கண்டுகொள்ளாத அ.தி.மு.க.,வினர் :உள்ளடிக்கு தயாராகும் கொங்கு வேளாளர்கள்
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் கடந்த, 2011ல், ஊத்தங்கரை சட்டசபை தொகுதி உருவானது. இத்தொகுதியில், வன்னியர்கள், 27, ஆதிதிராவிடர், 17, கொங்கு வேளாள கவுண்டர்கள், 14, நாயுடு, 10 சதவீதம் பேர் உள்ளனர். இத்தொகுதி உருவானது முதல் நடந்த மூன்று சட்டசபை தேர்தல்களிலும், அ.தி.மு.க.,வே வெற்றி பெற்றது. இதற்கு கொங்கு வேளாள கவுண்டர்களின் ஓட்டு வங்கி பெரிதும் உதவியது.
ஊத்தங்கரை சட்டசபை தொகுதியில், வீரணகுப்பம், மேட்டுத்தாங்கல், கீழ்குப்பம், புதுார்புங்கனை, மூங்கிலேரி, காட்டேரி, பாவக்கல், மாரம்பட்டி, சாமல்பட்டி, இனாம் காட்டுப்பட்டி, உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளிலும் பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, கெலமங்கலம் பகுதிகளிலும் குறிப்பிட்ட அளவில் கொங்கு வேளாள கவுண்டர்கள் உள்ளனர்.
இவர்களை அ.தி.மு.க.,வினர் சந்திக்காததால், அவர்கள், அ.தி.மு.க.,விற்கு ஓட்டளிப்பதில்லை என, முடிவு செய்து உள்ளனர். தி.மு.க., கூட்டணியில் கொ.ம.தே.க., இருந்தாலும், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை.
இது குறித்து கொங்கு அமைப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்கம், அரூரில் மண்டபம், மாணவர்களுக்கு கல்வி அறக்கட்டளை உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் அரூரில் கொங்கு சமூக இளைஞர்களுக்கு, கல்விப் பயிலரங்கம் கட்டட திறப்பு விழா நடந்தது. அதில், இ.பி.எஸ்., முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி போன்ற கொங்கு சமூகத்தினர் பங்கேற்றனர். ஆனால் தற்போது அவர்களுக்கு எங்களை தெரியவில்லை.
எப்படியும் நமக்குத்தான் ஓட்டளிப்பர் என, அ.தி.மு.க.,வினர் மெத்தனமாக உள்ளனர். அதனால் எங்களை சந்தித்து ஓட்டு கேட்காத, அ.தி.மு.க.,வுக்கு நாங்கள் ஆதரவளிப்பதில்லை என முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து