இரட்டை இலைக்கு தடையில்லை: ஓ.பி.எஸ்., கோரிக்கை நிராகரிப்பு
"லோக்சபா தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் அ.தி.மு.க., போட்டியிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை" என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதையடுத்து, தேர்தல் கமிஷனில் ஓ.பி.எஸ்., சார்பாக இரண்டு மனுக்களை பெங்களூரு புகழேந்தி கொடுத்துள்ளார். ஒரு மனுவில், 'நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க., லோக்சபா தேர்தலில் இரட்டை இலையை எங்களுக்கு ஒதுக்க வேண்டும்.
வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் ஏ மற்றும் பி படிவத்தில் கையொப்பம் இடுவதற்கு அனுமதிக்க வேண்டும் அல்லது சின்னத்தை முடக்க வேண்டும். சின்னத்தை முடக்கினால் இரு பிரிவினருக்கும் சுயேச்சை சின்னத்தை வழங்கலாம்' எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவில், நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளையும் குறிப்பிட்டிருந்தார்.
மற்றொரு மனுவில், 'இரட்டை இலை சின்னத்தை எங்கள் அணிக்கு ஒதுக்க வேண்டும். ஒருவேளை ஒதுக்காவிட்டால் பக்கெட் வாளி சின்னத்தை ஒதுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
அ.தி.மு.க., கொடி, சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் நிரந்தர தடை விதித்துவிட்ட நிலையில், தேர்தல் கமிஷன் மூலம் இரட்டை இலையைப் பெற முடியும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில், 'லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதற்கு எந்த தடையும் இல்லை' என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து