10 ஆண்டுகள் வெறும் டிரெய்லர் தான்! : பிரதமர் மோடி சிறப்பு பேட்டி

அனைத்து எதிர்க்கட்சிகளும் பா.ஜ.,வைக்கூட தாக்குவதில்லை, இவரைத்தான் தாக்குகிறார்கள்.

அவ்வளவு எதிர்ப்பையும் மீறி, மக்களின் நல்லாசியை மட்டுமே நம்பி, தேர்தலை எதிர்கொள்கிறார் நமது பிரதமர் மோடி.

தாங்கள் இதுவரை நாட்டுக்காக செய்தது வெறும் 'டிரெய்லர்' தான் என்று சொல்லும் இவர், தேர்தலால் ஒரு சலனமும் இல்லாமல், நாட்டிற்கான அடுத்த வளர்ச்சி திட்டங்களை ஆர்வமாக நம்மிடம் பகிர்ந்து கொண்டார். டில்லியில் தன் இல்லத்தில்,

நமது நாளிதழுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டி:



பத்து வருடம் பிரதமராக நீடிப்பதே ஒரு சாதனை தான். உங்கள் சாதனை என்று சொல்லிக் கொள்ள எத்தனையோ இருந்தாலும், உங்களுக்கு ரொம்பவும் திருப்தி தரக்கூடியது என்று எதை சொல்வீர்கள்?
நான் என்ன சாதித்தேன் என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும். 'நாடுதான் முதலில்' என்கிற தாரக மந்திரத்தை அரசு நிர்வாகத்தின் அடித்தளமாக மாற்றுவதற்கு, என்னால் முடிந்ததை செய்திருக்கிறேன். நோக்கம் நன்றாக இருந்தால், விளைவும் சுபமாக இருக்கும் என்பார்கள். அது எங்கள் விஷயத்தில் நிரூபணம் ஆகியிருக்கிறது. ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையிலும் ஒரு நல்ல மாற்றத்தை உண்டாக்க உழைத்தோம். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது ஒரு அரசின் கடமை என்பதை, இந்திய அரசியலில் புதிய நடைமுறையாக உருவாக்கினோம். அதுதான் இன்று, இந்தியாவை உலகின் அதிவேக வளர்ச்சி காணும் பொருளாதாரமாக துாக்கி நிறுத்தி இருக்கிறது.

எனக்கு முன்னால் இருந்தவர்களும் ஏழ்மையை ஒழிப்போம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால், ஏழைகளை நாட்டின் சுமையாக கருதினார்கள். நாங்கள் ஏழைகளை பாரமாக கருதாமல், நாட்டின் வளர்ச்சியில் அவர்களை பங்காளிகள் ஆக்கினோம். வரும் 2047க்குள், வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டிப்பிடிப்பதில், எளியவர்களின் பங்களிப்பும் கணிசமாக இருக்கும்.இந்த பத்தாண்டுகளில் நாங்கள் செய்தது வெறும் டிரெய்லர் தான்.

ஜூன் 4க்கு பிறகு நாங்கள் செய்ய இருப்பது ஏராளம். ஒவ்வொரு இந்தியனின் கனவும் ஈடேறும்வரை எனக்கு ஓய்வு என்பது கிடையாது.

வளர்ந்த இந்தியா, முன்னேறிய இந்தியா என்று அடிக்கடி சொல்கிறீர்கள். இதுவரை செய்தது டிரெய்லர் என்கிறீர்கள். வர இருக்கும் மெயின் படத்தில், மக்கள் என்ன தான் எதிர்பார்க்கலாம் என்று கொஞ்சம் சொல்லுங்களேன்?

வளர்ந்த பாரதம் என்று நான் சொல்வது, அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்த பாரதம். தொழில் செய்யவும் கல்வி கற்கவும் விரும்பும் ஒவ்வொருவருக்கும் அதற்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும் பாரதம். உலக தரத்திலான மருத்துவ வசதி, ஒவ்வொரு குடிமகனுக்கும் குறைந்த செலவில் கிடைக்கின்ற பாரதம். மக்களின் அன்றாட வாழ்க்கையை வசதியானதாக மாற்ற, ஏதுவான கட்டமைப்பு கொண்ட பாரதம். சராசரி மக்களின் வருமானம் கணிசமாக உயர்ந்திருக்கும் பாரதம்.

நமது மரபுகளையும் கலாசாரத்தையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பாரதம். எந்த படிநிலையில் உள்ளவரும் தங்கள் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள வழி

செய்யும் பாரதம். உலகமே கொண்டாடும் பாரதம். இதுதான் நான் காண விரும்பும் பாரதம்.கடந்த 10 ஆண்டுகளாக இதை நோக்கி தான் பணியாற்றுகிறோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இவற்றை நோக்கிய பணி அதிவேகமாக இருக்கும்.

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க அடிக்கல் நாட்டினீர்கள். அதுபோல, இன்னும் என்னென்ன பெரிய திட்டங்களை தமிழகத்தில் தொடங்குவீர்கள்?

குறிப்பிட்டு இப்போது எதையும் சொல்வது சரியாக இருக்காது. நாடு சுயசார்பு நிலையை அடைய வேண்டும் என்ற இலக்கை எட்டுவதற்கு, தமிழகம் முக்கியமான உந்துசக்தியாக விளங்கும். ஏனென்றால், தமிழக மக்களின் அறிவியல் ஆற்றலும், உற்பத்தி திறமைகளும், தொழில் முனைவும் அபாரமான வளர்ச்சிக்கு அச்சாரமாக அமைந்துள்ளன.

நாட்டின் தொழில் வளர்ச்சியில், தமிழ்நாடு முன்னணியில் நிற்பதற்கு தேவையான கட்டமைப்பை உருவாக்க, இந்த பத்தாண்டுகளில் நிறையவே உழைத்திருக்கிறோம்.அதற்கு முந்தைய பத்தாண்டுகளுடன் ஒப்பிட்டால், எங்கள் ஆட்சியில் ஒதுக்கீடுகள் மும்மடங்கு அதிகரித்துள்ளன. குலசேகரபட்டினம் பற்றி குறிப்பிட்டீர்கள். அணுசக்தி தொழில்நுட்பத்தில் இந்தியாவை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் ப்ரீடர் வகை உலையை, கல்பாக்கத்தில் துவக்கினேன். இந்த உலை, நமது நாட்டின் அணு சக்தி வளர்ச்சியின் அடுத்த பரிமாணம். உலகிலேயே, நாம் தான் இந்த தொழில்நுட்பத்தில் இயங்கும் கமர்ஷியல் உலை உள்ள இரண்டாவது நாடு.

ராணுவ தளவாட தொழில் தடத்தை கட்டமைத்து வருகிறோம். அதன் வாயிலாக, ஏராளமான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயன்பெறும்.திருவள்ளூரில், இந்தியாவின் முதலாவது மல்டிமோடல் சரக்கு முனையத்தை உருவாக்கி வருகிறோம். இதன் வாயிலாக, தமிழகத்தில் வர்த்தகம் பல மடங்கு உயரும். விருதுநகரில் மெகா ஜவுளி பூங்கா உருவாக்கப்பட்டு உள்ளது.

சென்னை, திருச்சி சர்வதேச விமான நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளன. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இது சுற்றுலாவை மேம்படுத்தும். தமிழகத்தில் துறைமுகங்களையும் மேம்படுத்தி வருகிறோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் உள்கட்டமைப்பு திட்டங்கள் வெகு வேகமாக செயல்படுத்தப்படும்.

சென்னை ஐ.ஐ.டி., முழுவீச்சில் 6ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில், இந்தியாவின் 6ஜி புரட்சிக்கு தமிழகம் தலைமையேற்கும். தமிழகத்தின் இளைஞர்களிடம், புத்தாக்கத்தில் முன்னோடிகளாக வரும் திறன் உள்ளது. புத்தொழில்களில் முன்னோடியாக உள்ள தமிழகத்தில், அடுத்த ஐந்தாண்டுகளில் மேலும், மேலும் தொழில்கள் உருவாக வழிவகை செய்வோம்.

கடந்த பத்தாண்டுகளாக தமிழ்மொழி மற்றும் பண்பாட்டை உலகெங்கும் எடுத்துச்சென்று உள்ளோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில், இது தீவிரப்படுத்தப்படும். தமிழக மீனவர்களுக்காக நிறைய திட்டமிட்டுள்ளோம்.மிக முக்கியமாக, தமிழகத்தில் சுற்றுலா வளர்ச்சிக்கு முதலீடு செய்ய உள்ளோம். வளர்ந்த தமிழகம், வளர்ந்த பாரதத்தின் அச்சாணியாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை. அதனால், ஒரு வாய்ப்பையும் விடாமல், தமிழகத்தை வளரச் செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்.

நீதிமன்றங்களில் ஆங்கிலம் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையை மாற்ற, கோரிக்கை நெடுங்காலமாக இருக்கிறது. இந்திய மொழிகள் வழக்காடு மொழிகளாக மாற்ற வாய்ப்பு இருக்கிறதா? உங்கள் அரசு அதற்காக முயற்சி எடுக்குமா?

முக்கியமான விஷயத்தை சுட்டிக் காட்டுகிறீர்கள். சாமானிய மக்களுக்கும் எட்டக்கூடிய நீதி பரிபாலனத்தையே நானும் விரும்புகிறேன். நீதிமன்றத்தில் உள்ளூர் மொழியில் வழக்காட வசதி வேண்டும் என்று, நானே பலமுறை கேட்டிருக்கிறேன். நிச்சயமாக அதை செய்வேன்.

ஏற்கனவே இ--கோர்ட் என்ற மென்பொருள் வாயிலாக இதற்கான முன்முயற்சி எடுக்கப்பட்டு விட்டது. இப்போது ஏ.ஐ., என்கிற செயற்கை நுண்ணறிவு நுட்பமும் கைகூடி இருப்பதால், அவரவர் மொழியில் நீதி பரிபாலனம் என்பது வேகமாகவும் பரவலாகவும் எட்டக்கூடிய இலக்காகமாறியுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் 30,000 தீர்ப்புகள், ஏ.ஐ., நுட்பத்தை பயன்படுத்தி, 16 இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டு உள்ளன என்பது நம்பிக்கை தரும் விஷயம். நீதித்துறை, மாநில அரசுகள், வழக்கறிஞர் பேரவைகள் ஆகியோருடன் தொடர்ந்து விவாதித்து வருகிறோம். சட்ட சொற்களை இந்திய மொழிகளில் சுலபமாக மாற்ற, பொது மொழிக்கோவை உருவாக்க, இந்திய பார் கவுன்சில் இரு வல்லுனர் குழுக்களை அமைத்திருப்பதும் நம்பிக்கையூட்டும் அம்சம்.

உங்கள் வெளிநாட்டு கொள்கை உலகின் பல பகுதிகளிலும் சிலாகிக்கப்படுகிறது. அந்த துறையில், இதுவரை உங்கள் அரசு சாதித்தவற்றில் மிகப்பெரியது அல்லது நம்பர் 1 என எதை சொல்வீர்கள்?

எதை எடுத்தாலும் தோண்டி துருவி பார்ப்பது, எடை போடுவது, கருத்து சொல்வது... இதெல்லாம் உங்கள் வேலை. நீங்கள்தான் அதில் எக்ஸ்பர்ட். ஆகவே அந்த வரம்புக்குள் நான் வரவில்லை.

'தேசம் முதலில்' என்று ஏற்கனவே சொன்னேன். அரசு நிர்வாகம் பற்றி சொன்ன அதே கருத்து எனது அரசின் வெளிநாட்டு கொள்கைக்கும் பொருந்தும். சண்டை நடக்கும் பகுதியில் சிக்கிக் கொண்ட இந்தியர்களை மீட்டு வருவது, அன்னிய படையிடம் சட்ட பிரச்னையில் சிக்கிய இந்தியர்களை காப்பாற்றுவது, கடல் கொள்ளையரிடம் மாட்டிக் கொண்டவர்களை விடுவித்து அழைத்து வருவது என்று, எதுவாக இருந்தாலும் நமது பிரஜைகளுக்கே முதலிடம்.

உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக அங்கே சிக்கிக் கொண்ட நமது மாணவர்களுக்கு மட்டுமின்றி, வேறு நாடுகளை சேர்ந்தவர்களுக்கும் இந்தியாவின் தேசியக் கொடியே பாதுகாப்பு அரணாக பயன்பட்ட நிகழ்ச்சியை நீங்கள் அறிந்திருப்பீர்கள். எனது அரசின் வெளிநாட்டு கொள்கை வீரியம் மிகுந்தது என்பதை விளக்க இதற்கு மேல் ஆதாரம் தேவையில்லை என நினைக்கிறேன்.

கடந்த பத்தாண்டுகளில் நமது வெளியுறவு கொள்கையின் செயல்பாடு தான் உலக அரங்கில் நமக்கு புதிய மரியாதையை ஈட்டித் தந்துள்ளது. விஷ்வ பந்து, உலகின் நண்பன் என்று மற்ற நாடுகள் இந்தியாவை மதிக்கும் நிலை உருவாகி இருக்கிறது. உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் அதில் நமது நிலைப்பாடு என்ன என்று அறிந்து கொள்வதில், அனைத்து நாடுகளும் ஆர்வமாக உள்ளன.

உலகின் நன்மைக்கு இன்றியமையாத சக்தியாக இன்றைய இந்தியா பார்க்கப்படுகிறது. வளரும் நாடுகளின் குரலாக நாம் மதிக்கப்படுகிறோம். ஜி20 அமைப்பை வழிநடத்தும் பொறுப்பு கிட்டியபோது, ஏழை ஆப்ரிக்க நாடுகளை அந்த குடையின் நிழலுக்குள் கொண்டு வந்தோம். கோவிட் பரவலின்போது 100க்கும் மேலான நாடுகளுக்கு நமது தடுப்பூசியை அனுப்பி வைத்தோம்.

இன்னும் பெருமை தருகின்ற மற்றொரு விஷயம், உலக நாடுகளில் வாழும் இந்தியர்களுடன் எனது அரசு ஏற்படுத்திக் கொண்டுள்ள பிணைப்பு. நமது ஆட்கள் சென்ற இடமெல்லாம் சாதனை படைக்கின்றனர். உலக தலைவர்கள் பலரும் இதை என்னிடம் சொல்லி மகிழ்ந்தார்கள்.

நாட்டில் லட்சக்கணக்கான கோயில்கள் இருக்கும்போது அயோத்தி ராமர் கோயில் மீது உங்களுக்கு அவ்வளவு அபிமானம் ஏன்? அதனால், நமது நாகரிகத்தில் என்ன மாற்றம் வரும்?

பிராண பிரதிஷ்டைக்கு முன்னால் நான் விரதம் இருந்து சென்று வழிபட்ட கோயில்கள் பலவும் தென்னாட்டில் அமைந்தவை. தமிழகத்தில் ஸ்ரீரங்கம் கோயிலில் கம்ப ராமாயணம் இசைத்தபோது பக்தர்கள் கண்களில் இருந்து வெள்ளமாக கண்ணீர் கொட்டியதை பார்த்தேன். அங்கு தான், 800 ஆண்டுகளுக்கு முன், முதன் முதலில், கம்ப ராமாயணம் வெளியிடப்பட்டது. தனுஷ்கோடியில் நான் மலர் தூவி வழிபட்டபோது, ஒரு அதீத, பெயரற்ற உணர்வு என்னை ஆட்கொண்டது.

தமிழகத்தில் ராமர் கோயிலை நோக்கி மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருப்பதை உணர முடிந்தது.இந்த உணர்ச்சிகள் அனைத்தையும் நான் பிராண பிரதிஷ்டைக்கு எடுத்துச்சென்றேன்.





அப்போது, ஒரு பெரும் பொறுப்பு என் மீது வைக்கப்பட்டதாக நான் உணர்ந்தேன். பல தலைமுறைகளாக, பல தியாகங்களை செய்து 140 கோடி பாரத மக்கள் அந்த தருணத்திற்காக காத்திருக்கின்றனர் என்ற உணர்வு என்னை ஆட்கொண்டது.

என் நாட்டு மக்களின் கனவு நனவாவதை உணர்ந்தேன். அப்போது, ராம் லல்லாவின் கண்களை பார்த்தபோது ஏற்பட்ட உணர்வு என்னுள் ஒரு விழிப்பை ஏற்படுத்தியது. ராம் லல்லா நம் பாரத நாட்டின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று சொல்வது போல இருந்தது. அந்த தருணம் தான் பாரதத்தின் உதயத்திற்கு தொடக்கம் என்று தோன்றியது. அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான தொடக்கப்புள்ளி அந்த தருணம் தான். அது எனக்கு மிகவும் நெருக்கமான தருணம்.

நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவினீர்கள். ஒரு ஆட்சியின் மாண்பை பிரதிபலிக்க எத்தனையோ அடையாளங்கள் இருந்தும் செங்கோலை தேர்ந்தெடுக்க என்ன காரணம்?

செங்கோலின் வரலாறு என்ன என்பதை தெரிந்துகொண்டபோது தமிழ்நாட்டின் புராதனமான வரலாறு கலாசாரம் மீது எனக்கு பிரமிப்பு ஏற்பட்டது. அது நீதி வழுவாத நல்லாட்சியின் அடையாளமாக போற்றப்பட்டதை உணர்ந்து கொண்டேன். அதனால் தான் பிரிட்டிஷ் ஆட்சி முடிந்து சுதந்திரம் கிடைத்தபோது, ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக செங்கோல் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் உருவாக்கப்பட்டு தமிழக ஆதீனங்களால் நேருவுக்கு வழங்கப்பட்ட செங்கோலின் மகத்துவத்தை காங்கிரஸ் உணரவில்லை. எனவேதான் அதை நேருவுக்கு பரிசளிக்கப்பட்ட வாக்கிங் ஸ்டிக் என்று காட்சி சாலையில் பார்வைக்கு வைத்து விட்டார்கள். அந்தக் கொடுமையால் நொந்து போய், செங்கோலின் பெருமையை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக நாடாளுமன்றத்தில் நிறுவினேன். இனி அது காலா காலத்துக்கும் அந்த அரங்கில் காலடி வைக்கும் ஒவ்வொரு எம்.பி.க்கும் நமது புராதன மாண்புகளை நினைவுபடுத்தும் குறியீடாக நிலைத்து நிற்கும்.

இன்று அது நமது அரசின் வாழும் மரபுகளில் ஒன்றாகிவிட்டது. ஜனாதிபதி, நாடாளுமன்றத்திற்கு உரையாற்ற வரும்போது, அவருக்கு முன்பாக செங்கோல் எடுத்துச் செல்லப்படுகிறது.

திடீரென கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறீர்களே, ஏன்? இந்த காலகட்டத்தில் அதற்கு என்ன அவசியம்?
கச்சத்தீவை கையில் எடுத்தது நாங்கள் இல்லை. தி.மு.க.,தான் தேவைப்படும் நேரத்தில் எல்லாம் கச்சத்தீவை கையிலெடுத்து தங்கள் தவறுகளுக்கு திரைபோட பயன்படுத்தி வந்தார்கள். அந்த விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்ன என்று இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அதை நாங்கள் ஹைலைட் செய்கிறோம்.கச்சத்தீவு பெயரை அடிக்கடி கேட்கும் தமிழக மக்களுக்கு, அதன் பின்னணியில் நடந்தது என்ன என்று தெரிந்துகொள்ள உரிமை இருக்கிறது தானே? அரசின் ஆவணங்களில் பதிவாகி உள்ள உண்மைகளை மக்களின் பார்வைக்கு வைக்கிறோம். எனது அரசு அல்ல. காங்கிரஸ் அரசு காலத்தில் நடந்தவை.

உண்மைகள் அம்பலமான பிறகு அதற்கு காரணமானவர்கள் ஏதாவது பதில் சொல்கிறார்களா? இல்லை. தமிழகத்தின் பெரிய தலைவர்கள் இந்த விஷயத்தில் வேடம் போட்ட கதை வெளியே வந்த பிறகும், அவர்களின் வழி வந்தவர்கள் ஏதேதோ சாக்கு போக்கு சொல்கிறார்களே தவிர, உரிய விளக்கம் தர தயாராக இல்லை.

கச்சத்தீவை இன்னொரு நாட்டுக்கு தூக்கிக் கொடுக்க இவர்களுக்கு அனுமதி வழங்கியது யார்? நாட்டு மக்களை கேட்டார்களா? நாடாளுமன்றத்திலோ, அமைச்சரவையிலோ விவாதித்து ஒப்புதல் பெற்றார்களா? எதற்காக நமது மீனவர்களின் நலனுக்கு எதிரான செயலை செய்ய துணிந்தார்கள்? இதற்கெல்லாம் தி.மு.க.,வும், காங்கிரசும் பதில் சொல்லியாக வேண்டும்.

நீங்கள் தமிழ் மொழிக்கு எதிரானவர், இந்தியை திணிக்க முயற்சி செய்கிறீர்கள் என தி.மு.க., சொல்கிறதே?
இந்த நாட்டின் ஒவ்வொரு அங்குலமும் எனக்கு புனிதமானது. நாட்டின் மொழிகளும் அப்படியே. இந்த அடிப்படையில் இருந்து தான் என் செயல்கள் துவங்குகின்றன. தேசிய கல்வி கொள்கையே இந்த அடிப்படையில் உருவானது தான். நாட்டில் எந்த பள்ளியில் படிக்கும் மாணவனும் தமிழ் கற்க முடியும். அரசு தேர்வுகள், சி.ஏ.பி.எப்., தேர்வுகள், வங்கி தேர்வுகள் அனைத்தையும் முதல் முறையாக தமிழில் எழுத வழி செய்து இருக்கிறோம்.

எங்கள் அரசு தான், பொறியியல் போன்ற தொழில்நுட்ப பாடங்களையும் பாரத மொழிகளில் கிடைக்கச்செய்து இருக்கிறது. தமிழ் மீது நான் கொண்டிருக்கும் அன்பையும் மரியாதையையும் தனியாக விளக்க அவசியம் இல்லை.

உலகின் தொன்மையான மொழி என்று உலகம் முழுவதும் எடுத்துச் சொல்லி பெருமைப்படுகிறேன். காசி சங்கமம், சவுராஷ்டிரா சங்கமம் என தமிழுக்கு புகழ் சேர்க்கிறேன். பாரதி பெயரில் பல்கலைகழகங்களில் இருக்கை ஏற்படுத்துகிறேன். திருவள்ளுவர் பெயரில் உலகெங்கும் மையங்கள் அமைக்க வாக்குறுதி அளித்திருக்கிறேன்.

நான் செய்வதை எல்லாம் பார்க்கும்போது, அரசியல் லாபத்துக்கு மட்டுமே தமிழை பயன்படுத்தும் தி.மு.க.,வுக்கு எரிச்சல் வரத்தான் செய்யும். நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவியதையே எதிர்த்தவர்களுக்கு தமிழ் மீது எப்படி உண்மையான பற்று இருக்க முடியும்?

உங்கள் அமைச்சர்கள் எத்தனை விளக்கம் அளித்தாலும், தமிழகத்துக்கு உரிய நிதியை உங்கள் அரசு வழங்காமல் வஞ்சிக்கிறது என்று தி.மு.க., அரசு திரும்ப திரும்ப சொல்கிறது. நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள்?

தி.மு.க.,வும் பங்கேற்ற ஐக்கிய முன்னணி ஆட்சியில், வரி பங்கீடு மற்றும் மானியமாக தமிழக அரசுக்கு கிடைத்தது 1.6 லட்சம் கோடி ரூபாய். நான் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகம் பெற்றுள்ள தொகை, 5.2 லட்சம் கோடி ரூபாய். இது அதிகாரபூர்வமான உண்மை.

உண்மைகளை மக்கள் மன்றத்தில் வைத்து விவாதிக்க வேண்டியது, பொறுப்பான நடுநிலை ஊடகங்களின் கடமை. மத்திய அரசு வழங்கும் நிதியின் பலன்கள் கடைக்கோடி தமிழருக்கு கிடைக்காமல் போனால், அதற்கான காரணம் தி.மு.க., அரசின் ஊழலும் நிர்வாக திறமையின்மையுமே.

நீண்டகாலமாக இரண்டு திராவிட கட்சிகளுக்கு தான் தமிழக மக்கள் ஓட்டு போடுகின்றனர். இந்த தேர்தலில் அதை மாற்றி பா.ஜ.,வுக்கு போட வேண்டிய அவசியம் என்ன?

மாறி மாறி அந்தக் கட்சிகளுக்கே ஓட்டு போட்டதற்கு காரணம், தமிழக மக்களுக்கு திருப்தியான மாற்று ஏற்பாடு இதுவரை கிடைக்கவில்லை. உண்மையில் அவர்கள் ஊழல், லஞ்சம், குடும்ப அரசியல் எல்லாம் பார்த்து வெறுப்பில்தான் இருக்கின்றனர். ஓட்டு போட்ட மக்களின் நலனை சிந்திக்க ஆளில்லை என்பது அவர்களுக்கு தெரிகிறது.

பா.ஜ., ஒன்றும் இப்போது முதல்முறையாக தமிழகத்தில் போட்டியிடவில்லை. எங்களுக்கு எம்.பி., - எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக மக்களிடம் நம்பிக்கையுடன் ஓட்டு கேட்கிறோம். வளர்ச்சியை, மாற்றத்தை விரும்பும் தமிழக மக்கள் நிச்சயம் ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன்.

* கடந்த சில மாதங்களில் பல முறை தமிழகத்துக்கு வந்திருக்கிறீர்கள். தேர்தலுக்காக பலமுறை தமிழகம் வரும் பிரதமருக்கு, சென்னை வெள்ளம், துாத்துக்குடி மழை வெள்ளத்தின்போது வந்து பார்க்க நேரம் கிடைக்கவில்லையா என்று தி.மு.க., கேட்கிறது. உங்கள் பதில்?

மழை வெள்ளம் ஏற்பட்டபோது தி.மு.க., அரசு என்ன செய்தது என்று மக்கள் கேட்கிறார்கள். அதற்கெல்லாம் தி.மு.க., இன்னும் பதில் சொல்லவில்லை. துாத்துக்குடி வெள்ளத்தில் மிதந்தபோது முதல்வர் ஸ்டாலின் டில்லிக்கு வந்து, அவரது கூட்டணி தோழர்களை சந்தித்து அரசியல் பேரம் பேசிக் கொண்டிருந்தார். மக்களை விட அவருக்கு அரசியல் தான் பெரிதாக இருந்தது.

சென்னையில் மழை பெய்து வெள்ளம் வருவதற்கு முன்னால், ஸ்டாலினும் அவரது அமைச்சர்களும் என்ன சொல்லிக் கொண்டு இருந்தார்கள்? எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு பிரச்னையும் வராது, ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காது என்று பொதுமக்களுக்கு திரும்பத் திரும்ப பொய் வாக்குறுதி அளித்துக் கொண்டுதானே இருந்தார்கள்?

மழை நீர் வடிகால் பணிகளை இதோ முடித்து விட்டோம், அதோ முடித்து விடுவோம் என்று கூறி மக்களை ஏமாற்றிக் கொண்டு தானே இருந்தார்கள்? வெள்ளத்தில் மக்கள் அல்லாடியபோது அரசாங்கத்தையே காணோம் என்றுதானே, சென்னைவாசிகள் ஆதங்கப்பட்டார்கள்? நாலைந்து நாளில் வெள்ளம் வடியும்போது தானே அமைச்சர் பெருமக்கள் வீதிக்கு வந்து போட்டோவும், செல்பியும் எடுத்து வலைதலங்களில் போஸ்ட் செய்தார்கள்? அதற்குள் மக்கள் மறந்திருப்பார்கள் என்று மனப்பால் குடிக்கிறதா தி.மு.க?



அடுத்த ஐந்தாண்டுகளில் தமிழகத்துக்கு என்ன உத்தரவாதம் தருவீர்கள்?



வளர்ச்சி. வாய்ப்புகள். தொழில்கள். பெண்கள் மேம்பாடு. ஊழல் ஒழிப்பு. விவசாயிகளுக்கு ஆதரவு. மீனவர் வருமானத்தை பெருக்க திட்டங்கள். போதை பொருள் பிரச்னயை ஒழித்து, டிரக் மாபியா மீது கடும் நடவடிக்கை. தமிழ் மொழி கலாசார வளர்ச்சி. சுற்றுலா மேம்பாடு. மிகச்சிறப்பான எதிர்காலம். இவை தமிழக மக்களுக்கு நான் தரும் கியாரன்டி.

காங்கிரசும் மற்ற கட்சிகளும் நிறைய இலவசங்கள் அறிவித்துள்ளன. உங்கள் தேர்தல் அறிக்கையில் இலவசம் ஏதும் இல்லையே?

ஆட்சிக்கு வருவோம் என்று காங்கிரசுக்கு நம்பிக்கை இல்லை. அதனால் வாக்குறுதிகளை அள்ளி விடுகின்றனர். அதைத்தானே அரை நுாற்றாண்டுக்கும் மேலாக செய்து கொண்டிருக்கிறார்கள்? நாங்கள் அப்படி இல்லை. மக்கள் உண்மையாக என்ன விரும்புகிறார்களோ அதை தருவதாக வாக்கு தருகிறோம்.எங்கள் அறிக்கையில் உள்ளது, செய்யக்கூடிய விஷயங்கள் மட்டுமே. கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் செய்த பணியின் நீட்சி. ஒரு விதமான பரிமாண வளர்ச்சியாக பார்க்கலாம்.

எங்கள் அறிக்கையின் ஒரே நோக்கம், நமது நாட்டை வளர்ந்த நாடாக்குவது தான். அதில், பொருளாதார வளர்ச்சிக்கு, சம வாய்ப்புக்கு, வாய்ப்புகளின் வளர்ச்சிக்கு மற்றும் கவுரவமான வாழ்க்கைக்கு தேவையானவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்