அ.தி.மு.க.,வுக்கு 3வது இடம் தான்: டி.டி.வி.தினகரன் கணிப்பு
"என்.டி.ஏ., வந்துவிடக் கூடாது என்பதால் இரட்டை இலையைக் காட்டி ஓட்டுகளைப் பிரிக்க நினைக்கிறார்கள். இந்த தேர்தலில் அ.தி.மு.க., மூன்றாவது இடத்துக்குப் போகும்" என, அ.ம.மு.க., பொதுச்செயலர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் டி.டி.வி.தினகரன் கூறியதாவது:
தேனி மாவட்டத்துடன் 25 ஆண்டுகளாக எனக்கு பிணைப்பு இருக்கிறது. போடியில் ஜெயலலிதா போட்டியிட்டபோது வந்தேன். 2004 லோக்சபா தேர்தலில் தமிழகம் முழுவதும் எங்கள் கூட்டணி பின்தங்கியிருந்தாலும் 21 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தேன்.
ஆனால், அடுத்த ஒரே மாதத்தில் ராஜ்யசபா எம்.பி., ஆக என்னை டில்லிக்கு அனுப்பி வைத்தார். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் உறவினராக நினைத்துப் பழகி வருகிறேன். அதனால் தான் மீண்டும் வரும்போது, ஒவ்வொருவரின் வீட்டிலும் நான் இருப்பதை உணர முடிகிறது.
எம்.பி., ஆக இருந்தபோது எத்தனையோ பேரின் படிப்புக்காக உதவி செய்திருக்கிறேன். ஜெயலலிதாவிடம் கூறி முதல்வர் கோட்டாவில் மருத்துவக் கல்லூரி இடங்களை வாங்கிக் கொடுத்திருக்கிறேன். இதைச் சொல்லிக் காட்டுவதற்காக வரவில்லை.
மக்களுக்கு சேவை செய்ய ஜெயலலிதா எனக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தார். ஓட்டுகளை பணம் கொடுத்து வாங்குவதில் எனக்கு உடன்பாடில்லை. கடந்த முறை ஆண்டிப்பட்டியில் டோக்கன் கொடுத்தவர்களை தடுத்து நிறுத்தினேன்.
ஓட்டுக்கு 300, 500, 1000 ரூபாய் என விலை பேசுவதில் எனக்கு விருப்பமில்லை. ஓட்டுக்குப் பணம் என்ற தவறு நடந்தால் நாளை அதுவே ஊழலுக்கு காரணமாகிவிடும். அதற்கு நான் இடம் கொடுக்க மாட்டேன்.
தேனியில் விவசாயத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பில்லாமல் விமான நிலையம் கொண்டு வர முயற்சி செய்வேன். நானும் ஒரு விவசாயியின் மகன் தான். இயற்கையை பாதுகாப்பதில் உறுதியாக இருப்பேன். 'இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பேன்' என்ற வாக்குறுதியையும் கொடுத்திருக்கிறேன்.
மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆவார். தொகுதிக்கான வளர்ச்சி என்பதால் மத்திய அரசும் செய்வதற்குத் தயாராக இருக்கிறது. இங்கும் ஒரு விமான நிலையம் வர வேண்டும் என விரும்புகிறேன். இயற்கை வளத்துக்கோ விவசாயத்துக்கோ எந்த பாதிப்பும் இல்லாத வகையில் தொழிற்சாலைகளையும் திட்டங்களையும் கொண்டு வருவேன்.
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வத்துக்காக 3 இடங்களில் பிரசாரம் செய்தேன். அவருக்கு அது புதிய பகுதி. என்னுடைய பிரசாரத்துக்கு வரக் கூடாது என்ற எண்ணம் அவருக்கு இல்லை. அவரது அணியை சேர்ந்தவர்கள் எல்லாம் தேனியில் சிறப்பாக உழைக்கிறார்கள். நாள்கள் குறைவாக இருந்ததால் தீவிர பிரசாரத்தில் இருக்கிறார்.
தசரதனின் கட்டளையை ஏற்று ராமர் வனவாசம் போனார். ஜெயலலிதா கூறிய பிறகு நானும் தேனிக்கு போகவில்லை. அவர் என்னை நீக்கியது உண்மை தான். அதற்காக காரணத்தை சொல்ல விரும்பவில்லை.
இவர்களைப் போல எதையும் திருட்டுத்தனமாக செய்வதில்லை. அரசியல்ரீதியாக மட்டுமே இந்தப் பகுதிக்கு நான் வரவில்லை. மற்றபடி, இதர நிகழ்ச்சிகளில் எல்லாம் பங்கெடுத்து வந்தேன்.
நான் யாரையும் போட்டியாளராக நினைக்கவில்லை. இந்தப் பகுதி மக்கள் என் சுவாசத்துடன் கலந்தவர்கள். அதில் எனக்கு 100 சதவீத நம்பிக்கை உள்ளது. என்னை தேனி மக்கள் அரசியல்வாதியாக பார்ப்பதில்லை. உண்மையாக கடவுள் மீது நம்பிக்கை இருப்பவர்களுக்கு பயம் அவசியமில்லை.
2026 சட்டசபை தேர்தலிலும் எங்கள் கூட்டணி மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அப்போது, தகுதியான சுயநலமில்லாத மக்கள் நலனில் ஈடுபாடு உள்ள ஒருவரை முதல்வராக ஒரு மனதாக தேர்வு செய்வோம்.
அதை மற்ற கட்சிகளும் ஏற்றுக் கொள்வார்கள். புதிதாக ஒருவரைக் கூட இறக்குமதி செய்யலாம். 2026 தேர்தலுக்குப் பிறகு ஊழலற்ற ஆட்சியை என்.டி.ஏ., கொடுக்கும். அது மக்களுக்கான ஆட்சியாக இருக்கும்.
அண்ணாமலை கூறியபடி, தினகரன் என்றால் அதில் பன்னீர்செல்வம் இருப்பார். எங்கள் இருவரையும் அவர் சகோதரர்களாக பார்க்கிறார். மக்கள் விரும்பக் கூடிய நல்ல மனிதராக பன்னீர்செல்வம் இருக்கிறார்.
தமிழக மக்கள் போதை வியாபாரத்துக்கு எதிராக கோபத்தில் உள்ளனர். தி.மு.க.,வுக்கு எதிர்ப்பலை இருக்கிறது. என்.டி.ஏ., வந்துவிடக் கூடாது என்பதால் இரட்டை இலையைக் காட்டி ஓட்டுகளைப் பிரிக்க நினைக்கிறார்கள். மக்கள் தெளிவாக வாக்களிப்பார்கள். இந்த தேர்தலில் அ.தி.மு.க., மூன்றாவது இடத்துக்குப் போகும்.
பொதுசிவில் சட்டத்தை நேரு காலத்திலேயே கொண்டு வர முயற்சி எடுத்தார்கள். இதற்காக அம்பேத்கர் உள்பட அனைத்து தலைவர்களும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
சி.ஏ.ஏ., என்பது யாரின் குடியுரிமையும் பறிக்க வந்த சட்டம் அல்ல. இந்தியாவில் வாழும் பெரும்பான்மை, சிறுபான்மை சமூகத்தினரின் குடியுரிமையைப் பறிக்கும் சட்டம் அல்ல.
அதை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. திராவிட அரசியல் என்ற பெயரால் பிழைப்பு நடத்துகிறவர்கள் இதைச் செய்கிறார்கள். ஓர் அரசைக் கலைப்பதற்கான 356 சட்டப்பிரிவுக்கு பா.ஜ., எதிரானது.
ஒரே செலவில் தேர்தலை நடத்தி முடிப்பதற்காக 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தைக் கொண்டு வர உள்ளனர். அது எப்படி சாத்தியம் என்பதை ஆலோசித்து முடிவெடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து