ஓட்டு எண்ணிக்கை; முழு வீச்சில் தயாராகும் அதிகாரிகள்
திருப்பூர்: திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லுாரி ஓட்டு எண்ணிக்கை மையம், ஓட்டுகளை எண்ணுவதற்குத் தயாராகி வருகிறது. மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் முழுவீச்சில் பணி மேற்கொண்டுள்ளனர்.
ஓட்டு எண்ணிக்கை தலைமை முகவர்கள், முகவர்களுக்கான அடையாள அட்டை, மாவட்ட தேர்தல் பிரிவில் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆறு சட்டசபை தொகுதி முகவர்களுக்கும், ஆறு வெவ்வேறு வண்ண அடையாள அட்டை வழங்கப்படுகிறது. ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், ஓட்டு எண்ணிக்கைக்கான அனைத்து பணிகளையும், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் முழுவீச்சில் மேற்கொண்டுவருகின்றனர்.
ஓட்டு எண்ணிக்கைக்காக, 120 நுண்பார்வையாளர்; 102 ஓட்டு எண்ணிக்கை மேற்பார்வையாளர்; 102 உதவியாளர்; கன்ட்ரோல் யூனிட்களை ஸ்ட்ராங் ரூமிலிருந்து ஓட்டு எண்ணிக்கை அரங்கிற்கும்; ஓட்டு எண்ணிக்கை முடிந்த யூனிட்களை மீண்டும் ஸ்ட்ராங் ரூமுக்கு எடுத்துச்செல்லும் பணிகளுக்காக, தொகுதிக்கு 50 பேர் வீதம் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓட்டு எண்ணிக்கையை கண்காணிப்பதற்காக, தலைமை முகவர், முகவர், தபால் ஓட்டு முகவர் என, ஒவ்வொரு வேட்பாளரும் 98 முகவர்களை நியமித்துள்ளனர்.மொத்தம் 13 வேட்பாளர்கள், 1274 முகவர்களை நியமித்துள்ளனர். ஓட்டு எண்ணிக்கையில் பங்கேற்கும் தலைமை முகவர்கள், முகவர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை தயாராகியுள்ளது.
ஆறு சட்டசபை தொகுதி முகவர்களுக்கும், வெவ்வேறு நிறங்களில் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. திருப்பூர் வடக்கு தொகுதி முகவர்களுக்கு இளம் பச்சை; திருப்பூர் தெற்கு வெளிர் பிங்க்; பெருந்துறைக்கு இளஞ்சிவப்பு; பவானிக்கு மஞ்சள்; அந்தியூருக்கு நீலம்; கோபிக்கு அடர் பிங்க் நிற அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு இளம் மஞ்சள் நிறத்தில் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. கலெக்டர் அலுவலக தரைதளத்தில் செயல்படும் தேர்தல் பிரிவில், நேற்று முதல், ஓட்டு எண்ணிக்கை முகவர்களுக்கான அடையாள அட்டை வழங்கப் பட்டுவருகிறது. முகவர்கள், அடையாள அட்டை விவரங்களை சரிபார்த்து, வாங்கிச்செல்கின்றனர்.
வாசகர் கருத்து