ஜனநாயகத்தைக் காக்க நடக்கும் கடைசி தேர்தல்: ராகுல் பேச்சு
"அரசியல் சட்டத்தை மாற்றுவதில் பா.ஜ., உறுதியாக உள்ளது. நாட்டின் ஜனநாயகத்தை அமலாக்கத்துறையையும் சி.பி.ஐ.,யையும் வைத்து முடக்க நினைக்கின்றனர்" என, காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி பேசினார்.
கோவையில் இண்டியா கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:
நாட்டில் இன்று தத்துவ போர் நடக்கிறது, இது மோடியின் அரசு அல்ல, அதானியின் அரசு. அவர்களுக்காகவே அனைத்தையும் பிரதமர் செய்து வருகிறார்.
துறைமுகம், விமான நிலையம் என எதுவாக இருந்தாலும் அதானிக்கு மோடி தருகிறார். மும்பை விமான நிலையத்துக்கு அதானி ஆசைப்பட்டார். அதை சில மாதங்களுக்குள் அதானிக்கு கைமாறிவிட்டது.
இது பற்றி பார்லிமென்ட்டில் பல முறை பேசியிருக்கிறேன். என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் எம்.பி., பதவியை பறித்தனர். என் வீட்டையும் பறித்தனர். அவர்கள் பறித்தால் என்ன. இந்தியாவில் லட்சக்கணக்கான மக்களின் மனதில் இருக்கிறேன்.
தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் எனக்காக கதவை திறந்து வைத்துள்ளனர். எனக்கும் உங்களுக்கும் இருப்பது அரசியல் ரீதியான உறவு அல்ல, அது குடும்ப ரீதியான உறவு.
'தமிழகத்தில் எனக்கு தோசை பிடிக்கும்' என்கிறார் மோடி. டில்லி சென்றதும் ஒரே நாடு என்கிறார். மோடிக்கு தோசை அல்லது வடை என எது வேண்டுமானாலும் பிடிக்கட்டும். தமிழகத்துக்கும் மக்களுக்கும் என்ன செய்துள்ளார்?
நான் எந்த அரசியல்வாதியையும் அண்ணா என அழைப்பதில்லை. ஸ்டாலினை மட்டுமே அழைக்கிறேன். 'அரசியலை சுத்தப்படுத்தப் போகிறேன்' என்றார் மோடி, ஆனால், தேர்தல் பத்திரம் திட்டத்தை கொண்டு வந்தார். அதை சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
பணம் தந்தவர்களின் விவரத்தை வெளியிடாமல் இழுத்தடித்தனர். பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணம் பா.ஜ.,வுக்கு சென்றுள்ளது. அமலாக்கத்துறை, சி.பி.ஐ.., வருமான வரித்துறை ஆகியவற்றை வைத்து மிரட்டி தேர்தல் நிதியை வசூலித்தனர். நிதி வந்த பிறகு வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது
பா.ஜ., செய்த ஊழலில் இது சிறிய பகுதி தான், ஆனால், அரசியலை மோடி சுத்தப்படுத்துகிறாராம். ஏழைகளுக்காக என்ன செய்தார் மோடி. கடந்த 45 ஆண்டுகளாக வேலையில்லா திண்டாட்டங்கள் அதிகரித்துள்ளன.
இது சாதாரணமான தேர்தல் அல்ல. மக்களின் மொழி, கலாசாரம், ஜனநாயகத்தைக் காக்க நடக்கும் கடைசி தேர்தல். இவை அனைத்தையும் எங்களால் காக்க முடியும்.
மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் அரசியல் சாசனம் நசுக்கப்படுகிறது, பல்கலைக்கழகங்களில் உள்ள பல துணைவேந்தர்கள், ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு ஆதரவாக கல்வி முறையை மாற்றுகின்றனர். அனைத்து துறைகளிலும் அவர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
அரசியல் சட்டத்தை மாற்றுவதில் பா.ஜ., உறுதியாக உள்ளது. நாட்டின் ஜனநாயகத்தை அமலாக்கத்துறையையும் சி.பி.ஐ.,யையும் வைத்து முடக்க நினைக்கின்றனர். இவை பிரதமரின் சொத்து கிடையாது. இவற்றை அவர் விருப்பத்துக்கு ஏற்றார் போல பயன்படுத்த எந்த தகுதியும் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து