கோரிக்கைகளை வலியுறுத்த எம்.பி., எதற்கு: அ.தி.மு.க.,வை விமர்சித்த அண்ணாமலை
"கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக, ரூ.1,445 கோடி ரூபாயை மோடி கொடுத்திருக்கிறார். ஆனால், கோவை மாநகரில் நல்ல சாலைகள் கூட இல்லை. எங்கும் குண்டும் குழியுமான சாலைகள் தான் உள்ளன" என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தனது எக்ஸ் தள பக்கத்தில் அண்ணாமலை கூறியிருப்பதாவது:
லோக்சபா தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பொறுப்பேற்பார். தி.மு.க., காங்கிரஸ் இண்டி கூட்டணியில், பிரதமர் வேட்பாளர் என்று யாருமே இல்லை.
வெறும் 21 இடங்களில் போட்டியிடும் தி.மு.க., நாட்டிற்கு என்ன செய்ய முடியும். இத்தனை ஆண்டுகளாக ஏன் எதுவும் செய்யவில்லை. இன்னொரு பக்கம் தாங்கள் தேர்தலில் ஜெயித்தால் கோரிக்கைகளை வலியுறுத்துவோம் என அ.தி.மு.க., கூறிக் கொண்டிருக்கிறது. கோரிக்கைகளை வலியுறுத்த எம்.பி., எதற்கு. மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற பா.ஜ., எம்.பி வரவேண்டும்.
பா.ஜ.,வின் 10 ஆண்டுகால ஆட்சியில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. உலக அரங்கில் வலிமையான நாடாக இருக்கிறோம். ஆனால், பிரதமரை பயன்படுத்தி கோவையை முன்னேற்ற இங்கிருந்த எம்.பி.,க்கள் தவறிவிட்டார்கள். அதை இந்த தேர்தலில் சரி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் நிச்சயம் அரசியல் மாற்றம் உருவாகும். வரும் 2026ல் சட்டசபையில் ஏற்படப் போகும் மாற்றத்துக்கு இந்த தேர்தல் அடித்தளமாக அமையும்.
கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக, ரூ.1,445 கோடி ரூபாயை மோடி கொடுத்திருக்கிறார். ஆனால், கோவை மாநகரில் நல்ல சாலைகள் கூட இல்லை. எங்கும் குண்டும் குழியுமான சாலைகள் தான் உள்ளன.
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் விற்பனையும் அதிகரித்துவிட்டது. பள்ளி கல்லூரி மாணவர்கள் எதிர்காலத்தைக் காக்க, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை அடக்கப்படும்.
ஜூன் 4 தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும் 100 நாட்களில், கோவையில் போதைப் பொருள் தடுப்பு ஆணையத்தின் அலுவலகம் அமைக்கப்படும். கடந்த இருபது ஆண்டுகளாக தீர்க்கப்படாத மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் தீர்க்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து