5 ஆண்டுகளில் இந்தி பேசும் மாநிலமாக தமிழகம் மாறும்:சீமான் கணிப்பு
"இந்தியையும் சம்ஸ்கிருதத்தையும் படிக்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். தமிழ் மொழியை படிக்க வேண்டும் என்று சொன்னால் மொழி வெறி என பழிசுமத்துகின்றனர்" என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
நாம் தமிழர் கட்சியின் வேலூர் வேட்பாளர் மகேஷ் ஆனந்தை ஆதரித்து சீமான் பேசியதாவது:
மக்களை ஏமாற்ற நினைப்பவர்கள் தான் ஓட்டுக்கு காசு கொடுப்பார்கள். தவிர நேர்மையாக உழைக்க வேண்டும் என நினைப்பவர்கள், மக்களை ஏமாற்ற மாட்டார்கள்.
உங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டத்தோடு களத்தில் நிற்கிறேன். என் தாய் காட்டில் வேலை செய்தார். நான் மக்களுக்காக நாட்டுக்கு வேலை செய்கிறேன்.
என்னுடைய தன்னலம் என்பது என் இனத்தின் நலன் தான். இன்று என் நிலம் ஆக்ரமிக்கப்பட்டதால், அடிமைப்படுத்தப்பட்டு வருகிறோம். எந்த உரிமையும் இல்லாமல் நிற்கிறோம். காவிரியில் நீர் பெற முடியவில்லை. ஏழ்மை மற்றும் வறுமை நிலையில் தமிழகம் இருக்கிறது. இந்தியையும் சம்ஸ்கிருதத்தையும் படிக்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். தமிழ் மொழியை படிக்க வேண்டும் என்று சொன்னால் மொழி வெறி என பழிசுமத்துகின்றனர்.
'பார்லிமென்டில் பேசுவதற்கு இந்தி, ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். தமிழ் தெரிந்திருந்தால் வேடிக்தை தான் பார்த்து கொண்டிருக்க முடியும்' என்கிறார் துரைமுருகன் . இவர்கள் தான் இந்தி வேண்டாம் என்று பேசியவர்கள்.
தமிழகத்தின் வரியை எடுத்து கொள்ளும் மத்திய அரசு இரண்டு வரி தமிழில் எழுதி கடிதம் அனுப்ப முடியாதா. இதை சகித்துக் கொள்ளும் ஆட்சியாக திராவிடமாடல் அரசு உள்ளது.
இந்தியை திணித்த காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க., கூட்டணி வைத்துள்ளது. காங்கிரஸ்-பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தி பேசும் மாநிலமாக தமிழகம் மாறிவிடும். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தாய்நாட்டை மறந்துவிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து