ஜூன் 4க்குப் பிறகு தி.மு.க.,வினர் சிறைக்கு செல்வார்கள்: ஜே.பி.நட்டா
"தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் பா.ஜ., வெற்றி பெற வேண்டும். அப்போது தான் வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்க முடியும்" என, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார்.
ராமநாதபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:
தகுதியும் திறமையும் வாய்ந்த மனிதராக பன்னீர்செல்வம் இருக்கிறார். அவருக்காக பிரசாரம் செய்வதில் எனக்கு மகிழ்ச்சி. மக்கள் பிரச்னைகளுக்காக தொடர்ந்து பன்னீர்செல்வம் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
இது லோக்சபா தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் பா.ஜ., வெற்றி பெற வேண்டும். அப்போது தான் வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்க முடியும். ஏழைகளின் வாழ்வில் முன்னேற்றம் கொடுக்கக் கூடிய ஆட்சியாக மோடி அரசு உள்ளது.
ஏழைகளுக்கு வீடு, மருத்துவக் காப்பீடு உள்பட ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ரேசன் கடைகளில் தனிநபர் ஒருவருக்கு தலா 5 கிலோ அரிசியும் பருப்பும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன்மூலம் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து பிரதமர் மோடி மீட்டெடுத்துள்ளார்.
தமிழகத்தின் சாலை வசதிகளுக்காக 48 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு விமான நிலைய விரிவாக்கம், சாலை வசதிகள் என தொடர்ந்து தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக பல திட்டங்களை மோடி செயல்படுத்தி வருகிறார்.
ஆனால், மக்கள் நலனில் தி.மு.க.,வுக்கு சிறிதும் அக்கறையில்லை. தி.மு.க., என்ற எழுத்தில் தி என்றால் டைனாஸ்டி (வாரிசு) எம் என்றால் மணி லாண்டரி (பணப்பரிமாற்றம்) கே என்றால் கட்டப்பஞ்சாயத்து.
இதன்மூலம் ஏராளமான சொத்துகளை சேர்த்துவிட்டனர். மத்தியில் ஜூன் 4ல் மோடி அரசு அமையும் போது இவர்கள் ஒன்று ஜெயிலில் இருப்பார்கள் அல்லது பெயிலில் இருப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
அ.தி.மு.க., தொண்டர்களின் உரிமையைக் காக்கும் இயக்கத்தை நடத்தும் எனக்கு ராமநாதபுரத்தில் போட்டியிட மோடி வாய்ப்பு கொடுத்தார். 10 ஆண்டுகாலத்தில் சிறப்பான ஆட்சியை மோடி தந்திருக்கிறார்.
140 மக்கள் உள்ள இந்த நாட்டில் பல்வேறு மொழிகள், கலாசாரம், மொழிவாரி மாநிலங்களை ஒரு குடையின் கீழ் உலகமே போற்றும் வகையில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.
இந்த தேர்தல், மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வருவதற்கான தேர்தல். ராமநாதபுரத்தை அனைத்து துறைகளிலும் மேம்படுத்த மோடியிடம் எடுத்துக் கூறி திட்டங்களைக் கொண்டு வருவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து