'வீடு டூ அலுவலகம்' : வெற்றிப்பேரணிக்கு தயாராகும் பிரதமர் மோடி
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நாளை (ஜூன் 4) தேர்தல் முடிவுக்கு பின்னர் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பது உறுதியாகும் பட்சத்தில் மாலை 4 மணிக்கு பிரதமர் இல்லத்தில் இருந்து பா.ஜ., அலுவலகம் வரை தொண்டர்கள் மத்தியில் வெற்றிப்பேரணி நடத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கடந்த ஒன்றரை மாதமாக 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதன் ஓட்டு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. ஆட்சி அமைப்பதில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் 'இண்டியா' கூட்டணி இடையே போட்டி நிலவுகிறது. ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பா.ஜ., கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வென்று, நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.
கருத்துக்கணிப்பு முடிவுகள் சாதகமாக வந்துள்ளதால் பா.ஜ., தரப்பு குஷியாகியுள்ளது. நாளை ஓட்டு எண்ணிக்கையின்போது மாலைக்குள் பெரும்பான்மை நிலவரம் கிட்டத்தட்ட தெரிந்துவிடும். முடிவுகளில் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகும் பட்சத்தில் நாளை மாலை 4 மணிக்கு பிரதமர் இல்லத்தில் இருந்து பா.ஜ., தலைமை அலுவலகம் வரை தொண்டர்கள் மத்தியில் வெற்றிப்பேரணி செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இந்த பேரணியில் பா.ஜ.,வினர் பெருமளவு கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பீஹார் முதல்வர் நிதீஷ்குமார் கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி கட்சியுடன் கூட்டணியை முறித்துக்கொண்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் பா.ஜ., உடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வரானார். லோக்சபா தேர்தல் முடிவுகள் வரவுள்ள நிலையில், பிரதமர் மோடியை நிதீஷ்குமார் சந்திக்க இருக்கிறார். மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைந்தால், அவருக்கு மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்பட இருப்பதாகவும், இதற்காக அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
வாசகர் கருத்து