங்களால் இயலும் என்பது போல் அரசு ஊழியர்களுக்கு உத்தரவாதம் கொடுத்தது.
அரசு ஊழியர்கள் தவிர; போக்குவரத்து கழகம், டாஸ்மாக் என பொது துறை ஊழியர்களும் ரேஷன் ஊழியர்களும் தங்கள் கோரிக்கைகள் சார்ந்து இதே நிலையில் தான் உள்ளனர்.
தி.மு.க., விசுவாசிகள்
அரசு ஊழியர்கள் தி.மு.க., விசுவாசிகள் என்பதும் தி.மு.க., ஆட்சியில் அரசு ஊழியர் போராட்டங்கள் சுமுகமாக முடிக்கப்படும் என்பதும் அரசியல் ஆய்வாளர்கள் வழக்கமாக முன்வைக்கும் கருத்துகள்.
மாறாக, அ.தி.மு.க., ஆட்சியில் அரசு ஊழியர் போராட்டங்கள் நடந்தால் தடாலடியாக கையாளப்படுவது வழக்கம். பழனிசாமி ஆட்சி காலத்தில் நடந்த ஆசிரியர் போராட்டத்தின் போது, அவர், ஆசிரியர்களுக்கு எதிராக வீரியமாக பேசியது அனைவரும் அறிந்ததே.
முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் மேற்கண்ட இரண்டுமே நடக்கவில்லை.
கடந்த 2021ல் தி.மு.க., ஆட்சி அமைத்தவுடன், தங்கள் கோரிக்கைகளோடு அரசை அணுகியபோது, 'இப்போது தான் ஆட்சி அமைந்துள்ளது, சற்று பொறுங்கள்' என்று சொல்லி அரசு ஊழியர்களை ஆட்சியாளர்கள் அனுப்பிவிட்டனர். சங்கங்கள், 'நம் அரசு தானே' என்று பொறுமை காத்தன. கடந்த 2022ல் அணுகியபோது, 'நிதி நிலை சரியில்லை சற்று பொறுங்கள்' என்று சொல்லி அனுப்பிவிட்டனர்.
மீண்டும், சங்கங்கள், 'நம் அரசு தானே' என்று பொறுமை காத்தன. ஆனால், 2023ல், ஆட்சியாளர்கள், எந்த நடவடிக்கையும் எடுக்க முனைப்பு காட்டவில்லை என்று தெரிந்ததும் தொடர் போராட்டங்கள் வெடித்தன. ஆனால், எந்த போராட்டத்துக்கும் ஆட்சியாளர்கள் மசியவில்லை.
அரசு ஊழியர் சங்கங்களில் பெரிய சங்கமான ஜாக்டோ- - ஜியோ மற்ற சங்கங்களோடு இணைந்து, கடந்த பிப்., 26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடக்கும் என அறிவித்தது. உடனடியாக, சங்க நிர்வாகிகளை அழைத்து அவசர அவசமாக, அமைச்சர்கள் எ.வ.வேலு, மகேஷ், முத்துசாமி ஆகியோர் பேசி சரிக்கட்டினர். முதல்வர் ஸ்டாலினையும் சந்திக்க வைத்தனர்.
'உங்களுக்கு நான் செய்யாமல் வேறு யார் செய்வார்' என ஸ்டாலின் சொன்னதை கேட்டு கூலான சங்க நிர்வாகிகள் போராட்டத்தை கைவிட்டனர். சங்கத்தினர் முடிவை, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏற்கவில்லை. தேர்தல் நெருங்கும் நேரம்; இது தான் சரியான தருணம் என்றெல்லாம் பேசி புரிய வைக்கப் பார்த்தனர்.
பட்ஜெட்டில் அறிவிப்புகள் வரும் என சொல்லி, அவர்களை சரிக்கட்டிய நிர்வாகிகளுக்கு, 2024 - 25ம் ஆண்டு பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்தது. இப்போது ஒட்டுமொத்த அரசு, பொது துறை மற்றும் ரேஷன் ஊழியர்கள் அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் சுமுகமான தீர்வும் இல்லை, தடாலடியான எதிர்ப்பும் இல்லை. போராட்டங்களின் போது வாக்குறுதிகளை அரசு கொடுக்கிறது. பின், கிடப்பில் போடுகிறது. 'நம்ப வைத்து கழுத்தறுக்கிறார்கள்' என்பதே அரசு ஊழியர் எண்ணத்தின் சாராம்சமாக இருக்கிறது.
எத்தனை ஓட்டு?
ஏறத்தாழ 11 லட்சம் அரசு ஊழியர்கள் பணியில் இருக்கின்றனர். தவிர, ஏழு லட்சம் பேர் ஓய்வூதியர்கள். போக்குவரத்து கழகங்களில் 1.40 லட்சம் ஊழியர்கள் தவிர 92 ஆயிரம் ஓய்வூதியர்கள். இவர்கள் தவிர ரேஷன் ஊழியர்கள் 25 ஆயிரம் பேர் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் 24,300 பேர். ஆக, ஏறத்தாழ 21 லட்சம் பேர், தங்கள் சம்பளத்திற்கும் ஓய்வூதியத்திற்கும் அரசை நம்பி இருக்கிறார்கள். அவர்கள் கணக்குப்படி, குடும்பத்தோடு சேர்த்து கணக்கிட்டால், கிட்டத்தட்ட ஒரு கோடி வாக்குகள் அவர்கள் கையில் இருக்கிறது.
என்னதான் அதிருப்தி இருந்தாலும் அரசு ஊழியர்கள் தி.மு.க.,விற்கு எதிராக வாக்களிப்பது அரிது. அதனால் தான் ஒரு சில சங்கங்கள் தாங்கள் எதிர்கட்சிக்கு வாக்களிக்காமல் 'நோட்டா'வுக்கு வாக்களிக்கப் போவதாக அறிவித்து உள்ளனர். ஆனால், இந்த முறை, இந்த மாபெரும் ஓட்டு வங்கியில் கணிசமான பகுதி அரசுக்கு எதிராக மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். தி.மு.க., எப்படி எதிர்கொள்ளப்போகிறது?
* தமிழக ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத் தலைவர் ஜி.ராஜேந்திரன்: 'நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு துறைகளின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளை, ஒரே துறையின் கீழ் கொண்டு வருவோம்' என, தி.மு.க., வாக்குறுதி அளித்தது; ஆனால் நிறைவேற்றவில்லை. ரேஷன் கடைகளை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகள், அவற்றின் பணியாளர்களின் சிக்கல்களையும் மன வேதனைகளையும் புரிந்து கொள்வதே கிடையாது.எதுவும் நடக்கவில்லை''இருபது ஆண்டுக்கு மேலாக பணியில் உள்ளோம்; இதுவரை நிரந்தரம் செய்யப்படவில்லை. பதவி உயர்வு, அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்கப்படவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் பணி விதிமுறைகள் உருவாக்கப்படவில்லை. - - தனசேகரன், பொதுச்செயலர், டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம்.
மருத்துவ பணியாளர் தேர்வாணையம் என்ற எம்.ஆர்.பி., வாயிலாக தேர்வாகி, பல ஆண்டுகளாக, 8,000க்கும் மேற்பட்டோர், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். பணி நிரந்தரம் செய்வோம் என்றவர்கள் செய்யவில்லை. பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் பலன் இல்லை. அதேநேரம், எம்.ஆர்.பி., வாயிலாக செவிலியர் பணி நியமனம் நடக்கிறது. - -- சசிகலா, தலைவர், தமிழ்நாடு எம்.ஆர்.பி., நர்ஸ்கள் மேம்பாட்டு சங்கம்.
* அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்க தலைவர் கதிரேசன்: நீதிமன்றங்கள் உத்தரவிட்ட பிறகும், அகவிலைப்படி உயர்வை வழங்காமல், அரசு மேல்முறையீடு செய்து காலம் தாழ்த்தி, ஓய்வூதியர்களை வஞ்சித்து வருகிறது. போக்குவரத்து ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு மட்டும் வழங்காமல் வஞ்சிக்கின்றனர். பாதிக்கப்பட்டோர் ஓட்டளிக்க மாட்டோம் என அனைத்து மாவட்ட கலெக்டர்களிடமும் மனு அளித்துள்ளோம். அதிருப்தி எதிரொலிக்கும்* அ.தொ.பே., செயலர் கமலக்கண்ணன்: 14வது புதிய ஊதிய ஒப்பந்தம் இன்னும் போடவில்லை. தேர்தல் அறிவிப்புக்குமுன் ஊதிய ஒப்பந்த பேச்சு துவங்க வேண்டும். கோரிக்கைகள் தீர்க்கப்படாததால், தேர்தலில் தி.மு.க.,வுக்கு எங்கள் எதிர்ப்பை பதிய வைப்போம்.
டாக்டர்களுக்கு கூட...!' அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை: கொரோனா சிகிச்சை பணியில் உயிரிழந்த டாக்டர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கப்படும், அரசு மருத்துவர்களுக்கு சம்பளம் உயர்வு உள்ளிட்ட எந்த கோரிக்கையையும் அரசு நிறைவேற்றவில்லை.
* ஊதிய முரண்பாட்டை நீக்கி, சமவேலைக்கு சம ஊதியம் கோரி, தொடர் போராட்டம் நடத்தினோம். ஊதிய கமிட்டி அமைத்து, 3 மாதங்களாகி விட்டது. எதுவும் நடக்கவில்லை.- ஜே.ராபர்ட், பொது செயலர், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம்.-*சட்டசபை தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட எந்த வாக்குறுதியையும் ஆசிரியர்களுக்கு செய்து கொடுக்கவில்லை. - பா.ஆரோக்கியதாஸ், மாநில தலைவர், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை.* இந்தியாவில், 7 மாநிலங்களில், புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது. தமிழகமும் அதை பின்பற்ற வேண்டும். மாநிலம் முழுதும், 6.5 லட்சம் ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கையாக இந்த திட்டம் உள்ளது. அதிருப்தி தேர்தலில் வெளிப்படும்.- பி.பிரெடரிக் ஏங்கல்ஸ், மாநில ஒருங்கிணைப்பாளர், சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம்.பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக, சொன்ன தி.மு.க., அதை செய்யவில்லை. - சேசுராஜா, மாநில தலைவர், தமிழ்நாடு பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கம்.
வாசகர் கருத்து